Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, April 20, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
தமிழர்களின் கூட்டிருப்பை சிதைப்பதே கிழக்குத் தேர்தலின் பிரதான இலக்கு
[20 - April - 2008] [Font Size - A - A - A]
சங்கரன் சிவலிங்கம்

ஜனாதிபதி மகிந்த தனது விருப்பம் போலவே கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கு நாள் குறித்துவிட்டார். இந்நாள் குறிப்பு பற்றி பலர் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தபோதும் அவை எவற்றையும் அவர் கணக்கெடுக்கவில்லை. இது ஒருவகையில் 1956 இல் பண்டாரநாயக்க கடைப்பிடித்த அணுகுமுறைகளுக்கும் பொருந்தும். 1956 இல் பதவிக்கு வந்த பண்டாரநாயக்க அடுத்தடுத்து பேரினவாதிகளின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் தனிச்சிங்களச் சட்டம், `ஸ்ரீ' எதிர்ப்புச் சட்டம் என்பவற்றை கொண்டுவந்தார். மகிந்தர் அவற்றிலும் மேலே ஒரு படி சென்று வலிந்த போர், வடகிழக்கும் பிரிப்பு, யுத்த நிறுத்த உடன்படிக்கை முறிப்பு, இறுதியாக மாகாண சபைத் தேர்தல் என பலவற்றைக் கொண்டு வந்திருக்கிறார். பண்டாரநாயக்காவின் அதிதீவிர இனவாத நிலைப்பாடுகள் ஒரு கட்டத்தில் அவரையே இல்லாமற் செய்த நிலையினை எடுத்தது. அந்த அனுபவங்கள் எவற்றையும் மகிந்தர் கவனத்தில் எடுத்திருப்பதாகத் தெரியவில்லை.

கிழக்குத் தேர்தலின் பிரதான இலக்கு தமிழ் மக்களின் கூட்டிருப்பினை சிதைப்பதுதான். இக்கூட்டிருப்பினை சிதைக்க முயன்று இன்று முஸ்லிம் மக்களின் கூட்டிருப்பிற்கான போராட்டத்தை எதிர்கொள்ளவேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல தமிழ்த் தேசியத்தை அழிக்கச் சென்ற மகிந்தர், இன்று வீறுகொண்டெழுந்துவரும் முஸ்லிம் தேசியத்திற்கு முகங்கொடுக்க வேண்டிய அவலநிலைக்கு உள்ளாகியுள்ளார். முஸ்லிம் காங்கிரஸின் மீள் எழுச்சி, முஸ்லிம் தேசியம், தமிழ்த் தேசியம் என்கின்ற இருவகைத் தலைவலிக்கு மகிந்தரை உள்ளாக்கியுள்ளது. நாளை நுவரெலியா மாவட்டத்திலிருந்து மலையகத் தேசியமும் எழுச்சியடையும்போது, இலங்கையில் அனைத்து தேசியங்களுக்கும் காலாக நின்றவர் என்ற பெயரை மகிந்தர் தட்டிக் கொண்டுவிடுவார்.

முஸ்லிம் காங்கிரஸ் எழுச்சியுடன் தமிழ்த் தேசியத்திற்கு தற்காலிகமாக கிழக்கில் ஓய்வு கிடைக்கப் போகின்றது. கிழக்கில் பேரினவாத ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்தினை குறிப்பிட்ட காலம் முன்னெடுத்து நடத்தும் தலைமைப் பொறுப்பு முஸ்லிம் காங்கிரஸின் தலையில் விழுந்துள்ளது. இதுவரை காலமும் தமிழ்த் தேசிய போராட்டம் கிழக்கின் பேரினவாத ஆக்கிரமிப்பை தடுக்கும் ஒரு கவசமாக இருந்தது. இக்கவசத்தைப் போடுவதில் தமிழ் மக்கள் கொடுத்த விலையோ மிகவும் அதிகம். தமிழ் மக்கள் போரிட்டதால் முஸ்லிம் மக்களை வளைத்துப் போட பேரினவாத அரசு அவர்களுக்கு சிறு சிறு சலுகைகளை வழங்கி வந்தது. இந்தச் சலுகைகளே நிரந்தமானவை என நினைத்து சில முஸ்லிம் தலைவர்களும் கூத்தாடி மகிழ்ந்தனர். தற்போது அவையெல்லாம் மாயத்தோற்றமென்பது வெளிப்பட்டுள்ளது. இதுவரை காலமும் தமிழ் மக்கள் மீது பாய்ந்த பேரினவாதம் தற்போது முஸ்லிம் மக்களின் மீதும் பாய ஆரம்பித்துள்ளது. இதன் வெளிப்பாடுதான் பொத்து விலிலும் அட்டாளைச்சேனையிலும் இடம்பெற்ற காணிப்பறிப்பும் மூதூர் பிரதேச மக்கள் திறந்தவெளி சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டமையும் ஆகும்.

