ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளிடையே கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பான இணக்கப்பாட்டை எட்டுவதில் தொடர்ந்தும் இழுபறிநிலை ஏற்பட்டுள்ள அதேவேளை,இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக அரச உயர்மட்டம் பல ஆலோசனைகளை முன் வைக்கவுள்ளதாக அறிய வருகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முஸ்லிம் பங்காளிக் கட்சிகள் முஸ்லிம் ஒருவரே முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தும் நிலையில்,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது கட்சி சார்பில் பிள்ளையானே வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளன.
இவ்வாறு இருதரப்பினரும் முரண்பட்டிருப்பதால் விசனமடைந்துள்ள அரசாங்க மேல்மட்டம் இரண்டரை வருடங்கள் முஸ்லிம் ஒருவரும் இரண்டரை வருடங்கள் தமிழர் ஒருவரும் முதலமைச்சராக்கப்படலாமென யோசனை முன்வைத்துள்ளது.
அல்லது தேர்தலில் கூடிய வாக்குகளைப் பெறுபவர் முதலமைச்சராக நியமிக்கப்படலாமெனவும் யோசனை வழங்கியுள்ளது.
ஆனால், இரண்டாவது யோசனைக்கு தமிழ், முஸ்லிம் கட்சிகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. முதலமைச்சர் வேட்பாளரினை முன்கூட்டி அறிவிப்பதன் மூலமே தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை அதிகளவில் சுவீகரிக்க முடியுமென அரசாங்க மேல்மட்டத்திடம் அவை வலியுறுத்தியுள்ளன.
எனினும் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகங்களுக்கே முதலமைச்சர் பதவி கிடைக்க வேண்டுமென அவை அடம்பிடிப்பதாக அறியவருகிறது.
இந்நிலையில், தமது வாதங்களை வலியுறுத்தி முஸ்லிம் தரப்பும் , தமிழ் தரப்பும் முரண்பட்டு அரசாங்க மேல்மட்டத்துடன் சர்ச்சையில் ஈடுபட்டதாகவும் தெரிய வருகிறது.
ஐ.தே.க. மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் முடிவுகளை அடுத்து தமது இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வதென சில தரப்புகளினால் ஆலோசனை முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று புதன்கிழமையே ஆளும் தரப்பு தேர்தல் பற்றிய தமது அறிவிப்புகளை வெளியிடுமென அறியவருகிறது.
எனினும், ஆளும் தரப்பில் தொகுதிப் பங்கீடு, மாவட்ட தலைமை வேட்பாளர் உள்ளிட்ட பல விடயங்களில் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பிலேயே பெரும் இழுபறி தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.