* ஊடகவியலாளர் பாரிய பங்களிப்பை நல்க முடியும்; உயர்ஸ்தானிகர் காதி லுக்மன்
ரொஷான் நாகலிங்கம்
இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அவுஸ்திரேலியா நிதி உதவியூடாக ஒத்துழைப்பு வழங்கிவருவதாகத் தெரிவித்த அந்நாட்டின் உயர்ஸ்தானிகர் திருமதி காதி லுக்மன், இந்த விடயம் குறித்து கொழும்புடன் அவுஸ்திரேலிய அரசு கலந்துரையாடலை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சியளித்து ஆளுமையை அதிகரிக்கும் நோக்கத்துடன் அவுஸ்திரேலிய அரசு 6 மில்லியன் ரூபாவினை கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனித உரிமை கற்கை நிலையத்துக்கு வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகத்தில் இடம்பெற்றபோது கலந்துகொண்டு உரையாற்றிய உயர்ஸ்தானிகர் மேலும் கூறியதாவது;
மனித உரிமையை பாதுகாத்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஆண்டு தோறும் அவுஸ்திரேலியா தனது மனித உரிமைகளுக்கான சிறிய நிதியுதவித் திட்டத்தின் கீழ் ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளில் அங்குள்ள அமைப்பு மூலம் நேரடியாகவும் மாற்று வழிகளிலும் உதவிவருகின்றது.
இலங்கையில் 300க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களுக்கு மனித உரிமை தொடர்பில் அடிப்படை அறிவினை மேலும் அதிகரிப்பது இது தொடர்பில் பொறுப்புடன் அவர்கள் அதனை அறிக்கையிடுதல் மற்றும் ஊடகம் மூலம் மனித உரிமைகள் தொடர்பில் பிரசாரத்தை மேற்கொண்டு சிவில் சமூகத்தை வலுப்படுத்தும் நோக்குடனேயே தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் கற்கை நிலையத்துக்கு நிதியுதவியளித்துள்ளோம்.
மனித உரிமை என்பது இலங்கைக்கு மட்டுமன்றி முழு உலகுக்கும் முக்கியமானது. எமது நிதியுதவி மூலம் ஊடகவியலாளருக்கு பயிற்சிப்பட்டறையை நடத்துவதன் மூலம் அவர்களுக்கிடையில் பரந்த வலைப்பின்னலை ஏற்படுத்தி பிரசாரத்தை நாடளாவிய ரீதியில் மேற்கொண்டு மனித உரிமை மீறலுக்கு எதிராக தனிநபரையும் சிவில் சமூகத்தையும் போராட வைப்பதாகும்.
இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் அவுஸ்திரேலியா இலங்கையரசுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றது. மனித நேயப் பணி மற்றும் மனிதாபிமான அபிவிருத்தி தொடர்பில் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்குமிடையில் சிறந்த சிநேகபூர்வ உறவுள்ளது.
இந்த உறவினை மேலும் பலப்படுத்துவதற்காக அவுஸ்திரேலியா இலங்கைக்கு உதவக் காத்திருக்கின்றது. இலங்கையின் வடக்கு, தெற்கு, வடமேற்கு பகுதிகளில் மனிதநேயப் பணிகளை அவுஸ்திரேலியா மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
டாக்டர் ரவீந்திர பெர்னாண்டோ
இந்நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் கற்கை நிலையத்தின் தலைவர் டாக்டர் ரவீந்திர பெர்னாண்டோ உரையாற்றுகையில்;
கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகளுக்கான கற்கை நிலையம் 1991 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இயங்கிவருகிறது. நாம் மனித உரிமை மீறல்கள் குறித்து வெளியில் சென்று ஆராய்வதில்லை. நாம் மனித உரிமைகள் தொடர்பில் கற்கைகளை மாத்திரம் மேற்கொள்கின்றோம்.
எமது நிலையத்தால் இராணுவம், பொலிஸார், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கிராமசேவகர் உட்பட அரச அதிகாரிகளுக்கு மனித உரிமை தொடர்பில் பயிற்சிகளை அளித்துள்ளோம். அளித்து வருகின்றோம். இந்த நிதியுதவியளித்ததையிட்டு அவுஸ்திரேலிய அரசுக்கும் உயர்ஸ்தானிகரகத்துக்கும் எமது நன்றிகள்.
மனித உரிமை விடயத்தில் ஊடகங்கள் முக்கிய பணிகளை ஆற்ற முடியும். இது தொடர்பில் அவர்கள் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும்.
நாம் ஊடகவியலாளரை மனித உரிமை தொடர்பில் ஊக்குவிக்க பல்வேறு பயிற்சிப் பட்டறைகளை மூன்று மொழிகளிலும் மேற்கொண்டு ஊடகவியலாளர் மத்தியில் வலைப்பின்னலை உருவாக்க இந்த நிதியுதவி வழிவகுத்துள்ளது. இதனை நாம் வரவேற்கின்றோம் என்றார்.
இதன்போது 6 மில்லியன் ரூபா காசோலையை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் காதி லுக்மன் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் கற்கை நிலையத்துக்கான தலைவரிடம் கையளித்தார். இந்நிகழ்வில் உயர்ஸ்தானிகராலய ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.