ஒரு இன அரசியல் முதலில் ஆளுங் கட்சி அரசியலாகத்தான் வளரும். அதாவது ஆளுங் கட்சியுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் அவ்வினத்தின் அபிலாசைகளைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியே ஆரம்ப காலங்களில் இடம்பெறும். இக்கால கட்டத்தில் சமத்துவ உரிமை என்ற கோரிக்கையே அவ் இனத்தினால் முன்வைக்கப்படும். இம்முயற்சிகள் சரிவராதபோது அவ்வினம் பாராளுமன்ற அரசியலிற்குள்ளேயே ஒரு எதிர்க் கட்சி அரசியலை நடத்தப்பார்க்கும். இக்கட்டத்தில்தான் இன அரசியல் தேசிய அரசியலாக வளர்ச்சியடையும். ஒரு இனத்தின் கலாசார, பண்பாட்டு அடையாளத்தையும் புவியியல் ஒருமிப்பு அடையாளத்தையும் இணைத்த வகையில் மக்களை அணிதிரட்டுவதற்கான முயற்சிகள் இக்கட்டத்தில் நடைபெறும். இந்த இரண்டாம் கட்ட அரசியல் மூலமும் தமது அபிலாசைகளை தீர்க்க முடியாத போது, இறுதிக் கட்டமாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டத்தை நடத்த முயலும். இப்போராட்டம் ஆயுதப் போராட்டமாக அமைய வேண்டியிருப்பதனால் பாராளுமன்ற அரசியல் இக்கட்டத்தில் பெரிய அளவிற்குப் பயன்படுவதில்லை. இக்கட்டத்தில் ஒடுக்கும் அரசு போராடும் தேசிய இனத்திலிருந்து சில ஓடுகாலிகளை விலைக்கு வாங்கி, ஜனநாயக முறையற்ற வழிகளில் பாராளுமன்ற அரசியலில் செயற்படும் சந்தர்ப்பங்களை அவர்களுக்கு வழங்கி சலுகை அரசியலை வளர்க்கப் பார்க்கும். போர் அவலம் காரணமாக போராடும் மக்களில் ஒரு சிறு பிரிவினர் இவ் அரசியலிற்குப் பின்னால் செல்வதுமுண்டு.

தமிழர் அரசியலில் முதலாவது கட்டத்தை ஜீ.ஜீ.பொன்னம்பலம் தொடக்கி வைத்தார். இன ரீதியான புறக்கணிப்புகளை சரியாக அடையாளங் கண்டு தமிழ் இன அரசியலை தொடக்கிவைத்தவர் அவரேயாவார். ஆளுங்கட்சி ஒரு கட்டத்தில் அவரை அரவணைத்தபோது அதனூடாக தான் சார்ந்த மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்ப்பதற்கு அவர் முயன்றார். உரிமைகள் எனும் மட்டத்தில் எதுவும் இல்லாவிட்டாலும் சலுகைகள் எனும் மட்டத்தில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயன தொழிற்சாலை, வாழைச்சேனை காகித தொழிற்சாலை என்பவற்றை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தவர் இவரேயாவார். தற்போது முதலிரண்டு தொழிற்சாலைகளும் அழிந்துவிட்டன. மூன்றாவது தொழிற்சாலை அழியும் நிலையில் உள்ளது என்பது வேறு கதை. எனினும், உரிமைகள் என்ற மட்டத்தில் ஒரு அடி கூட இவரால் நகர முடியவில்லை. இலங்கை தேசியக் கொடி அமைக்கும் குழுவில் இவரும் அங்கத்தவராக இருந்தபோதும், தமிழ் மக்களுக்கு ஒரு சமத்துவ அந்தஸ்த்தை அக்கொடியில் பெற்றுக்கொள்ள இவரால் முடியவில்லை. வாளேந்திய சிங்கம் தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையில் அமைந்த கொடியினையே அவரால் பெற்றுக்கொடுக்க முடிந்தது. (கொடியில் தமிழ் மக்களை அடையாளப்படுத்தும் கோடு வாளேந்திய சிங்கத்திற்கு எதிர்ப்புறமாக இருக்கிறது.)

