-கவீரன்-
ஆயுதப் படைகளுக்கும் இலங்கை அரசாங்கங்களுக்கும் முஸ்லிம்கள் ஆதரவாக இருந்தார்கள் என்பதற்குப் பதிலடியாகவே 1983 தொடக்கம் 1991 வரையிலான காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கம் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டார்கள். அரசு - புலிகள் சமாதான உடன்படிக்கையைத் தொடர்ந்து நோர்வேத் தூதரின் அனுசரணையுடன் 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதியன்று விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாய் முஸ்லிம்களின் காணிகள் திரும்பவும் அவர்களுக்கே வழங்கப்படும் என விடுதலைப் புலிகளின் தலைவரால் உறுதியளிக்கப்பட்டது. இந்த உடன்பாடு உடனடியாக அமுலுக்கு வரவில்லை என்றாலுந் தமிழ் மொழி பேசும் இரு இனங்களுக்கிடையே சகவாழ்வு ஏற்பட இடமிருக்கின்றது என்பது மேற்படி உடன்பாட்டின் மூலம் தெரிய வந்தது. இனிவரும் காலகட்டம் இதை மாற்றி விடுமோ நான் அறியேன். இரு சமூகங்களையும் ஒன்றோடு ஒன்றை மோதி விடச் செய்ய பல பிரயத்தனங்கள் பல மட்டங்களில் இருந்து எடுக்கப்பட்டு வருகிறது என்பது என்னவோ உண்மை. அதற்கு இரு தரப்பு நம்மவர்களும் உடந்தையாக உருமாறி நிற்கின்றனர் என்பதும் உண்மை. சுயநலம் ஓங்க ஓங்க இது நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.
எக்காணி எவருக்குரியது, அதற்குரிய அத்தாட்சிகள் என்ன இருக்கின்றன, அக்காணிகளின் வரையறைகள் என்ன என்பன போன்ற பல விடயங்களை அறிந்து கொள்ளல் தமிழர்- முஸ்லிம் உடன்பாட்டை நடைமுறைப்படுத்த தேவையாகவிருந்தது. எது எவ்வாறு இருப்பினும் கிழக்கு மாகாண தமிழ்- முஸ்லிம் உறவுகளில் அந்த காலகட்டத்தில் ஒரு வரவேற்பைத் தருந் திருப்பம் ஏற்பட வழி வகுக்கப்பட்டது என்றால் அது மிகையாகாது.
இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகள் அமைப்பும் சமமான பல நிலையுடனேயே பேச்சுகளில் கலந்துகொண்டன. உண்மையில் பொதுத் தேர்தலுக்குப் பிறகு நாடு மோசமான நிலையில் இருந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பு அந்த வேளையில் போர் நிறுத்தமொன்றுக்கு உடன்படாதிருந்திருந்தால் நாட்டின் நிலைமை மிகவுஞ் சீரழிந்திருக்கும்; ஆயினும் இரு தரப்பாரும் சம நிலையில் இருந்தே போர் நிறுத்த உடன்பாட்டை உருவாக்கினர். சம நிலை கிடைப்பதை ஒரு வெற்றியாகக் கருதியே புலிகள் இயக்கம் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டதாகவும் கொள்ளலாம். எல்.டீ.டீ.ஈ. அமைப்பு ஒரு மரபு ரீதியான இராணுவம் என்பதையும் ஒரு கடற்படை ஆட்புலத்தின் மீதான கட்டுப்பாடு கொண்டிருந்தது என்பதையும் அத்துடன், தமது கட்டுப்பாட்டு பிரதேசங்களில் ஆட்சி நிர்வாகம் என்பனவற்றைக் கொண்டிருந்தது என்பதையும் போர் நிறுத்த உடன்படிக்கை அங்கீகரித்ததாகக் கொள்ளலாம்.
பிரச்சினைகள் சற்றுக் குறைந்து கொண்டு வரும் நிலையில் அரசாங்கம் சற்று முரண்டு பிடிக்கத் தொடங்கியது. அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் இடம்பெற்ற இலங்கைக்கு உதவி நிதியளிக்கும் நாடுகளின் பூர்வாங்க மாநாட்டில் பிரச்சினைகள் உருவாகின. திருமண வைபவ மண்டபத்தில் பெண் வீட்டாருக்கு இடமில்லை என்பது போல் புலிகள் இயக்கத்தைத் தவிர்த்தே மாநாடு நடைபெற்றது. அந்த வகையில் புலிகள் இயக்கத்தை சமபல நிலையில் இருந்து இறக்குவதற்காகத் திட்டங்கள் தீட்டப்பட்டனவோ என்று எண்ணத் தோன்றியது. அதாவது, முதலில் சம நிலைக்கு உடன்பட்டு விட்டு காலந்தாழ்த்தி அந்த நிலையைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தோன்றியது. உடன்பாடுகளைச் செய்வதும் அதன் பின் அவற்றில் இருந்து நழுவுவதும் இலங்கை அரசாங்கங்களுக்கு கை வந்த கலை என்பதால் இதுவும் அப்பேர்ப்பட்டதொன்றோ என்று எண்ண வைத்தது.
