* சர்ச்சையை கிளப்பும் சட்ட வல்லுநர்கள்
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டிருக்கும் கித்துல்கொட மற்றுமொரு அரச பதவியை வகிப்பது குறித்து பெரும் சர்ச்சை மூளும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
பாராளுமன்ற செயலாளர் நாயகமாக பணியாற்றிய பிரியானி விஜயசேகர ஓய்வு பெற்றுச் சென்றதையடுத்து அவசரமாக அவரின் வெற்றிடத்திற்கு பதில் பாராளுமன்ற செயலாளர் நாயகமாக ஜனாதிபதியினால் கித்துல்கொட நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரின் நியமனத்திற்கு ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி.தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதுடன் எதிர்வரும் 8 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் போது இந்நியமனத்திற்கு எதிராக பெரும் போர்க்கொடி தூக்கப்போவதாகவும் அச்சுறுத்தியுள்ளன.
இந்நிலையில் பதில் செயலாளர் நாயகம் நியமனம் குறித்து சட்ட வியலாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளனர். அதாவது கித்துல்கொட அரசியலமைப்பு பேரவையின் செயலாளர் பதவியை தற்போது வகிக்கும் நிலையில் அவரினால் மற்றுமொரு அரச பதவியை வகிக்க முடியுமாவென்பது பிரதான கேள்வியாகும்.
அரசியல் கட்சி சார்புகளுக்கு அப்பால் நின்று செயற்படுவது பாராளுமன்ற செயலாளரின் அடிப்படை பணியாகுமென சுட்டிக்காட்டும் சட்டவியலாளர்கள் எதிர்க் கட்சிகளின் விருப்பமின்றி எத்தனை நாட்கள் பதில் செயலாளர் நாயகமாக கித்துல்கொட நீடிக்க முடியுமெனவும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இது குறித்து ரான்ஸ்பெரன்ஸி இன்டநஷ்னல் ஷ்ரீலங்கா நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜே.ஸி.வெலியமுன கூறுகையில்;
"அரசியலமைப்பு பேரவையில் முக்கிய பதவி வகிக்கும் கித்துல்கொட மற்றுமொரு பதவியை வகிக்க முடியாது. இது பல முரண்பாடுகளை தோற்றுவிக்கும். இருபதவிகளிலும் சுயாதீன செயற்பாடு அவசியம். இருபதவிகளை வகிக்கும் போது சுயாதீனம் காக்க முடியுமா என்ற சந்தேகம் மேலோங்குகிறது" என்றார்.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து கூறும் போது,
அரசியல் அமைப்பு பேரவை நியமிக்கப்படாமை காரணமாகவே இச்சர்ச்சை எழுந்துள்ளது. அரசியல் செல்வாக்கு மூலம் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகமாவது எதிர்க்கட்சிகளின் எதிர்மறை கருத்துக்களுக்கே வழிவகுக்குமென்றார்.
இதேவேளை, அரசாங்கத்தரப்பானது அரசியலமைப்பு பேரவைக்கு தற்போது உறுப்பினர்களை நியமிக்க முடியாதென உறுதியாகவுள்ள நிலையில், பாராளுமன்றத்திற்கு நிரந்தர செயலாளர் நாயகத்தை நியமிப்பதில் காலதாமதமேற்படுமென தெரிவிக்கப்படுகிறது.