நான் முன்னர் கூறியதுபோல, சமத்துவ உரிமைக் கோரிக்கை இக்கட்டத்தின் கோரிக்கையாக இருப்பது மரபாகையால், ஜீ.ஜீ.பொன்னம்பலத்தால் முன்வைக்கப்பட்ட 50:50 கோரிக்கையும் இம்மரபை ஒட்டியே உருவாகியிருந்தது.

ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் முயற்சிகள் உரிமைகள் என்ற வகையில் எந்தவித நகர்வையும் ஏற்படுத்தாத போது மறுபக்கத்தில் சோல்பரி அரசியல் யாப்பு தந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அரச இயந்திரத்தை சிங்கள மயமாக்கும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்ட சூழலிலேயே தமிழர் அரசியலின் 2 ஆவது கட்டத்தை செல்வநாயகம் தொடக்கிவைத்தார். அவர் தமிழ் இன அரசியலை தமிழ்த் தேசிய அரசியலாக வெளிப்படுத்தினார். கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் முடக்கப்பட்டிருந்த தமிழர் அரசியலை வடக்கு, கிழக்கு என வளர்த்தெடுத்தவர் இவரேயாவார். ஜனநாயக வழிமுறைகளில் மக்களை அணிதிரட்டி, போராட்டங்களையும் நடத்தினார். தேசிய அரசியல் என்பது ஆட்சி உரிமையுடன் தொடர்புடையது. இதனால் அவ் ஆட்சி உரிமைக்கு அடிப்படையாக உள்ள நிலமும் அவ் அரசியலுடன் இக்கட்டத்தில் இணைக்கப்படும். அதாவது, தமது தாயகப் பிரதேசங்களை வரையறுத்து அதற்கு அதிகாரங்களைக் கோருவதாகவே அமையும்.

செல்வநாயகம் இவ் அரசியலை அதி உச்ச வகையில் முன்னெடுத்தார். காலிமுகத்திடல் சத்தியாக்கிரகப் போராட்டம் (1956), ஷ்ரீ எதிர்ப்புப் போராட்டம் (1957), திருமலை யாத்திரை (1957), அரசாங்க செயலகங்களின் முன் சத்தியாக்கிரகப் போராட்டம் (1961) என்கின்ற போராட்டங்களை இவர் தலைமையேற்று நடத்தினார். இப்போராட்ட நடவடிக்கைகளும் நடைமுறையில் வெற்றியளிக்காத போது, பிரபாகரன் அதிகாரத்தைக் கைப்பற்றும் போராட்டத்தை கையிலெடுத்தார். இக்கட்டத்திற்கு ஏற்ற வகையில் இதன் தொடக்கமும் ஆயுதப் போராட்டமாகவே அமைந்தது. அதன் இறுதிக் கட்ட நிலையே தற்போது இடம்பெறுகிறது. தமிழர் தாயகத்தின் புவியியல் அமைவிற்கேற்ப அது இலங்கை மட்டம், பிராந்திய மட்டம், சர்வதேச மட்டம் என்பவற்றைத் தாண்டி சென்று கொண்டிருக்கின்றது.