அதே நேரத்தில் இடைக்கால நிர்வாகஞ் சம்பந்தமான பிரச்சினையும் தலைதூக்கியது. தாய்லாந்தில் இடம்பெற்ற ஆரம்பச் சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் இடைக்கால நிர்வாகம் சம்பந்தமாகப் பேசப் போவதில்லை என்று இரு தரப்பாரும் தீர்மானித்திருந்தனர். ஏன் என்றால் வடக்குக் கிழக்கு இடைக்கால நிர்வாகம் உருவாக்கப்பட்டால் அது இலங்கை அரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கு முரணாக அமையும் என்று கருதப்பட்டது. அதனால் தான், இணைந்த நடவடிக்கைச் செயற்குழு, "சிரான்" போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இவற்றை நடைமுறைப்படுத்தி பயன் பெற முட்டுக்கட்டையாய் அமைந்திருந்ததே சிங்களத் தேசியக் கட்சிகளுக்குள் இருந்த போட்டி, பொறாமை ஆகியன. ஐக்கிய தேசிய முன்னணி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடைக்கால நிர்வாகம் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக உறுதியளித்திருந்தது. 2000 ஆம் ஆண்டில் பொதுஜன ஐக்கிய முன்னணியினால் தயாரிக்கப்பட்ட அரசியல் யாப்பு முதல்வரைவின் மூலம் இப்பேர்ப்பட்ட இடைக்கால நிர்வாகமொன்றினைப் பத்து வருடகாலத்திற்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே, ஐக்கிய தேசியக் கட்சியும் ஷ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் அதன் தோழமைக் கட்சிகளும் வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்கு இடைக்கால நிர்வாகம் வழங்கப்பட வேண்டியது அவசியமென்பதை ஏற்றுக் கொண்டிருந்தன. ஆனால், அப்படி இருந்தும் வடக்குக் கிழக்கிற்கு இடைக்கால நிர்வாகம் மற்றும் அதியுயர் பாதுகாப்பு வலயப் பிரச்சினை போன்றவை தொடர்பாகக் கருத்திணக்கம் இந்தக் கட்சிகளிடையே ஏற்படவில்லை. ஒருவரை ஒருவர் எதிர்ப்பதில் ஆர்வம் காட்டப்பட்டதே ஒழிய நாடு சீரழிந்து போக இந்த இணக்கப்பாடற்ற தன்மை வழிவகுக்கும் என்று அவர்கள் எண்ணவில்லை. தமிழர்கள் தமது பிரதேசங்களில் அநாதை வாழ்வு வாழ வேண்டி இருந்ததும் அவர்களுக்குப் புரியவில்லை.
அண்மையில் தொலைக்காட்சிச் சேவையொன்றில் பாண்விலை அதிகரிப்பு பற்றி வினவப்பட்ட போது பொருளாதார மட்டத்தில் மிகத் தாழ்ந்த நிலையில் இருப்பவராகக் கணிக்கப்படக் கூடிய ஒரு சிங்களப் பெரு மகனார் கூறினார்;
"பாண் விலை ஐந்நூறாக உயர்ந்தாலும் பரவாயில்லை. புலிகள் அழிந்தால் அதுவே போதுமானது" என்று. அவர் பாண் சாப்பிடாத ஒருவரோ நான் அறியேன்! இந்த வீம்பு தான் கட்சிகள் மத்தியிலும் புலப்படுகிறது. நாட்டின் பிரச்சினைகள் தீராவிடினும் பாதகமில்லை. ஆனால், பிரச்சினைகளுக்காக முன் வைக்கப்பட்டும் தீர்வுகள் அடுத்த கட்சியின் ஊடாக வரவிடக் கூடாது என்பதே உள்ளார்ந்த எண்ணமாக இந்நாட்டின் முக்கிய கட்சிகளுக்கிடையே இருந்து வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இப்பேர்ப்பட்ட இரங்கத் தக்க நிலை பண்டாரநாயக்க- செல்வநாயகம் ஒப்பந்தக் காலத்தில் இருந்து தொடர்ந்து நிலவி வருகிறது. இதனை மேலும் சிக்கல் அடையச் செய்யும் விதத்தில் 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பு அமைந்துள்ளது. அதன் கீழ் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைப்பலம் எந்த ஒரு கட்சிக்கும் கிடைப்பதற்கில்லை. அதனால், அரசியல் யாப்பின் மூலம் உறுதி செய்யப்படக் கூடிய இடைக்கால நிர்வாக அமைப்பொன்றை உருவாக்குவது இயலாத விடயமாக அமைந்துள்ளது.
2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி சரியாக ஐந்து வருடங்களுக்கு முன் விடுதலைப் புலிகள் அமைப்பு சமாதானப் பேச்சு வார்த்தைகளில் பங்கேற்பதை இடை நிறுத்தியது. பல காரணங்கள் இதற்கு இருந்தன.
அவை பற்றி அடுத்த வாரம் ஆராய்வோம்.