பாகிஸ்தானிலுள்ள தீவிரவாதிகளுடன் பேச்சுகளை நடத்தத் தயாராக இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் யூசுப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி முஷாரப்பால் நீக்கப்பட்ட நீதிபதிகள் மீண்டும் பதவியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.
பாராளுமன்ற தேசியப் பேரவையில் ஆற்றிய உரையின் போதே இதனைத் தெரிவித்துள்ள கிலானி அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது;
"தீவிரவாதமும், பயங்கரவாதமும் நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்பது நாம் நடத்தும் போர். நம் நாட்டு மக்கள், குழந்தைகள், இளைஞர்கள் என ஏராளமானோரை இழந்துவிட்டோம். இந்நிலை இனியும் தொடரக் கூடாது.
தீவிரவாதத்துக்கு விரைவில் முடிவு கட்டி நாட்டில் மீண்டும் அமைதியை நிலைநாட்டுவதே அரசின் முக்கிய குறிக்கோள்.
தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்காக சிலர் தெரிந்தம், தெரியாமலும் தீவிரவாதப் பாதையைத் தேர்ந்தெடுத்து விடுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் ஜனநாயகப் பாதைக்குத் திரும்ப வேண்டும்.ஆயுதங்களைக் கைவிடும் தீவிரவாத அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருக்கிறது.
அவசர நிலை பிரகடனத்தின்போது பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள். புதிய ஆட்சியில் நீதித்துறையின் சுதந்திரம் முழுமையாக பாதுகாக்கப்படும்.
நாட்டின் பழங்குடியினப் பகுதிகள் நீண்ட காலமாக பின்தங்கிய நிலையில காணப்படுகின்றன. அந்தப் பகுதிகள் பொருளாதார ரீதியாக முன்னேற நடவடிக்கைகள் எடுக்கப்படும். வறுமை, கல்வியறிவின்மை ஒழிக்கப்படும்.இதற்காக சிறப்பு நிதி ஒதுக்கப்படும்.
மேலும் அரசின் முக்கிய துறைகளைக் கவனித்து வரும் இராணுவ அதிகாரிகள் இரண்டு வாரத்தில் அரசிடம் பொறுப்புகளை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.