முஸ்லிம் அரசியலில் இன அரசியலை அஷ்ரப் தொடக்கி வைத்தார். முஸ்லிம் மக்களின் இருப்பு தமிழ்த் தேசியத்திற்கும் சிங்களத் தேசியத்திற்கும் இடையே இருப்பதனால் இரண்டு தேசியங்களையும் சார்ந்தே அது நகர வேண்டியிருந்தது. அவர்களின் இருப்பு சிங்களப் பேரினவாதத்தாலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது. எனினும், தமிழ்த் தேசியப் போராட்டம் இவர்களது இருப்பிற்கும் சேர்த்து சிங்களப் பேரினவாதத்துடன் போரிட்டதனால் தங்களது இருப்பிற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் பற்றி அவர்கள் அனுபவ ரீதியாக உணரவில்லை. மாறாக, வடகிழக்கு வேண்டி நின்ற அரசியலிற்கு வெளியே நின்ற தனால் ஏற்பட்ட தமிழ்- முஸ்லிம் முரண்பாடே அவர்களுக்கு அனுபவ ரீதியாகப் பெரிதாக இருந்தது. இரு இனங்களினதும் அரசியல் வளர்ச்சி மட்டங்களும் இதனை ஒரு வகையில் தூண்டியிருந்தது எனலாம். தமிழர் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் போராட்டமாக வளர்ச்சியடைந்த நிலையில் இருந்தபோது முஸ்லிம் அரசியல் நீண்டகாலமாக ஆளுங்கட்சியுடன் இணைந்து சமத்துவம் கோரும் அரசியலாகவே இருந்தது.

மேலே கூறியவாறு, தமிழ்த் தேசிய அரசியலுடன் ஏற்பட்ட முரண்பாடு முஸ்லிம் மக்களுக்கு அனுபவ ரீதியாக பெரிதாக இருந்தமையால் முஸ்லிம் இன அரசியலின் ஆரம்பம் தமிழ்த் தேசிய அரசியலிற்கு எதிராகவே உருவானது. 1921 இல் தமிழ் மக்களுக்கான தனியான அரசியல் இயக்கம் உருவாகிய போதும் 1939 இல் மலையக மக்களுக்கான தனியான அரசியல் இயக்கம் உருவாகியிருந்தபோதும் 1981 வரை முஸ்லிம் மக்களுக்கென தனியான அரசியல் இயக்கம் உருவாகியிருக்கவில்லை. இது 1981 இலேயே உருவாகியது. ஆனாலும், 1988 இல் நடைபெற்ற வடகிழக்கு மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்தே முஸ்லிம் இன அரசியல் செயற்பாட்டுத் தளத்திற்கு வந்தது. தமிழ் மக்களுக்கான அதிகாரப் பங்கீடு எதுவும் வழங்காததால் முஸ்லிம் இன அரசியல் முஸ்லிம் தேசிய அரசியலாக வளர்வதற்கான வாய்ப்பு இருக்கவில்லை. நீண்டகாலமாக வடகிழக்கு மாகாண சபை செயற்படாத நிலையும் முஸ்லிம் தேசியத்திற்கான போக்கினை வளரவிடவில்லை. தமிழ் மக்களுக்கு அதிகாரப் பங்கீடு ஏதாவது வழங்கினால் மட்டும்தான் சமமான அதிகாரப் பங்கீடு தங்களுக்கும் வழங்கப்படவேண்டுமென்ற வகையில் அது குறுக்கப்பட்டிருந்தது. சமாதான காலத்தில் மட்டும் சில முஸ்லிம் முன்னோடிகளால் முஸ்லிம் தேசியம் பேசப்பட்டு முஸ்லிம் தேசப் பிரகடனம் வரை அது வளர்ந்த போதும் அரசியல் மட்டத்தில் ஒரு போக்காக வளரவில்லை.

தற்போது இரு நிகழ்வுகள் முஸ்லிம் தேசியம் வளர்வதற்கான சூழலை உருவாக்கியுள்ளன. ஒன்று கிழக்கு மாகாண சபைத் தேர்தல், இரண்டு புலிகள் கிழக்கில் இருந்து அகன்றமை.

