கொழும்பிலிருந்து அவிசாவளை வரை சேவையிலீடுபடுத்தப்படும் களனிவெளி புகையிரத சேவை இரத்தினபுரிவரை விஸ்தரிக்கப்படவுள்ளது.
இதன் ஆரம்பக்கட்டமாக அவிசாவளையிலிருந்து இரத்தினபுரி வரையிலான பழைய 3 அடி புகையிரதப் பாதையை விஸ்தரித்து அது அபிவிருத்தி செய்யப்படுமென இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவரும் அமைச்சருமான ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்ட இணைப்புக்குழுக் கூட்டம் அண்மையில், மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
"கடந்த காலங்களில் கொழும்பிலிருந்து 3 அடி புகையிரதப் பாதை அவிசாவளை, இரத்தினபுரி ஊடாக ஓபநாயக்கா வரை காணப்பட்டது.
நாளடைவில் அந்தப் புகையிரத சேவை கைவிடப்பட்டு, அவிசாவளை நகரம் வரை மட்டுப்படுத்தப்பட்டது.
அதன்பின்னர் அவிசாவளையிலான புகையிரத வீதி புனரமைக்கப்பட்டு தற்போது சாதாரண புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன. தற்போது இந்தச் சேவை இரத்தினபுரி வரை நீடிக்கப்படும்.
ஆரம்பத்தில் கெலியகொடை வரை பழைய புகையிரத வீதியே அபிவிருத்தி செய்யப்படும். அதனைத் தொடர்ந்து இரத்தினபுரிவரை மாற்று பாதை அமைக்கப்படும். இப்பாதை அமைக்கப்படும் போது பல வீடுகள் இடிக்கப்படும். இதற்காக உரியவர்களுக்கு நஷ்ட ஈடும் வழங்கப்படும்" என்றார்.
ஐ.ம.சு.கூ. பிரதேசசபை உறுப்பினர் எம்.ரஞ்சித்குமார உரையாற்றியபோது கூறியதாவது;
"வேவல்வத்தை - தொண்டமான்புரத்திலமைந்துள்ள தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளிலுள்ள மலசலகூடங்களின் குழிகள் நிறைந்து வீதிவழியே பெருக்கெடுத்துள்ளமையால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் காணப்படுகின்றது.
இது குறித்து பலமுறை பலதரப்பினரிடம் முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த மலசல கூடங்கள் நீண்டகாலமாக உடைந்து இதிலுள்ள கழிவுகள் வீதி வழியே பெருக்கெடுத்து ஓடுகின்றன. இதனால், இங்குள்ளவர்கள் பாரிய சுகாதார அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே இது குறித்து உரிய தரப்பினர் ஆவன செய்யவேண்டும்" என்றார்.