2010 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண ஹொக்கி போட்டி இந்தியாவில் இருந்து மாற்றப்படலாம் என்று சர்வதேச ஹொக்கி சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
2010 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண ஆண்கள் ஹொக்கி போட்டியை இந்தியாவில் நடத்த சர்வதேச ஹொக்கி சம்மேளனம் ஏற்கனவே அனுமதியளித்திருந்தது.
இதற்கிடையில் சமீபத்தில் நடந்த ஒலிம்பிக் தகுதி சுற்றுப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியது. பீஜிங்கில் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணி முதல் முறையாக தகுதி பெறாததால் இந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச ஹொக்கி சம்மேளனத்திலும் புகைச்சல் கிளம்பியுள்ளது.
இந்திய ஹொக்கியை மேம்படுத்த சர்வதேச ஹொக்கி சம்மேளனம் அளித்த ஆலோசனைகளை இந்திய ஹொக்கி சம்மேளனம் சரியாக பின்பற்றவில்லை என்று சர்வதேச ஹொக்கி சம்மேளனம் எச்சரிக்கை விடுத்திருந்தது. சர்வதேச ஹொக்கி சம்மேளனம் வழங்கிய ஆலோசகர் ரிச்சர்ட் சார்ஸ்வொர்த்தை சரியாக பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு விசுவ ரூபம் எடுத்துள்ளது.
இந்த நிலையில், சுவிற்சர்லாந்தில் உள்ள லாசானே நகரில் நடந்த சர்வதேச ஹொக்கி சம்மேளனக் கூட்டத்தில் இந்திய ஹொக்கி விவகாரம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அப்போது இந்திய ஹொக்கி வளர்ச்சிக்கு ஹொக்கி சம்மேளனம் எடுத்து வரும் நடவடிக்கை மற்றும் 2010 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிக்கான ஏற்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
குறிப்பிட்ட காலத்துக்குள் இதில் முன்னேற்றம் காணாவிட்டால் உலகக் கிண்ணப் போட்டியை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக நேரிடும் என்று சர்வதேச ஹொக்கி சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தத் தகவல் இந்திய ஹொக்கி சம்மேளனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய ஹொக்கி சம்மேளனத் தலைவர் கே.பி.எஸ். கில்லியிடம் கேட்ட போது, `சர்வதேச ஹொக்கி சம்மேளனத்திடம் இருந்து வந்த செய்தி கிடைத்துள்ளது. அவர்கள் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு விரைவில் நாங்கள் பதில் அனுப்புவோம். அதன் பின்னர் சர்வதேச ஹொக்கி சம்மேளனத்தின் முடிவுக்கு காத்திருப்போம்' என்றார்.