அதிகரித்துக் கொண்டு செல்லும் அரிசியின் விலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு காலம் கடத்தியேனும் அரசாங்கம் திட்டமிட்டிருப்பதை வருவேற்றேயாக வேண்டியுள்ளது. தமிழ் -சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு அரசாங்கம் குறிப்பிட்ட காலத்துக்கேனும் அரிசி விலையைக் கட்டுப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இன்று அரிசியின் விலை 70 ரூபா முதல் 85 ரூபா வரை சந்தையில் விற்கப்படுகின்றது. அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதைத் தடுக்க கடவுளால் கூட முடியாது என்று அண்மையில் வர்த்தக நுகர்வோர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்த கருத்தையும் நாம் மறந்துவிட முடியாது. இந்த நாட்டு மக்கள் தமது பிரதான உணவுப்பொருளாக அரிசியையே பயன்படுத்துகின்றனர். மூன்று வேளை சோறு சாப்பிட்டுப் பழக்கப்பட்ட மக்களுக்கு இன்று ஒருவேளை சோறு சாப்பிடுவது கூட பெரும்பாடாகவே காணப்படுகின்றது. அந்தளவுக்கு அரிசித் தட்டுப்பாடும் விலை அதிகரிப்பும் ஏற்பட்டிருக்கின்றது.
விவசாய நாடான எமது நாட்டிலிருந்து ஒரு காலத்தில் அரிசி இந்தியா உட்பட வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இன்று உற்பத்தி செய்யப்படும் அரிசி உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்யப்போதாத நிலை ஏற்பட்டுள்ளது. தனியார் வர்த்தகர்கள் அரிசி இறக்குமதியில் ஈடுபட்டிருப்பதால் காலத்துக்குக் காலம் அரிசி விலை அதிகரித்துக் கொண்டே போகிறது. அரசின் நுகர்வோர் அதிகாரசபை சீராக இயங்காமை காரணமாகவே அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. புது வருடப்பிறப்பை எதிர் கொண்டிருக்கும் நிலையில், அரிசியின் விலையை கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள முடிவு இடைக்காலத்தீர்வாக அமையாமல் அதனை நிரந்தரமான திட்டமாக முன்வைக்கவேண்டுமென்பதே மக்களின் பெரும் எதிர்பார்ப்பாகும்.
கடந்த மாதத்தில் பெரும் போக நெல் அறுவடைகாரணமாக அரிசிவிலை சந்தையில் பெருமளவு குறையலாம் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், எதிர்பாராத விதமாக நாடுபூராவும் பெய்த அடைமழை, பெரும்வெள்ளம் காரணமாக நெல் அறுவடை செய்யப்படுவதற்கு முன்னரே அனைத்து வயல்களும் அழிந்து நாசமாகிவிட்டன. இதன் காரணமாக அரிசியின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டு விட்டது. இந்த நிலையில், உடனடியாக இந்தியாவிலிருந்து மீண்டும் அரிசியை இறக்குமதிசெய்து சந்தைப்படுத்த அரசு தீர்மானித்தது. தனியார் வர்த்தகர்கள் அரிசியின் விலையை அதிகரிப்பதைத் தடுக்கும் பொருட்டே கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதன்படி ஒரு கிலோ அரிசியின் விலை 60 ரூபாவைத் தாண்டாதவகையில் பார்த்துக் கொள்ள அரசு தீர்மானித்துள்ளது. இத் திட்டம் வரவேற்கப்பட வேண்டியது தான். ஆனால், இப்படியொரு திட்டத்தை அறிவித்து மக்களை மகிழ்ச்சிப்படுத்திவிட்டால் மட்டும் போதாது. திட்டம் ஒழுங்காக நடைமுறைச் சாத்தியமாக்கப்பட வேண்டும். தனியார் வர்த்தகர்களதும் இடைத்தரகர்களதும் தலையீடுகள் வருவதை தவிர்க்க முடியாது போகலாம். அதற்குத் தலைசாய்த்து அரசு மீண்டுமொரு தடவை பெட்டிப் பாம்பாக அடங்கிப்போகும் நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.
எமது நாட்டின் சந்தைப் பொருளாதாரம் ஒரு சிலரது கைகளில் சிக்கிவிடுவதன் காரணமாகவே நாட்டு மக்களின் கழுத்து நெரிக்கப்படும் அவலம் உருவாகின்றது. சந்தைப் பொருளாதாரத்தை தனி நபர்களின் கைகளிலிருந்து பிடுங்கி விடாமல் எத்தகைய திட்டங்களை முன்வைத்தாலும் அவை வெற்றியளிக்கும் என எதிர்பார்க்க முடியாது. திட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் எழுத்தில் மட்டும் வடித்து விடுவதால் காரியம் முடிந்து விடப்போவதில்லை . அரிசிச் சந்தை தனியார்துறையிடமிருந்து மீட்கப்பட்டு அரிசியை சந்தையில் தாராளமாகக் கிடைக்கச் செய்வதன் மூலமே இத்திட்டத்தில் அரசாங்கம் வெற்றி காண முடியும். பொருளாதார நெருக்கடி மிக்க காலகட்டத்தில் அரசாங்கம் முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்த இந்த வேலைத்திட்டம் மக்களுக்கு உரிய பயனைத்தரக்கூடியதாக அமைய வேண்டுமென்பதே ஒவ்வொருவரதும் எதிர்பார்ப்பாகும். சொல்வதொன்று செய்வதொன்றாக இல்லாமல் சொல்வதையே செய்து முடிக்கும் உறுதிப்பாட்டுடன் அரசு செயற்பட்டால் சுபமாக இருக்கும்.