மன்னார் பிரதேசத்தில் அரச படையினர் மேற்கொண்டு வரும் பிரதேச விடுவிப்புக்கான தீவிர தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மன்னாரில் புலிகளின் பிடிக்குள்ளிருந்த பெரும் பரப்பிலான பிரதேசங்களை அரச படையினர் மீட்டு விட்டதாகவும் இதைத் தொடர்ந்து குறித்த பிரதேசங்களிலிருந்த தமிழர்கள் புலிகளிடமிருந்து பெருந்தொகையில் தப்பியோடி வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பேசாலைப் பிரதேசத்தில் புலிகளால் கடத்தப்படவிருந்த நான்கு பேர் பேசாலை கடற்படை முகாமில் கடந்தவாரம் சரணடைந்துள்ளனர். இவர்கள் தெரிவித்திருக்கும் தகவல்களுக்கேற்ப படுதோல்வியடைந்து பின்வாங்கிச் செல்லும் புலிகள் அப்பிரதேசத்திலுள்ள தமிழர்களையும் தமது யுத்த நடவடிக்கைகளுக்காக கடத்திச் செல்வதாகவும் இவ்வாறு தம்மைக் கடத்திச் செல்ல புலிகள் பலதடவை முயன்றதாகவும் இதைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்து தப்பியோடி வந்ததாகவும் கூறியுள்ளனர். மேலும் இவ்வாறு புலிகள் இயக்கத்தினர் கடத்த வரும்போது மறுக்கும் தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் மோசமாக அடித்து வதைக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது பேசாலை கடற்படை முகாமில் சரணடைந்த நான்கு பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 வயதுக்கும் 34 வயதுக்கும் உட்பட்டவர்கள் எனவும் அவர்களில் ஒருவர் பெண் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தெரிவித்த தகவல்களின்படி புலிகள் இயக்கத்தினர் பின்வாங்கிச் செல்லும்போது தமது படையில் சேர்ப்பதற்காகப் பொது மக்களையும் பலாத்காரமாகக் கடத்திச் செல்வதாகத் தெரிய வந்துள்ளது.
லங்காதீப: 16/04/2008