வ. திருநாவுக்கரசு
இஸ்ரேலுக்கு விஜயம் செய்த முதலாவது இலங்கைப் பிரதமர் என்ற பெருமை இரத்னசிறி விக்ரமநாயக்கவையே சாரும். அங்கு அவர் இஸ்ரேலிய பிரதமர் ஒல்மேட், வெளிநாட்டமைச்சர் பறக் மற்றும் ஜனாதிபதி சிமொன் பெரெஸ் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். வெளிநாட்டமைச்சருடனான சந்திப்பின் போது, பலஸ்தீனர்களைச் சாடியிருந்தார். அதாவது பலஸ்தீனர்கள்தான் முதன்முதலாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும் புலிப் பிரிவினருக்கு பயிற்சியளித்ததாக வெளிநாட்டமைச்சரிடம் குற்றம் சுமத்தியிருந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன. மேலும், விடுதலைப் புலிகள் அல்ஹைடா, தலிபான்கள் மற்றும் கேர்டிஸ்தான் போராளிகள் அமைப்புகளை ஒத்தவர்கள் அல்லது அவற்றுடன் தொடர்புடையவர்கள் என பிரதமர் ஒல்மேட்டிடம் கூறியுள்ளதாகவும் அறியப்படுகிறது. எவ்வாறாயினும் இஸ்ரேலிடமிருந்து ஆயுதங்கள் கொள்வனவு செய்வதற்கு மேற்கொண்ட பிரயத்தனம் பலிக்கவில்லையென்றும் அறிக்கைகள் கூறுகின்றன.
பலஸ்தீன விஜயம்
பிரதமர் விக்ரமநாயக்க பின்பு பலஸ்தீனத்திற்குச் சென்று ஜனாதிபதி முஹமட் அப்பாசைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அமரத்துவமடைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி யசீர் அரபாத்தின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தியுமுள்ளார். அரபாத்தின் காலத்தில் இலங்கைத் தமிழ் போராளிகள் ஆரம்ப கட்டங்களில் பலஸ்தீனத்தில் ஆயுதப் பயிற்சி பெற்று வந்தது பகிரங்க இரகசியமாகும்.
விடுதலைப் புலிகளையும் வேறுசில வெளிநாட்டு அமைப்புகளையும் தொடர்புபடுத்தி பிரதமர் விக்ரமநாயக்க தனது இஸ்ரேலிய விஜயத்தின் போது குறிப்பிட்டது போலவே முன்னாள் வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்கா சென்றிருந்தபோது ராஜாங்க செயலாளர் கொண்டலீசா ரைஸிடம் கூறிவைத்தவர். இவ்வாறான கூற்றுக்கள் மற்றும் "பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம்" என்பது தொடர்பாக சில பிரபல்யமான பிரமுகர்கள் கூறியுள்ளதைப் பார்ப்போம்.
அ. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அல்ஹைடாவுக்கும் இடையில் வேறுபாடு உண்டு என இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் றேயிநொற் வான் டிக் 17-02-2008 "சன்டே லீடர்" பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியொன்றில் கூறியிருந்தார். அதாவது அல்ஹைடாவானது சவூதி அரேபிய இராச்சியத்திற்கும் அமெரிக்கா அடங்கலாக பல நாட்டு அரசாங்கங்களுக்கும் எதிராகப் போர் தொடுத்திருந்தது. அல்ஹைடாவினர் தமது பிராந்தியத்திற்கு வெளியேயும் பல இலக்குகள் மீதும் தாக்குதல்கள் நடத்தி வந்துள்ளனர். எனவே, அல்ஹைடாவின் குறிக்கோள்களை விடுதலைப் புலிகளின் குறிக்கோளுடன் ஒப்பிட முடியாது. ஜிஹாட் மூலம் மேற்கு நாடுகளின் பிடியிலிருந்து இஸ்லாமிய அரசுகளைக் காப்பாற்றுவதே அல்ஹைடாவின் குறிக்கோளாகும். ஆனால், விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை தமக்கு மாற்று வழி எதுவுமற்ற நிலையில் ஈழம் எனும் தனி அரசை அமைப்பதற்குப் போராடுவதாக விடுதலைப் புலிகள் கூறுகின்றனர் என தூதுவர் வான்டிக் குறிப்பிட்டுள்ளார்.
