ஒலிம்பிக் போட்டித் தொடக்க விழாவை அமெரிக்க ஜனாதிபதி புஷ் புறக்கணிக்க வேண்டுமென்று அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் பெலோசி கோரிக்கை விடுத்துள்ளார்.
திபெத் போராட்டத்தை சீனா நசுக்கி வருவது சர்வதேச அளவில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இதனை முன்னிட்டு ஒலிம்பிக் போட்டிகளைப் புறக்கணிக்க வேண்டுமென்று கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
எனினும் ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிப்பது சரியல்ல என்றும், எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் தொடக்க விழா நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்கலாம் என்றும் ஒரு சில தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் பெலோசி, அந்நாட்டு ஜனாதிபதி புஷ், தொடக்க விழா நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்பது பற்றி தீவிரமாக யோசிக்க வேண்டுமென்று கூறியுள்ளார்.
இதனிடையே, ஜேர்மன் சான்சிலர்மார்கல், பெய்ஜிங் ஒலிம்பிக் தொடக்க விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். இதேநேரம், ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தில் பங்கேற்கப் போவதில்லையென்று இந்திய கால்பந்து வீரர் பைசங் பூட்டியா கூறியுள்ளார். திபெத் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்திலிருந்து விலகிக் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் சீனாவிலிருந்து நேற்று முன்தினம் தொடங்கியது. வரும் 17 ஆம் திகதி ஒலிம்பிக் ஜோதி இந்தியா வந்தடைகிறது. இந்தியாவில் ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தில் பங்கேற்பதற்காக கால்பந்து வீரர் பைசங் பூட்டியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எனினும் திபெத் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தில் தான் பங்கேற்கப் போவதில்லை என்று பூட்டியா தெரிவித்துள்ளார். இந்த முடிவை அவர் தொலைநகல் மூலம் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு தெரிவித்துள்ளார்.
தன்னுடைய நண்பர்கள் பலர் புத்தமதத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிய பூட்டியா, தானும் புத்தமதத்தைப் பின்பற்றுவதால் திபெத் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
சீனாவின் ஆதிக்கத்தின் கீழிருக்கும் திபெத்தில், சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. திபெத்தியர்களின் போராட்டத்தை அடக்க சீனா கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக சர்வதேச நாடுகளின் விமர்சனத்திற்கு சீனா ஆளாகியுள்ளது.