உயர்நீதிமன்றம் வடகிழக்கை பிரித்ததன் பின்னர் அரசு அவசரம் அவசரமாக மாகாண சபைத் தேர்தலுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இத்தேர்தல் மூலம் கட்சியின் அரசியல் இருப்பை நிலை நிறுத்துவதற்கு அப்பால், முஸ்லிம்களின் புவியியல் இருப்பையும் நிலைநிறுத்த வேண்டியது முஸ்லிம் காங்கிரஸிற்கு அவசியமாக இருக்கின்றது. மாகாண சபையின் அதிகாரத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டுமென்ற இலக்கில் அது ஐ.தே.கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து அதன் சின்னத்திலேயே போட்டியிடுகின்றது. ஐ.தே.க.வின் சின்னத்தில் போட்டியிட்டாலும் கிழக்கில் அது முஸ்லிம் காங்கிரஸின் ஆதிக்கத்திலேயே இருக்கப்போகிறது. ஐ.தே.க.விற்கு தென்னிலங்கையில் செயற்படுவதற்கான சூழல் இன்னும் போதியளவு உருவாகாமையால் அரசாங்கத்துடன் போராடும் களத்தை அது கிழக்கிலேயே திறக்க விரும்புகிறது.

இரண்டாவது புலிகள் கிழக்கிலிருந்து வெளியேறிய பின்னர் இதுவரை காலமும் பேரினவாத ஆக்கிரமிப்பிலிருந்து கிழக்கினை பாதுகாத்து வந்த கவசம் அகன்றுள்ளது. அதேவேளை, இவ்வெற்றிடத்தைப் பயன்படுத்தி பேரினவாதம் மிக நுட்பமான வகையில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையினை முடுக்கிவிட்டுள்ளது. இந்தத் தடவை ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேசங்கள் முஸ்லிம் பிரதேசங்களே ஆகும். அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் முஸ்லிம்களின் இருப்பினை சிதைப்பதே இந்நடவடிக்கைகளின் இலக்காகும். ஏனெனில், கிழக்கில் தமிழ்த் தேசியம் தற்காலிகமாக மௌனமாக்கப்பட்ட நிலையில் முஸ்லிம் தேசியம் எழுச்சியடையும் என்பது பேரினவாதிகளுக்கு நன்றாகவே தெரியும்.

அம்பாறை மாவட்டமே இலங்கையில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டமாகும். எனினும், கல்லோயாக் குடியேற்றத் திட்டத்தின் மூலமும் சிங்களப் பிரதேசங்களை அம்பாறை மாவட்டத்துடன் இணைத்ததன் மூலமும் இம்மாவட்டத்தில் சிங்கள மக்களின் சனச்செறிவு செயற்கையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குடியேற்றப் பிரதேசமான அம்பாறைப் பிரதேசம் மாவட்டத்தின் தலைநகர் ஆக்கப்பட்டமையும் சிங்கள மயமாக்கலுக்கு ஏற்ற சூழலை நடைமுறையில் உருவாக்கியிருந்தது.

(தொடர்ச்சி Sunday Thinakkural 02 ஆம் பக்கம் பார்க்க)

Email this page Your Opinion Print this page
புதிய கள முனைகளை திறப்பதற்கு முயற்சி?
சந்திப்பின் பின்னணி என்ன?
கிழக்குத் தேர்தல்: ஒரேயொரு அப்பமும் ஏராளமான குரங்குகளும்!
பாகிஸ்தான், சீன அணுகுமுறைகளை பின்பற்றி வரும் மகிந்த ராஜபக்‌ஷ அரசு
கடலின் அக்கர போனோரோ!
இயக்க வரலாற்றில் மிகப் பெரும் நெருக்கடி வீதிக்கு வந்திருக்கும் ஜே.வி.பி. மோதல்கள் !
தமிழர்களின் கூட்டிருப்பை சிதைப்பதே கிழக்குத் தேர்தலின் பிரதான இலக்கு
பொல்லா வேடச் சாக்கியப் புல்லர்
தாய்லாந்து சிறையில் தமிழ்ப் பெண்கள் அனுபவிக்கும் நரக வேதனை
சமநிலையில் சறுக்கு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com