நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட டயகம இலக்கம் 2 தமிழ் மகாவித்தியாலய ஆசிரியர்களின் கடந்த மார்ச் மாத சம்பள கொடுப்பனவுகளை கடந்த 24 ஆம் திகதி நுவரெலியா கல்வி பணிமனையிலிருந்து பெற்றுக் கொண்டு தலைமறைவாகிய அப்பாடசாலையின் அதிபரை சேவையிலிருந்து இடை நிறுத்தி வைக்கும்படி மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எஸ்.அருள்சாமி நுவரெலியா கல்வி பணிப்பாளர் கே.கே.டி.சி.டி.அல்விஸுக்கு பணிப்புரை விடுத்துளளார்.
இவ்விடயம் சம்பந்தமாக அமைச்சர் அருள்சாமி தகவல் தெரிவிக்கையில், குறித்த பாடசாலையில் கடமையாற்றும் 30 ஆசிரியர்களின் சம்பளக் கொடுப்பனவான 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை அதிபர் கல்வித் திணைக்களத்தில் பெற்ற பின் அதை ஆசிரியர்களுக்கு வழங்காமல் கடந்த மார்ச் 24 ஆம் திகதியிலிருந்து தலைமறைவாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் என்னிடம் முறையிட்டனர்.
இதனையடுத்து குறித்த அதிபரை உடனடியாக கைது செய்யும்படி அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் கடந்த 30 ஆம் திகதி நானும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களும் முறையிட்டோம். இதனை தொடர்ந்து அக்கரப்பத்தனை பொலிஸார் இவ் அதிபரை கடந்த 31 ஆம் திகதி தேடி சென்ற பொழுது அதிபர் பாடசாலைக்கு வந்திருந்தார். அன்று பொலிஸார் முன்னிலையில் அதிபரால் ஆசிரியர்களுக்கான சம்பள கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.
கடந்த மார்ச் 24 ஆம் திகதி ஆசிரியர்களின் சம்பள பணத்தை பெற்ற அதிபர் 31 ஆம் திகதி வரை பாடசாலைக்கு வருகை தராமல் தலைமறைவிலிருந்ததால் சம்பந்தப்பட்ட அதிபரை சேவையிலிருந்து இடைநிறுத்தி இவரின்,கடந்தகால செயல்பாடுகள் சம்பந்தமாக முழுமையான விசாரணை ஒன்றை நடத்தி தனக்கு இரண்டு வார காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்விப் பணிப்பாளருக்கு உத்தரவு விடுத்திருப்பதாகவும், அருள்சாமி மேலும் தெரிவித்தார்.