கல்முனை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியைத் தடைசெய்யக் கோரி மீனவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய ஹர்த்தால் மற்றும் ஆர்ப்பாட்டத்தால் கல்முனை நகரின் இயல்பு நிலை முற்றாகப் பாதிக்கப்பட்டது.
கல்முனைப் பிரதேசத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு சாராருக்கும் அப்பகுதி மீனவர்களுக்குமிடையே சில நாட்களாக ஏற்பட்டிருந்த பிரச்சினை பின்னர் பொலிஸ் நிலையம் வரை சென்று இதற்கு சுமுகத் தீர்வும் காணப்பட்டது.
எனினும், நேற்று முன்தினமிரவு சிலரால் கல்முனை கடற்கரைப் பகுதியில் அமைந்திருந்த மீன்வாடிகள் இரண்டுக்கு தீ வைக்கப்பட்டது.
இதனிடையே இப்பிரச்சினையை வேறு சாரார் கையாள நேரிட்டதுடன், இதனால் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டு மீனவர்கள் அச்சுறுத்தப்பட்டனர். இதனையடுத்தே நேற்று மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் ஹர்த்தாலுக்கும் அழைப்பு விடுத்தனர்.
இதனால், நேற்று கல்முனை மாநகர பிரதேசத்தில் அனைத்து வர்த்தக நிலையங்களும் பாடசாலைகளும் அரச அலுவலகங்களும் வங்கிகளும் மூடப்பட்டதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டதுடன் பொதுப் போக்குவரத்துகளும் இடம்பெறவில்லை.
கல்முனை ஜும்மா பள்ளிவாசலுக்கு அருகில் பிரதான வீதியில் மீனவர்கள் வீதியில் அமர்ந்து வீதி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.