ஆ. எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்குப் போட்டியிலீடுபட்டிருப்பவர்களாகிய பறக் ஒபாமா மற்றும் ஹிலாரி றொதாம் கிளின்ரன் கூறிவைத்த கருத்துக்கள் இலங்கை அரச தரப்பினரால் சற்று கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியவையாகும். "இலங்கையில் இடம்பெற்றுக் கொண்டிருப்பது பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்றழைக்க முடியாது. அது ஒரு சிவில் (உள்நாட்டு) யுத்தமாகும். மற்றும் இலங்கை மக்கள் எல்லோருமே காட்சிக்கு ஒரேமாதிரியானவர்களாய் தோன்றுகின்றனராயினும் வெவ்வேறு இன, மத மக்கள் கைகோர்த்து பயணிக்க முடியாத நிலைமை காணப்படுகிறது" என ஒபாமா கூறியுள்ளார் என்பதை நாம் முன்னரும் பார்த்துள்ளோம்.
அடுத்ததாக பயங்கரவாத அமைப்புகள் என முத்திரை குத்தப்படும் எல்லா இயக்கங்களையும் ஒரே அளவுகோல் கொண்டு இனங்காண முடியாது. உதாரணமாக இலங்கையில் விடுதலைப் புலிகள், ஸ்பெயினில் "பாஸ்க்" பிரிவினைவாதிகள் மற்றும் அல்ஹைடா அமைப்பினை எடுத்துக் கொண்டால் அவற்றின் அடிப்படை நோக்கங்கள் மற்றும் வரலாற்றுப்பின்புலங்களைப் பொறுத்து வெவ்வேறு அணுகுமுறைகள் தேவையென்ற வாறாக ஹிலாரி கிளின்ரன் தனது தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் மத்தியில் வழங்கிய செவ்வியொன்றில் குறிப்பிட்டதை அல்லது அதுபோன்ற அபிப்பிராயங்களை இலங்கை அரச தரப்பினர் ஆவேசப்படாமல் உணர்வுபூர்வமாக உள்வாங்க வேண்டும். பொறுமையுடன் அலசி ஆராய வேண்டும். மாறாக, அண்மைக் காலத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு தமது அவதானிப்புகளைப் பகிரங்கப்படுத்திய ஐ.நா. அதிகாரிகளை புலிகளுக்குச் சார்பானவர்கள், பயங்கரவாதி, பிசாசு என்றெல்லாம் வசைபாடுவது நாட்டுக்கு கேடுவிளைவிக்குமே ஒழிய எதுவித நன்மையையும் கொண்டுவரப்போவதில்லை.
வீரக்கோன் வெளிப்படுத்தியுள்ள விசித்திரம்
இச்சந்தர்ப்பத்தில் காணக்கூடிய விசித்திரமொன்று என்னவென்றால், வெள்ளைமாளிகையிலிருந்து ஜனாதிபதி புஷ் விரைவில் வெளியேறுவது 3 ஆவது உலக நாடுகளுக்கு குறிப்பாக இலங்கைக்கு பாதகமான நிலைமையைத் தோற்றுவிக்குமென மூத்த ஊடகவியலாளர் காமினி வீரக்கோன் கருத்து வெளியிட்டிருப்பது ஆகும். வீரக்கோன் "த ஐலண்ட்" பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவரும் தற்போது "சன்டே லீடர்" வார இதழுக்கு இரு பத்திகள் எழுதிவருபவரும் ஆவார். வீரக்கோனின் வாதம் என்னவென்றால், ஜனநாயகக் கட்சி அபேட்சகர்கள் இருவரில் எவராவது ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுவிட்டால் "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" தொடர்பாக புஷ் மேற்கொண்டுவரும் கடும் போக்கினை ஒதுக்கிவிட்டு விடுதலை இயக்கங்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் அமைப்புகள் மீது மென்போக்கினைக் கடைப்பிடிக்கும் சாத்தியம் இருப்பதால் அத்தகைய மென்போக்கானது 3 ஆவது உலக நாடுகளுக்கு ஆபத்தானது என்பதாகும். எனவேதான் புஷ் ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேறுவதையிட்டு வீரக்கோன் பெரிதும் கவலை கொண்டுள்ளார்.
புஷ் ஈராக்கை காரணமெதுவுமின்றி காட்டுமிராண்டித்தனமாக ஆக்கிரமித்ததன் காரணமாக பல கோடிக் கணக்கான டொலர் பணத்தை விரயமாக்கி பல்லாயிரக்கணக்கான ஈராக்கியர்களையும் நாலாயிரத்திற்குக் குறையாத அமெரிக்க துருப்புகளையும் கொன்று குவித்து ஈராக்கை அழித்தே விட்டுள்ளார் என்பதை ஏன் வீரக்கோனால் புரிந்துகொள்ள முடியவில்லை?
