* அமெரிக்காவுக்கு இலங்கை தெரிவிப்பு
எதிர் காலத்தில் புரிந்துணர்வுடன் சமநிலை பேணி அறிக்கையை வெளியிட வேண்டுமென அமெரிக்காவை இலங்கை கேட்டுள்ளது.
நாட்டில் கடந்தாண்டு இடம்பெற்ற மனித உரிமை மீறல் தொடர்பில் கடந்த 11 ஆம் திகதி அமெரிக்கா வெளியிட்ட அறிக்கைக்கு இலங்கை அரசு சார்பில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித பொகொல்லாகம கடந்த திங்கட்கிழமை பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு விடுத்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;
`இந்த அறிக்கை குறித்து கடந்த 14 ஆம் திகதி அமெரிக்கத் தூதுவரான ரோபேர்ட் ஓ பிளேக்கை வெளிவிவகார அமைச்சு அழைத்து விளக்கம் கோரியது. இதன் போது கடந்த ஆண்டு நிலவிய சூழ்நிலை மற்றும் மனித உரிமை மீறலுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையென தெரிவித்திருப்பது உண்மைக்குப் புறம்பானது. இதனையிட்டு இலங்கை அரசு கவலை கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தெரித்தார்.
அந்த அறிக்கையில் பல்வேறுபட்ட மீறல்கள், அரசின் பல் வேறு அதிகாரிகளின் ஆசீர்வாதத்தில் இடம்பெறுவதாகவும் கடத்தல்கள் தொடர்பில் பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்காததன் காரணமாக அரசியலமைப்புக்கு விரோதமானதுடன், அடிப்படை உரிமையை மீறும் செயலென தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் இலங்கை மீது குற்றம் சாட்டுவதே நோக்கமென்பது தெளிவு.
இலங்கை அரசியலமைப்பில் மனித உரிமை தொடர்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதுடன், பல்கட்சிகளைக் கொண்டு செயற்படும் ஜனநாயக நாடு கடந்த தசாப்தமாக இலங்கை பயங்கரவாதத்தால் பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பாரிய பாதிப்பை எதிர்கொண்டது. இருந்த போதிலும் இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் கிழக்கு விடுவிக்கப்பட்டு அங்குள்ள மக்கள் ஜனநாயகக் கனியை அனுபவிக்கின்றனர். வடக்கை விடுவித்து ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்த அரசு தற்போது நடவடிக்கையை மேற்கொள்கின்றது.
இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா மற்றும் ஐக்கிய இராச்சியம் உட்பட அமெரிக்கா கூட விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக தடை செய்துள்ளது. அவர்கள் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன், கடந்த இரு வருடத்தில் 4 ஆயிரம் பேரை கொலை செய்துள்ளனர்.
எமது நாட்டின் சகல பிரஜைகளும் எந்த வித வேறுபாடுகளுமின்றி சமத்துவமாக நோக்கப்படுகின்றனர். கடந்தாண்டு மனித அபிவிருத்திச் சுட்டெண்ணில் 17.7 இல் 99 ஆவது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தெற்காசியாவில் இது உயர்ந்த நிலையில் உள்ளது.
இலங்கை ஜெனிவா உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் படி ஆயுதமோதலின் போது மனிதாபிமான சட்டங்களைக் கடைப்பிடித்து வருகின்றது.
விடுதலைப் புலிகளின் ஆயுதக் கடத்தலை நிறுத்துதல் உட்பட அந்த அமைப்பு அதன் முகவரமைப்புகளும் மேற்கொள்ளும் நிதித் திரட்டலை தடுப்பதற்கு அமெரிக்கா உரிய நடவடிக்கை எடுத்ததை இலங்கை மெச்சுகின்றது.
இரு நாடுகளும் ஜனநாயக நாடு என்ற வகையில் மனித உரிமையைப் பாதுகாத்து அபிவிருத்தியடையச் செய்வதற்கு கலந்துரையாடல் மேற்கொண்டு சிநேக பூர்வமாக தமது நிலைப்பாடுகளை பகிர்ந்து கொள்ள முடியும்.
முதலில் இந்த விடயங்களை பூரணமாக அறிந்து சமநிலையுடன் எதிர்காலத்தில் தவறின்றி அறிக்கையை வெளியிட முன்வர வேண்டும்" என அக்கடிதத்தில் அவர் கேட்டுள்ளார்.