நா.பிரதீபராஜா
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இலங்கையின் கிழக்குப் பகுதி மற்றும் வட பகுதிகளிலும் தென்னிந்தியாவின் தமிழ் நாட்டின் கரையோர, தென்பகுதிகளிலும் வழமைக்கு மாறாக அதிகளவு மழை வீழ்ச்சி கிடைத்துள்ளது. இலங்கையின் கிழக்குப் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினாலும், ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தமது வீடுகளை இழந்து இடம் பெயர்ந்துள்ளதுடன், இப்பிரதேசத்தின் பயிர்ச் செய்கைப் பொருளாதார நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணக் குடாநாட்டில் கத்தரி, புகையிலை, வெங்காயம் போன்ற மரக்கறிச் செய்கையிலும், வடக்கு, கிழக்கின் பல பகுதிகளில் சிறுபோக நெற்செய்கை நடவடிக்கையிலும் இது கணிசமான அளவு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் கருத்துப்படி, கடந்த ஜனவரி முதலாந்திகதியிலிருந்து மார்ச் மாதம் பத்தொன்பதாம் திகதி வரை யாழ்ப்பாணக்குடாநாட்டில் கிடைத்த 210.33 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியில் 90 வீதமானவை கடந்த 12.03.2008 தொடக்கம் 19.03.2008 வரையான காலத்தில் கிடைத்தது என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மூன்று நாட்களில் கிடைத்த மழை வீழ்ச்சியை நோக்கும் போது யாழ்ப்பாண மாவட்டத்தின் சராசரி மழை வீழ்ச்சியாக கடந்த 17 ஆம் திகதி 14.4 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், 18 ஆம் திகதி 24.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், 19 ஆம் திகதி 24.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் கிடைத்துள்ளது.
இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் வடகீழ்ப்பருவப் பெயர்ச்சிக் காற்றினாலேயே (டிசம்பர்-பெப்ரவரி) அதிக மழையினைப் பெறுகின்ற அதேவேளை ஒருங்கல் மேற்காவுகைக் காலங்களிலும் (மார்ச்-ஏப்ரல்) குறிப்பிடத்தக்களவு மழைவீழ்ச்சியைப் பெறுகின்றன. மார்ச், ஏப்பிரல் மாதங்களை உள்ளடக்கிய முதலாவது ஒருங்கல் மேற்காவுகைக் காலத்தில் அயன இடை ஒருங்கல் வலயத்தின் மத்திய கோட்டினை அண்மித்த, வளிமண்டலப் பகுதிகளினூடான நகர்வு, மாறன் மண்டலத்தில் உறுதியற்ற வளிமண்டல நிலைமைகளைத் தோற்றுவிப்பதுடன் இடிமின் னலுடன் கூடிய மழைப்பொழிவினையும் ஏற்படுத்துகின்றது.
மார்ச் மாதத்தின் முற்பகுதியில் காணப்பட்ட தொடர்ச் சியான உயர் வெப்பநிலையும் அதனுடனிணைந்த அமுக்க வீழ்ச்சியும் (இது 1013?ஞ இற்கு குறைவாக இருத்தல் யாழ்ப்பாணக்குடாநாட்டில் கடந்த 19 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு 1010 ஆகவும், மாலை 5.30 மணிக்கு 1006?ஞ ஆகவும், இரவு 8.30 க்கு 1012?ஞ ஆகவும் சராசரியாக 1012.6?ஞ ஆகவும் 18ஆம் திகதி சராசரியாக 1012?ஞ ஆகவும் காணப்பட்டது என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது) திரண் மழை முகில்களின் செறிவான உருவாக்கமும், ஈரவளித்திணிவின் நகர்வும், தொடர்ச்சியான உயர் மழை வீழ்ச்சிக்கு அடிப்படையாக அமைந்துள்ளன.
அயன இடைஒருங்கல் வலயம் மத்திய கோட்டுத் தாழியில் அயன வியாபாரக் காற்றுக்களின் திணிவுகள் ஒருங்குகின்ற பகுதியாக காணப்படுவதனால் செறிவான மழை வீழ்ச்சியை அளிப்பதாக இருக்கின்றது. அயன இடை ஒருங்கல் வலயத்தின் அசைவின் போது ஏற்படும் அயனக் குழப்பங்களும், அமுக்க வேறுபாடுகளும், மழையை தோற்றுவிக்கின்றன. இத்தகைய ஒரு நிலைமையே இலங்கைக்கு வட கிழக்குத் திசையில் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டு தற்போது கிடைக்கும் அதிக மழை வீழ்ச்சிக்கு அடிப்படையாகும். இந்த இடைஅயன ஒருங்கல் வலயத்தின் வட எல்லை, 25 பாகை வட அகலக்கோடாகவும், தென்னெல்லை 15 பாகை தென்னகலக்கோடாகவும் காணப்படுகின்றது. இது மத்திய கோட்டுக்கு வடக்கே காணப்படும் போது வட ஒருங்கல் வலயம் எனவும் தெற்கே காணப்படும் போது தென் ஒருங்கல் வலயம் எனவும் அழைப்பர்.
எவ்வாறாயினும் தற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள மழை வீழ்ச்சி நிலைமை தொடர்ந்து நீடிக்காது. இந்நிலைமை அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் மாற்றமடையலாம். தற்போதுள்ள அமுக்க நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டு நிலைமை சீராகும் போது மழைவீழ்ச்சி படிப்படியாக குறைவடையும் அதேவேளை வெப்பநிலை அதிகரிப்புடன் கூடிய காலநிலை நிலைமை தோன்றும். மேலும் இந்நிலமை சில வருடங்களுக்கு ஒரு முறையே தோன்றும் எனலாம். ஏனெனில் இத்தன்மைகள் தோன்றுவதற்குரிய வாய்ப்பான சூழ்நிலைகள் மிக அரிதாகவே தோன்றும். எவ்வாறாயினும் தற்போது கிடைக்கும் மழையினால் பொருளாதார ரீதியில் நன்மைகளை விட தீமைகளே அதிகம் ஆகும்.