* இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கும்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மே மாதம் நடத்தப்படவிருக்கும் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று தீர்மானித்துள்ளது. இந்நிலைப்பாட்டை எடுத்ததற்கான காரணங்களை விளக்கி உத்தியோகபூர்வமாக அறிக்கை ஒன்றை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இன்று புதன்கிழமை வெளியிடும் என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ்த்தேசியப்பிரச்சினைக்கு `வடக்கு, கிழக்கு - தமிழர் தாயகம்' என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே தீர்வு காணப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துமுகமாகவே கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்திருப்பதாக தெரியவருகின்றது.
இந்திய இலங்கை சமாதான உடன்படிக்கையின் படி வடக்கு - கிழக்கு தமிழ் பேசம் மக்களின் பாரம்பரிய தாயகம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தின்படி வடக்கு - கிழக்கு இணைந்த மாகாணம் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தைப் பிரித்து, அதற்கென தனியான தேர்தலை நடத்துவது தமிழ்த்தேசியப் பிரச்சினைக்கு தீர்வான தாயகக் கோட்பாட்டை நிராகரிக்கும் செயலாகவே கருதி தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எடுத்திருப்பதாகத் தெரியவருகிறது.