குறிப்பாக, 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து இலங்கையின் அரசியல் வரலாற்றினை நோக்குமிடத்து கூடுதலான அரசியல்வாதி மட்டுமல்ல கூடுதலான ஊடகத்துறையினரும் கடைப்பிடித்துவந்துள்ள குருட்டுத்தனமான, படுபிற்போக்கான, எதிர்மறையான எதிரும் புதிருமான அணுகுமுறைகளும் மனப்பான்மைகளுமே நாட்டில் இவ்வளவு நீண்டகாலமாக இரத்த ஆறுகள் ஓடிக் கொண்டிருப்பதற்கான ஒட்டுமொத்தமான காரணமாகும்.
விசாரணைக் குழுவும் (COI) மற்றும் சர்வதேச சுயாதீன
பிரபல்ய பிரமுகர்கள் குழுவும் (IIGEP)
16 மனித உரிமை மீறல்கள் சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் நீதியரசர் நிஸ்ஸங்க உடலாகம தலைமையிலான விசாரணைக் குழு முதலாவது ஒருசில சம்பவங்கள் மீது விசாரணைகள் நடத்திவருவது தெரிந்ததே. இந்த விசாரணைக் குழு வெளிப்படைத் தன்மையற்றதாகவும் சர்வதேச நியமங்களைக் கடைப்பிடிக்காமல் செயற்படுவதாகவும் சர்வதேச சுயாதீன பிரபல்ய பிரமுகர்கள் குழுவினர் ஒன்றுக்குப் பல தடவைகள் சுட்டிக் காட்டியிருந்தனர். அவையொன்றும் கிஞ்சித்தும் பொருட்படுத்தப்படாமல் குழுவினர் மீது பகைமை வளர்த்து, குழுவினரைப் பரிகாசிக்கும் போக்கு மேலோங்கிய நிலை தோன்றியிருந்தது.
இந்த விசாரணைக்குழு ஒரு கண்துடைப்பு என்பது நிரூபிக்கப்பட்டுவருவது போலவே காரியங்கள் நடந்தேறுகின்றன. முதலாவதாக, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியங்களுக்கான பாதுகாப்புத் திட்டம் இன்னும் முறைப்படி கொண்டுவரப்படவில்லை. சாட்சியமளிப்பவர்கள் விசாரணைக்குழுவின் முன்னிலையிலேயே சில சட்டத்தரணிகளால் மனவேதனைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். அது தவறு எனச் சுட்டிக்காட்டும் பிரமுகர்களும் சீண்டப்படுகின்றனர்.
சர்வதேச பிரபல்ய குழுவினர் தொடர்ந்து பணியாற்றுவதில் பயனேதுமில்லையென்ற முடிவுக்கு வந்து தாம் விலகப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்ததன் பிரகாரம் 31.03.2008 ஆம் திகதி விடைபெற்றுள்ளனர். இக்குழுவின் அங்கத்தவர்களில் ஒருவராகிய பாரிஸ் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும் நீதிபதியுமாகிய ஜீன் பியர் கொட தெரிவித்திருந்த சில கருத்துக்கள் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியவையாகும்.
(அ) இலங்கையில் மனித உரிமைகளை வலுப்படுத்தவோ பாதுகாக்கவோ மேலதிகமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பங்களிப்புச் செய்ய முடியாதிருக்கிறது. எமது உதவியை இலங்கை விரும்பாத போது எங்களால் என்ன செய்ய முடியும்.
(ஆ) விசாரணைப்பணி மீது நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடியளவு அரசியல் உறுதிப்பாட்டினைக் காணமுடியவில்லை.
(இ) எமக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் சர்வதேச விடயங்களுக்குப் பொருத்தமானவையாய் இருக்கவில்லை.
(ஈ) விசாரணை ஆணைக்குழுவில் மெத்தனப்போக்குக் காணப்பட்டது.
இராணுவதரப்பில் ஆஜரான சட்டத்தரணி கொமின் தயாசிறி மேற்படி கருத்துக்கள் வெளிப்படுத்தியதற்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, அரசியல் உறுதிப்பாடு எனும் அம்சத்தை எடுத்துக்கொண்டால், இலங்கையில் எந்தவொரு அரசாங்கத்திடமும் அரசியல் உறுதிப்பாடு இருந்தது கிடையாது. தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் யுத்தமாக வெடித்ததற்கும் அதுவே காரணமாகும். "மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்" என்றான் பாரதி. இவற்றை நாம் தேடி அலைகின்றோம்.
இலங்கையில் நல்லாட்சி முறைமை மங்கியுள்ளதால் எகுக+ எனும் வர்த்தக சலுகைகள் கைபறியும் நிலை உருவாகி வந்துள்ளது. இத்தகைய பொருளாதார இழப்புகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகவாயினும் நல்லாட்சி பற்றி அரசாங்கம் சற்று சிந்திப்பது நாட்டுக்கு நல்லது.