குருவிட்ட சிறைச்சாலையிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தப்பியோட முனைந்த கைதிகள் மீது சிறைக் காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் சிறைக் காவலர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மூன்று கைதிகள் படு காயமடைந்துள்ளனர்.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது;
குருவிட்ட சிறைச்சாலையில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல கைதிகள் நேற்று மாலை 5.30 மணியளவில் தப்பிச் செல்ல முற்பட்ட போதே இவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த நேர்ந்ததாக சிறைச்சாலை ஆணையாளர் மேஜர் ஜெனரல் வஜிர விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
பல கைதிகள் சிறைச்சாலையை உடைத்துக் கொண்டு தப்பிச் செல்ல முற்பட்ட போதே அந்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த சிறைக் காவலர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்த முற்பட்ட போதும் அது சாத்தியப்படாத நிலையில் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் மேஜர் ஜெனரல் வஜிர விஜயவர்த்தன தெரிவித்தார்.
சிறைக் காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தப்பியோடிய நான்கு கைதிகள் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதுடன், மூவர் படுகாயமடைந்தனர். மேலும் சிலர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தையடுத்து சிறைச்சாலைக்கு விரைந்த இரத்தினபுரிப் பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததுடன், பாதுகாப்பையும் பலப்படுத்தினர்.
இதேநேரம் இந்தச் சம்பவம் தொடர்பாகக் கேள்வியுற்ற கைதிகளின் உறவினர்கள் பலர் குருவிட்ட சிறைச்சாலையை நோக்கி விரைந்துள்ளனர்.இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.