Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 02, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
பேரினவாத உள்நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான ஒரு கருவியே கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்
[02 - April - 2008] [Font Size - A - A - A]
கிழக்கு மக்களுக்கு எந்த நன்மையும் வராது என்கிறது புதிய ஜனநாயகக் கட்சி எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் மகிந்த சிந்தனை ஆட்சியின் பேரினவாத உள்நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான ஒரு கருவியாகவே முன்னெடுக்கப்படுகிறது. தேசிய இனப்பிரச்சினை இருந்து வருவதை நிராகரித்து யுத்தம் முன்னெடுக்கப்படுவதை வலியுறுத்தியே இத் தேர்தல் நடாத்தப்படுகிறது.

வடக்கு கிழக்குத் தமிழ் மக்களைப் பிரிக்கவும் தமிழ்-முஸ்லிம் மக்களிடையே மோதல்களை உருவாக்கவும் இத் தேர்தல் பயன்படப் போகின்றது. ஆதலால் அர்த்தமற்ற இக் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் எமது புதிய- ஜனநாயகக் கட்சி எவ்விதத்திலும் பங்கு கொள்ளவில்லை.

இவ்வாறு புதிய ஜனநாயகக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவ் அறிக்கையில்;

அரசியல் தீர்வுக்குரிய நியாயமான யோசனைகள் எதுவும் உருப்படியாக முன்வைக்கப்படாது யுத்தத்தை மும்முரமாக்கி நிற்கும் சூழலில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடாத்துவது மக்கள் மீதான அரசியல் ஏமாற்றும் திசை திருப்பலுமாகும்.

வடக்கு, கிழக்கில் இயல்பு வாழ்வும் ஜனநாயகமும் மனித உரிமைகளும் இல்லை. அதேவேளை யுத்தத்தாலும் கடல்கோள் அழிவுகளாலும் பாதிக்கப்பட்ட கிழக்கு மக்களுக்குரிய புனரமைப்பும் புனர்வாழ்வும் மீள் குடியமர்வும் உரியவாறு முன்னெடுக்கப்படவில்லை. ஆயுத இயக்கங்களின் அச்சுறுத்தல்கள், அடாவடித்தனங்கள் மத்தியிலேயே கிழக்கு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அரசாங்கப் படைகளின் அடக்குமுறைகள் அங்கு தொடர்கின்றன. அத்துடன் தமிழ் முஸ்லிம் மக்களிடையேயான உறவுகள் சீர் குலைக்கப்பட்டு மோதல்கள் வலுப்படக்கூடிய சூழலை இத் தேர்தல் தோற்றுவித்து விடுமோ என அஞ்சப்படுகிறது.

வடக்கிலிருந்து கிழக்கு பிரிக்கப்பட்ட நிலையிலும் தமிழ் முஸ்லிம் உறவுக்குரிய அடிப்படைகள் தோற்றுவிக்கப்படாத சூழலிலும் இத் தேர்தல் நடாத்தப்படுகிறது.

தேசிய இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வு முன்வைக்கப்படாது வடக்கு நோக்கிய யுத்தம் முனைப்பாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கிழக்கில் நடத்தப்படும் மாகாணசபைத் தேர்தல் பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கான ஒரு நடவடிக்கையே தவிர வேறு எதுவும் இல்லை.

இதில் பங்கு கொள்வதால் கிழக்கு மக்களுக்கோ அன்றி தமிழ், முஸ்லிம் மக்களுக்கோ பயன் ஏதும் ஏற்படப் போவதில்லை. அதேவேளை சிங்கள மக்கள் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி வாழ்க்கைச்செலவு அதிகரிப்பு என்பனவற்றிலிருந்து திசை திருப்பப்படவும் அதன்மூலம் யுத்தத்திற்கு ஒரு அங்கீகாரம் பெறவும் இத் தேர்தல் அரசாங்கத்திற்குப் பயன்படப் போகின்றது என்பதையே எமது கட்சி சுட்டிக் காட்டுகின்றது என்று செந்திவேல் தெரிவித்திருக்கிறார்.

Email this page Your Opinion Print this page
நல்லாட்சி பற்றி அரசாங்கம் சற்று சிந்திக்க வேண்டும்
பேரினவாத உள்நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான ஒரு கருவியே கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்
அண்மைக்கால மழை பொழிவும் அதற்கான காரணங்களும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com