* 15 படையினர் பலி; 25 பேர் காயம்
மன்னார் இத்திக்கண்டல் பகுதியிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை படையினர் மேற்கொண்ட பாரிய முன் நகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டதில் 15 க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன், 25க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் மேலும் கூறுகையில்,
இத்திக்கண்டலில் இருந்து கறுக்காய் குளம் நோக்கி நேற்று அதிகாலை 5.30 மணியளவில் டாங்கிகளின் பிற்களச் சூடு, ஆட்லறிஷெல் மற்றும் மோட்டார் குண்டுத் தாக்குதலுடன் படையினர் பெருமெடுப்பில் முன் நகர்வை மேற்கொண்டனர்.
இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை தீவிரமாக நடத்தினர். இம் முறியடிப்புத் தாக்குதல் முற்பகல் 11 மணி வரை நடத்தப்பட்டது.
இதனையடுத்து படையினர் பலத்த இழப்புகளுடன் பின் வாங்கினர். இதில் 15 க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். 25 க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்தனர்.
படையினரின் படைக்கலங்கள் மற்றும் வெடிபொருட்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் திருக்கேதீஸ்வரம் பகுதிலிருந்து நேற்றுக் காலை 9 மணிக்கு பாப்பாமோட்டை நோக்கி படையினர் முன் நகர்வு முயற்சியினை மேற்கொண்டனர். இம் முன் நகர்வையும் விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.