வெள்ளைவானில் கடத்தப்பட்ட வவுனியா இளைஞர்கள் இருவர் பற்றிய எதுவித தகவல்களும் கிடைக்கவில்லை என பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அடையாளம் தெரியாதவர்களினால் வெள்ளைவானிலேயே இவர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்திச் செல்லப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரை சந்தித்து தமது நிலைமையினை விளக்கியிருந்தனர். இதற்கான ஏற்பாட்டை ஐக்கிய தேசியக் கட்சி வவுனியா அமைப்பாளர் மகேஸ் தவச்செல்வம் செய்திருந்தார்.
மகாறம்பபைக்குளத்தைச் சேர்ந்த 30 வயதுடைய கண்ணன் என அழைக்கப்படும் செனவிரத்தின இதயகுமார் மார்ச் மாதம் 9 ஆம் திகதி கோவிலடியில் வைத்து வெள்ளைவானில் வந்தவர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இதுவரை அவர் பற்றிய எந்தவித தகவலும் இல்லை என தாயார் திருமதி இராசநாயகி தெரிவித்துள்ளார். மகனது மோட்டார் சைக்கிளையும் அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடத்தியவர்கள் யாராக இருந்தாலும் இளைஞனை விடுவிக்குமாறு கிராம மக்களின் சார்பில் முன்னாள் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் எம்.சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எங்கள் கிராமத்து சகல பொது வேலைகளிலும் முன்னின்று உழைத்தவர். அவரை கடத்தியவர்கள் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும் எனவும் பணிவான கோரிக்கையினை விடுத்துள்ளார்.
இதேவேளை, மார்ச் மாதம் 25 ஆம் திகதி 2 ஆம் குறுக்குத் தெரு ரயர் கடையில் வேலை செய்த 23 வயதான ஜெயதேவநேசன் ரஜீவன் அன்று பிற்பகல் வெள்ளைவானில் வந்தவர்களினால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். அவர் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியவில்லை என இவரது தாயார் திருமதி இராஜேஸ்வரி தெரிவித்தார்.உயர் கல்வியை முடித்த பின்னர் குடும்ப கஷ்டத்தின் மத்தியில் ரயர்கடையில் வேலை செய்தவர் என தாயார் குறிப்பிட்டுள்ளார்.