* பால்வழங்கும் நிகழ்வில் நிஜாமுதீன் வலியுறுத்தல்
நாட்டின் அனைத்து இனமக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டுமென நாம் விரும்பினால், எமக்குள் இருந்துவரும் இனவாதத்தையும் பிரதேச வாதத்தையும் இல்லாமற் செய்ய வேண்டுமென பிரதி அமைச்சர் எஸ். நிஜாமுதீன் தெரிவித்தார்.
மருதமுனை அல்மனார் வித்தியாலயத்தில் இடம்பெற்ற மாணவர்களுக்கான பால் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதிகரித்துச் செல்லும் மக்களின் நெருக்கடிகள் குறித்து அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்;
நம் நாடு பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருவதை நாம் அறிவோம். இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இவற்றுக்கு மத்தியில் இனவாதம் உச்சக் கட்டத்தை அடைந்திருக்கிறது. ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சகல இன மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டுமாக இருந்தால், எங்கள் மத்தியில் உள்ள இனவாதங்களையும், பிரதேச வாதங்களையும் முதலில் இல்லாமல் செய்ய வேண்டும். பிரதேசவாதங்களை பரப்புவதன் மூலம் அது இனரீதியான பாகுபாட்டை ஏற்படுத்தி இனங்களுக்கிடையில் பிரிவினையையும் பிரச்சினைகளையும் தோற்றுவிக்க வழிவகுக்கும்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் மகிந்த சிந்தனையின் ஊடாக ஒவ்வொரு பெயர்களிலும் வேலைத்திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் போஷாக்குக் குறைந்த மாணவர்களுக்கான போஷாக்குத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் முதல் கட்ட நடவடிக்கையாக பாடசாலை மாணவர்களுக்கு பசும்பால் வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த நிகழ்வு இன்றும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
விலையேற்றங்களினால் குழந்தைகளுக்கு பால்மா வாங்க முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குள் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு நாட்டில் இடம்பெறுகின்ற யுத்தமே காரணமாகும். இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருகின்ற போது தான் விலையேற்றங்கள் குறையும். அதுவரையும் விலையேற்றங்கள் அதிகரிக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இந்த யுத்தத்தில் அகப்பட்டுள்ள பொது மக்களை மீட்டெடுப்பதுவும் சமாதானத்தை ஏற்படுத்துவதும் மக்களின் ஒற்றுமை என்ற பலத்தின் மூலமே சாத்தியமாகும்.
ஆகவே, இந்த நாட்டை ஐக்கியப்பட்ட சமூக நாடாக கட்டியெழுப்புவதற்கு மக்கள் முன்வர வேண்டும். மக்கள் ஐக்கியப்படாமல் பிரிந்து பிரிந்து இனவாதம் பேசப்படுமானால் இந்த நாடு அழிவுப்பாதையை நோக்கிச் செல்வதும் தவிர்க்க முடியாததாகவே இருக்கும் என்றார்.