மன்னாரில் மடு தேவாலயத்தை அண்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்தும் ஆட்லெறி ஷெல்கள் வந்து வீழ்வதாக தேவாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேவாலயத்தைச் சூழ சுமார் 50, நூறு மீற்றர் தூரத்தில் இந்த ஷெல்கள் வந்து வீழ்வதாகவும் இவற்றின் சிதறல்கள் தேவாலயத்திலுள்ள குருமார்கள் தங்குமிடத்தை சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இப்பகுதியில் கடும் மழை பெய்த நிலையில், இங்கு வீழ்ந்த ஷெல்கள் வெடிக்காத நிலையில் புதைந்து கிடப்பதாகவும் இதனால், அப் பகுதிகளுக்கு எவரும் செல்வதில்லை எனவும் தேவாலய வட்டாரங்கள் தெரிவித்தன.
மடு தேவாலய பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் கடந்த ஒருவருடமாக இந்தப் பகுதியில் படையினர் பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால், மடுவை அண்டிய பகுதிகளில் படையினர் தினமும் பலத்த ஷெல் தாக்குதலை நடத்தியவாறு முன்நகர்வு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே, இந்தப்பகுதியில் 150 பேர் வரை இருந்த நிலையில் கடந்த சில தினங்களாக இடம்பெற்ற கடும் ஷெல் தாக்குதலையடுத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்து முழங்காவில் மற்றும் வெள்ளாங்குளம் பகுதிகளை நோக்கிச் சென்றுள்ளனர்.
இப்பகுதியில் இடம்பெற்றுவரும் கடும் ஷெல் தாக்குதல் குறித்து மன்னார் ஆயரூடாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் தேவாலய வட்டாரங்கள் தெரிவித்தன.