கடந்த தினங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக புலிகள் இயக்கத்தினர், அரச படையினர் இரு தரப்பினரும் களமுனைகளில் கஷ்டங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எவ்வாறாயினும் மணலாறு களமுனைகளில் புலிகள் இயக்கத்தினர் பின்வாங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மணலாறு பிரதேசத்தை அரச படையினர் கைப்பற்றுவதைத் தடுக்கும் இறுதிக்கட்ட நடவடிக்கையாக புலிகள் இயக்கத்தினர் கடுந்தாக்குதல்களைத் தொடுத்து வருவதாகவும் ஆயினும், அரச படையினர் சீரற்ற காலநிலையைப் பாராது புலிகளின் தாக்குதல்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுத்துள்ளனர்.
மணலாற்றை இழக்கும் நிலையிலுள்ள புலிகள் இயக்கத்தினர் அதனைத் தக்க வைப்பதற்காக தற்போது முழுச் சக்தியையும் பிரயோகித்து தாக்குதல்களைத் தொடுப்பதாகவும் புலிகள் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களும் இந்தத் தாக்குதல்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிய வந்துள்ளது. 1995 க்குப் பின் கிழக்கில் பெரும் பிரதேச இழப்பையும் படுதோல்விகளையும் சந்தித்த புலிகள் இயக்கம் தற்போது வன்னியிலிருக்கும் அதன் முகாம்களைக் காப்பாற்ற வேண்டிய இறுதிக் கட்டத்தில் உள்ளது.
ஏற்கனவே, மன்னார் பிரதேசத்தில் முகாம்களை இழந்தநிலையில் ஏனைய முகாம்களிலிருந்த தமது படையணிகளிலிருந்து ஆண்களை பின் வாங்கச் செய்து பெண்புலிகளையே மன்னார் களமுனைகளில் கூடுதலாக புலிகள் இயக்கம் ஈடுபடுத்தியுள்ளது. இதற்குக் காரணம் வன்னி முல்லைத்தீவு உட்பட வடக்கு களமுனைகளில் புலிகள் இயக்கத்துக்குக் கடும் ஆட்பற்றாக் குறையும் ஆயுதப் பற்றாக்குறையும் ஏற்பட்டிருப்பதேயாகும்.
இதனால், மன்னார், வன்னி, முல்லைத்தீவு, மணலாறு மற்றும் அனைத்துக்கள முனைகளிலும் பெரும் பின்னடைவுக்கு முகம் கொடுத்துள்ளனர். இந்நிலையில், தற்போது புலிகள் மேற்கொண்டிருப்பது இறுதிக்கட்டத் தாக்குதல்களே எனத் தெரியவந்துள்ளது. அரச படையினர் பல களமுனைகளிலும் முன்னேறி வரும்போது அவர்களுடைய தாக்குதல்களுக்கு உதவியாக விமானப்படையினர் தீவிர விமானக் குண்டுத் தாக்குதல்கள் மூலம் கடற்புலிகள் முகாம்கள் உட்பட ஏனைய பிரதான புலிகள் இயக்க முகாம்கள், ஆயுதக் களஞ்சியங்கள், படகுகள், தொடர்பாடல் நிலையங்களை முற்றாக அழித்துவருவதாலும் புதிதாக ஆயுதங்களைக் கடல் மார்க்கமாக புலிகள் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாலும் புதிய உறுப்பினர்களைப் படையில் சேர்த்துக் கொள்ள முடியாத நிலையிலும் புலிகள் இயக்கம் இறுதிக் கட்டத் தாக்குதல்களை தற்போது மேற்கொண்டு வருவதாகக் கருதமுடியும்
திவயின: 31.03.2008