* ஜனாதிபதி ராஜபக்ஷ பிரதம அதிதி
பொதுநலவாய அமைப்பிலுள்ள 54 இளைய அமைச்சர்கள் கலந்து கொள்ளும் சர்வதேச மாநாடு எதிர்வரும் 27 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இம்மாநாடு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இது தொடர்பாக விளக்கமளித்தார்.
அவர் கூறியதாவது;
"இளைஞர்கள் மூலம் சமாதானம்" என்ற தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இம்முறை எமது நாட்டில் நடைபெறுகிறது. இதில் 54 நாடுகளைச் சேர்ந்த இளைய அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளும் இச்சர்வதேச மாநாடு 27 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஆரம்ப நாள் நிகழ்வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக பங்கேற்பார்.
சர்வதேச ரீதியாக இலங்கைக்கெதிராக மோசமான பிரசாரம் இடம்பெறும் நிலையில் பொது நலவாய மாநாடு இலங்கையில் நடைபெறுவது முக்கியமானதாக கருதப்படுகிறது.
35 மில்லியன் ரூபா செலவில் நடைபெறும் இம்மாநாட்டின் மூலம் இலங்கை இளைஞர், யுவதிகளும் சிறந்த அறிவையும் அனுபவத்தையும் பெறக் கூடிய நிலையேற்படும்.
இம்மாநாடு இலங்கையில் நடத்தப்படுவதன் மூலம் பொது நலவாய இளைஞர் அமைச்சர்களின் தலைமையை அடுத்த 4 வருடங்களுக்கு எமது நாட்டின் கைவசம் வைத்திருக்கும் அரிய வாய்ப்பு கிட்டியுள்ளது.
இளைஞர்கள் ஆயுதப் படைகளிலும் பயங்கரவாதக் குழுக்களிலும் முக்கிய செல்வாக்குச் செலுத்தும் நிலையில் அவர்கள் சமாதானத்தின் பங்காளர்களாகவும் தூதுவர்களாகவும் செயற்படுவதையும், செயற்படலாமென்பதையும் இச்சர்வதேச மாநாடு உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இவ்வூடகவியலாளர் மாநாட்டில் அமைச்சு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.