பொலநறுவை மின்னேரியப் பகுதியிலுள்ள இராணுவ முகாமொன்றின் மீது கடும் மின்னல் தாக்குதல் நடைபெற்றதில் நான்கு படையினர் கருகிப் பலியானதுடன், 63 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
இலங்கை வரலாற்றில் மின்னல் தாக்குதலொன்றில் ஒரே நேரத்தில் இந்தளவிற்கு மிகப் பெரும் பாதிப்பேற்பட்டது இதுவே முதல் தடவையாகும்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது;
`மின்னேரியா காட்டுகலியாவ இராணுவப் பயிற்சி முகாமில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் பெருமளவு படையினர் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
இவ்வேளையில் அந்தப் பகுதியில் பலத்த இடியுடன் கூடிய மின்னல் தாக்குதலிருந்தது.
இந்த நிலையில், திடீர் மின்னல் தாக்குதலொன்றில் பயிற்சியிலீடுபட்ட நான்கு படையினர் உடல் கருகிப் பலியானதுடன், 63 படையினர் பலத்த அதிர்ச்சி மற்றும் எரிகாயங்களுக்குள்ளாகினர்.
மின்னல் தாக்குதலால் அந்த இடத்திலேயே வீழ்ந்த படையினர் அனைவரும் உடனடியாக வாகனங்கள் மூலம் பொலநறுவை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு உடனடியாகச் சிகிச்சையளிக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இராணுவ முகாமிலுள்ள மிகப் பெரிய வெளியிலேயே இவர்கள் உடற்பயிற்சியிலீடுபட்டதால் கடும் மின்னல் தாக்குதலுக்கிலக்கானதாகத் தெரிவிக்கப்படுகிறது.