* தமிழக முதல்வர் கருணாநிதி யோசனை
இலங்கையில் மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினர் சமாதானப் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை இந்திய மத்திய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி யோசனை தெரிவித்திருக்கிறார்.
இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இந்திய மத்திய அரசாங்கம் ஈடுபட வேண்டும் . மோதலில் ஈடுபடும் தரப்பினரை சமாதானப்பேச்சில் பங்கேற்கச் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
பேச்சுவார்த்தைகள் பயனுள்ளதாகவும் பொருத்தமான அரசியல் தீர்வை வெளிக்கொணர்வதாகவும் அமைவதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் `ரைம்ஸ் ஒவ் இன்டியா' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
1989 இல் வி.பி.சிங்கின் ஆட்சிக் காலத்தில் தமிழக முதலமைச்சராக இருந்த காலத்தில் புலிகளுடன் இந்திய மத்திய அரசின் சார்பில் கருணாநிதி பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
1991 இல் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையையடுத்து இலங்கை இனநெருக்கடி தொடர்பாக இந்தியா வெறும் அவதானிப்பாளராகவே இருந்து வந்தது.
நேரடிப் பங்களிப்பை வழங்காவிடினும் திரைமறைவில் பங்களிப்பினை மேற்கொண்டு வந்தது.
ஆயினும் , இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் மத்தியஸ்தராக செயற்படுமாறு விடுக்கப்பட்ட அழைப்புகளுக்கு புதுடில்லி பதில் அளிக்காமல் பேச்சுவார்த்தை நடத்துமாறு வலியுறுத்தி வந்தது.
அத்துடன் இலங்கையின் இன நெருக்கடிக்கு இராணுவத்தீர்வு சாத்தியமில்லை எனவும் ஐக்கிய இலங்கைக்குள் சகல சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வைக் காணுமாறும் திரும்பத் திரும்பக் கூறிவருகிறது.