* அக்ஷன்பாம் படுகொலை வழக்கில் சாட்சியம்
யோ.நிமல்ராஜ்
மூதூர் பிரதேசம் 2006 ஆகஸ்ட் நான்காம் திகதி இராணுவக் கட்டுப்பாட்டிலேயே இருந்ததாக படுகொலை செய்யப்பட்ட அக்ஷன்பாம் ஊழியர் கூறியதாக ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தவர் கூறினார்.
2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட `அக்ஷன்பாம்' ஊழியர்களின் கொலை தொடர்பான விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது சாட்சியம் அளிக்கையிலேயே சாட்சி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சாட்சி மேலும் தெரிவிக்கையில்;
`படுகொலை செய்யப்பட்ட ஜெயசீலன் `அக்ஷன்பாம்' நிறுவனத்தில் சுகாதார மேம்பாட்டாளராகக் கடமையாற்றினார். இரண்டு வருடத்திற்கு மேலாக மூதூரில் பணியாற்றி வந்தார்.
மூதூரில் 2006 ஆகஸ்ட் முதலாம் திகதி மாலை மோதல்கள் இடம்பெறுவதாக எனக்கு வந்த தொலைபேசி அழைப்பொன்றின் மூலம் அறிந்து கொண்டேன். நான் அவரை ஜூலை 31ஆம் திகதி மூதூர் இறங்குதுறையில் சந்தித்தேன். அன்றும் அவர் மூதூரில்தான் தங்கியிருந்தார்.
இலங்கை இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் மூதூரில் மோதல்களில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தனர். முதலாம் திகதி மாலையில் தான் மூதூரில் மோதல் ஆரம்பித்திருந்தது. மூதூரில் அக்ஷன்பாம் நிறுவனத்தினரின் அலுவலகம் எங்கு அமைந்துள்ளதென எனக்குத் தெரியும்.
இரண்டாம் திகதி மோதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து நான் அக்ஷன்பாம் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தி அவருடன் கதைத்திருந்தேன். மூன்றாம் திகதி வரை அவருடன் கதைக்கக் கூடியதாக இருந்தது.
மூன்றாம் திகதி காலையில் நான் அழைப்பை ஏற்படுத்தி இருந்த போது தமக்கு அங்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்றும் மூதூருக்கு வெளியில் வெடிச்சத்தங்கள் கேட்பதாகவும் கூறினார்.
அன்று மாலை அவர் என்னுடன் தானாக அழைப்பை ஏற்படுத்தி கதைக்கும் போது விடுதலைப் புலிகள் மூதூர் நகருக்குள் வந்து நிற்பதாகவும் மோதல்கள் நடப்பதாகவும் வேறு நிலைவரங்கள் தெரியவில்லை என்றும் தெரிவித்தார். அவர் என்னுடைய வீட்டின் தொலைபேசிக்கே அழைப்பை ஏற்படுத்தி இருந்தார்.
ஆனால், அவர் எந்தத் தொலைபேசியில் இருந்து அழைப்பை ஏற்படுத்தி இருந்தார் என எனக்குத் தெரியாது.
மறுநாள் காலை அதாவது, நான்காம் திகதியும் அவரே எனக்கு தொடர்பை ஏற்படுத்தி கதைத்த போது மூதூர் நகர் இராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தமது அலுவலகத்தை சுற்றிய பிரதேசங்களிலும் இராணுவமே உள்ளதென்றும் அவர் கூறினார்.
ஆனால், அப்போதும் அவர் எந்த தொலைபேசியில் இருந்து கதைத்தார் என்பது எனக்குத் தெரியாதென" சாட்சி மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்றைய இவரின் சாட்சியம் நிறைவடைந்தது. தொடர்ந்தும் இச் சாட்சி, சாட்சி கூறுவாரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.