தோட்டத் தொழிலாளர் சமூகத்துக்குக் கிடைக்கின்ற நன்மைகளைத் தட்டிப் பறிப்பதில் முன்னிலை வகிக்கின்ற மலையக அரசியல் தலைமைகள் குறித்து மக்கள் சிந்திக்க வேண்டுமென்று இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் பெருந்தோட்டப் பகுதி அபிவிருத்திக்கான ஜனாதிபதியின் ஆலோசகருமான எஸ்.சதாசிவம் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத் தோட்டப்பகுதிகளில் தற்காலிக குடில்களில் வாழ்கின்ற ஒரு பகுதியினருக்கு 2001 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிதியை உரியவர்களுக்கு எவ்வாறு பெற்றுக் கொடுப்பது தொடர்பாக மஸ்கெலியா ஷ்ரீ சண்முகநாதர் ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற விளக்கமளிக்கும் கூட்டத்தில் பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் இ.தொ.ஐ. முன்னணியின் உபதலைவர் கணபதி கனகராஜ் உதவிச் செயலாளர் எஸ்.சிவசுந்தரம், தலைவாக்கலை லிந்துலை நகரசபைத் தலைவர் உதயகுமார் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
எஸ்.சதாசிவம் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;
2001 ஆம் ஆண்டு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஆலோசகராக நான் செயற்பட்ட போது, இந்த அமைச்சின் ஊடாக தோட்டப்பகுதி வீடமைப்புக்காக ஒதுக்கப்பட்டிருந்த சுமார் 15 கோடி ரூபா செலவழிக்கப்படாமலிருந்தது. இந்த விடயத்தை அப்போது பதவிவகித்த ஜனாதிபதி சந்திரிகாவின் கவனத்துக்குக் கொண்டு வந்தேன்.
இதன் போது இந்த நிதியை மலையக மக்களுக்கு பயன்பெறும் வகையில் செலவழிக்குமாறு என்னிடம் அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து நுவரெலியா மாவட்ட தோட்டப் பகுதிகளில் தற்காலிக குடில்களின் விபரங்களைத் தோட்ட நிர்வாகங்கள் மூலமாக திரட்டினேன். இவர்களில் சுமார் ஐயாயிரம் பேருக்கு வீடமைத்துக் கொள்வதற்காக தலா 30 ஆயிரம் ரூபா வீதம் மக்கள் வங்கியில் வைப்புச் செய்து உரிய தொழிலாளர் குடும்பங்களுக்கு வங்கிப் புத்தகத்தை கையளித்தோம். இதன்போது மலையகத்தின் அரசியல்வாதிகள் சிலர் இதனை தேர்தல் கால குண்டென்றும், ஏமாற்று வேலை என்றும் கொச்சைப்படுத்தினார்கள். வைப்புப் புத்தகங்களை ஒரு சில அரசியல் வாதிகள் முன்னிலையில் எரியூட்டி மகிழ்ந்தார்கள்.
இதன் பின்பு அரசியலில் மாற்றம் வந்தது தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சை மாறிமாறி பொறுப்பெடுத்த பி.சந்திரசேகரன் முத்துசிவலிங்கம் போன்றோர் மேற்படி வைப்புப் பணத்தை குறிப்பிட்ட தொழிலாளிகள் வீடமைத்துக் கொள்ள பயன்படுத்துவதற்கு முழு மூச்சுடன் இடையூறு செய்தனர்.
இந்த நிதியை மக்கள் பயன்படுத்தினால் சதாசிவத்தின் செல்வாக்கு அதிகரிக்குமென்று அச்சமடைந்தனர்.
குடிசைகளில் மழையாலும் பணியாலும் வெயிலாலும் அல்லலுறுகின்ற தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் நிதிசட்ட திட்டங்களுக்கு ஏற்ப வழங்கப்பட்ட நிதியை எந்த வகையிலும் சரி பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் உச்ச நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்தோம்.
இதற்கு மனித உரிமை இல்லம் எமக்கு பேருதவி செய்தது.
இந்த வழக்கின் தொடர் விசாரணைக்கு பிறகு குறிப்பிட்ட வழக்காளிக்கு வைப்பு பணத்தை வழங்குமாறு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து எமது கட்சியைச் சேர்ந்த வழக்காளி இன்று மக்கள் வங்கியிலிருந்து தனக்குரிய பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். இவருக்கு இந்த நிதியைப் பெற்றுக்கொடுத்தது போல ஏனையவர்களுக்கும் பெற்றுக் கொடுப்பதே எமது அடுத்த கட்ட நடவடிக்கையாகும்.
அத்துடன் உரிய வைப்புத் தொகையையும் அதற்குரிய வட்டியையும் பெற்றுக்கொடுத்தே தீருவோம். எனவே மலையகத்துக்கு உண்மையாக சேவை செய்கின்றவர்கள் யார் என்பதை இன்று மலையக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.