* கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் ரியூசன் ஆசிரியர்கள்
இலவசப் பாடநூல்கள் மாணவர்களை உரிய முறையில் சென்றடையாமையால் மாதிரி நூல்களை அச்சடித்து ரியூசன் ஆசிரியர்கள் கொள்ளை இலாபம் சம்பாதிப்பதாக பெற்றோர் மற்றும் மாணவர் குற்றம்சாட்டியுள்ளனர்.
அத்துடன் இந்த அநியாயம் குறித்து ஆசிரியர் தொழிற்சங்கங்களும் கல்வியமைச்சும் கண்டு கொள்ளாமல் செயற்படுவது குறித்தும் அவர்கள் தமது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
அரசாங்கப் பாடசாலைகளுக்கான இலவசப் பாடநூல்கள் உரிய முறையில் விநியோகிக்கப்படாமை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதகங்கள் குறித்து அண்மைய காலங்களில் சுட்டிக் காட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாடநூல் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடியைப் பயன்படுத்திய ரியூசன் ஆசிரியர்கள் மாதிரி நூல்களை அச்சடித்து மேற்கொண்டுவரும் கொள்ளை இலாபம் குறித்தும் மாணவர், பெற்றோர் தரப்பிலிருந்து கடுமையான குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.
குறிப்பாக 11 ஆம் தர தமிழ் இலக்கிய மாதிரி நூல்களை பல வர்ணங்களில் அச்சடித்து பாடசாலைகளில் விற்பனை செய்யும் இவ்வாசிரியர்கள் தமது ரியூசன் வகுப்புகளுக்கு மாணவர்கள் தவறாது வரவேண்டுமெனவும் வலியுறுத்துகிறார்களாம்.
11 ஆம் தர இலவச தமிழ் இலக்கிய பாடநூல் இனிமேல் கல்வியமைச்சு வெளியிடாதெனவும் எனவே, தமது மாதிரி நூல்களை வாங்குமாறும் வற்புறுத்தும் இந்த ரியூசன் ஆசிரியர்களுக்கு பல பாடசாலை அதிபர்கள் உதவி செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சில ஆசிரியர்கள் கல்வியமைச்சு பாடசாலைகளுக்கு விநியோகிக்காத பாடநூல் பாடங்களை ரியூசன் வகுப்பில் போதித்து அப்பாடங்களுக்கு மிக அதிகரித்த கட்டணத்தை அறவிட்டு கொள்ளையடிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், ரியூசன் ஆசிரியர்கள் மேற்கொள்ளும் இந்த அநியாயங்களுக்கு எதிராக கல்வியமைச்சு மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மௌனம் காப்பது குறித்து மாணவர்களும் பெற்றோர்களும் தமது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.