Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, April 20, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
இயக்க வரலாற்றில் மிகப் பெரும் நெருக்கடி வீதிக்கு வந்திருக்கும் ஜே.வி.பி. மோதல்கள் !
[20 - April - 2008] [Font Size - A - A - A]
குரு

சுதந்திர இலங்கை அரசியல் வரலாற்றில் மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி.யின் பிரவேசம் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பது தொடர்பாக எவரும் முரண்பாடான கருத்துக்களைக் கொண்டிருக்க நியாயமிருக்காது. அந்த இயக்கத்தின் வருகை இதுவரை இங்கு செயல்பட்டு வந்த சம்பிரதாய இடதுசாரி இயக்கங்களை செல்லாக்காசாக்கி விட்டிருக்கின்றது. அவை இன்று வெறுமனே கடிதத் தலைப்புக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஜே.வி.பி. தொடர்பாக ஏனைய அரசியல் கட்சிகள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் என்னதான் முரண்பாடுகள், விமர்சனங்கள் நிலவிய போதிலும் பாட்டாளி வர்க்கத்திற்கும் விவசாய வர்க்கத்திற்கும் பொது மக்களுக்கும் பல நன்மைகள் சென்றடைய அது நேரடியாகவும் மறைமுகமாகவும் துணை புரிந்திருக்கின்றது. எனவேதான் இவ்வியக்கத்தைச் சாராதோரும் அது வழிநடாத்திச் செல்கின்ற வெகுஜன இயக்கங்களிலும் தொழிற்சங்கங்களிலும் அங்கத்துவங்களைப் பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.

என்றாலும், ஜே.வி.பி. அவ்வப்போது வரலாற்றுத் தவறுகளையும் செய்து வந்திருக்கின்றது என்பதனையும் சொல்லியாக வேண்டியுள்ளது. ஜே.வி.பி. யிடத்து நியாயங்கள் முன்வைக்கப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அவர்கள் அவற்றை ஒரு போதும் ஏற்றுக்கொள்வதில்லை. அதற்கு அவர்கள் வழங்குகின்ற வழக்கமான பதில் அடுத்தவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ற விதமாக தமது அமைப்பை ஒரு போதும் வழி நடாத்திச் செல்ல முடியாது என்பது தான்.

தனது வரலாற்றில் மிகவும் கட்டுக்கோப்புடன் செயலாற்றி வந்திருக்கும் ஜே.வி.பி. தனது இயக்கத்தை வளர்த்தெடுப்பதற்கு மிகப்பெரிய தியாகங்களையும் உயிர்களையும் அர்ப்பணித்திருக்கின்றது.

வலதுசாரிப் போக்குடைய சுதந்திரக் கட்சி மற்றும் ஐ.தே.கட்சி வலுவான ஆதிக்கம் செலுத்துகின்ற இந்த நாட்டில், பலம் வாய்ந்த இடதுசாரி இயக்கமொன்றிருப்பது சமூகத்திற்கு ஆரோக்கியமானது என்பது கட்டுரையாளனின் தனிப்பட்ட கருத்தாகும். ஆனால், இன்று தனி நபர்களின் நடவடிக்கைகள் காரணமாக கட்சி தனது வரலாற்றில் மிகப் பெரிய நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கின்றது.

ஜே.வி.பி.க்குள் பெரும் நெருக்கடி உருவாகியிருக்கின்றது என்று நெடுநாளாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்த போதெல்லாம் அதனை வெறும் புரளிகள் என சொல்லி வந்த அவ்வியக்கம் இன்று அதனைப் பகிரங்கமாக ஒத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஜே.வி.பி. முரண்பாடுகள் தொடர்பாக தற்போது அவுஸ்திரேலியாவில் குடியேறி வாழ்கின்ற அதன் முன்னைய பொதுச் செயலாளர் லயனல் போப்பகே என்பவர் கருத்துத் தெரிவிக்கையில்; "ரோஹன விஜேயவீர உயிருடன் இருந்திருந்தால் இவர்களின் நடவடிக்கைகளைக் கண்டு துணியால் முகத்தினை மூடிக் கொள்வார்" எனச் சொல்லியிருக்கின்றார்.

தலைமைத்துவத்திற்கு கொள்கைப்பற்று, ஒரு வகைக்கவர்ச்சி, பேச்சாற்றல், தியாகம், முன்மாதிரி என்பன அவசியம். ஜே.வி.பி. போன்ற கடும் போக்குடைய இயக்கத்திற்கு இவை மிக மிக அவசியம். எனினும், தற்போதைய தலைவர் சோமவன்சவிடமும் இவற்றைப் பெரிதாகக் கண்டுகொள்ள முடியாது. அதன் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவிடம் இத்தன்மைகளை ஓரளவு காணலாம்.

அவர்கள் இருவரை விடவும் பேச்சாற்றலால் மக்களை கவரக்கூடிய சக்தி அதன் பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்சவிடம் காணப்படுகின்றது. இன்று நமது பாராளுமன்றத்திலுள்ள மிகச் சிறந்த பேச்சாளரும் தர்க்கக்காரரும் அவரே. தன்னிடத்திலுள்ள இந்தத் திறமையை வைத்துக்கொண்டு அவர் தன்னிச்சையாக செயலாற்றி கட்சிக்கு நெருக்கடிகளையும் தொந்தரவுகளையும் கொடுத்து வந்ததுடன் மட்டுமல்லாது கட்சி கட்டுப்பாடுகளையும் மீறி பல சந்தர்ப்பங்களில் செயலாற்றி வந்திருக்கின்றார்.

விமலின் இந்த நடவடிக்கைகளுக்குப் புறம்பாக இவரது மனைவியின் நடவடிக்கைகள் கட்சிக்கு பெரும் தலையிடியாக அமைந்திருந்தது. கணவன், மனைவி இருவரினதும் மேற்கத்திய பாணியிலான கேளிக்கை - சொகுசு வாழ்க்கை முறை கட்சி மட்டத்திலும் பொது மக்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியைக் கொடுத்து கொண்டிருந்தது.

இது தொடர்பாக கட்டுரையாளனினால் இதே வார ஏட்டில் ஏற்கெனவே "விஜேவீர சோஷலிசமும் வீரவன்ச சோஷலிசமும்" என்ற தலைப்பில் விரிவான கட்டுரையொன்றின் மூலம் இது தொடர்பாக சொல்லப்பட்டிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

தலைவர் சோமவன்சவும் அரசியல் ரீதியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதும் தான் அப்படிச் சொல்லவில்லை ஊடகங்கள் தனது கருத்துக்களைப் பிழையாக சொல்லியிருக்கின்றது என மறுப்பு அறிக்கை விடுவதும் வழக்கம். அத்துடன், இவர் வீரவன்ச அவர்களின் நடவடிக்கைகளுக்குத் துணைபோகின்றார் என கட்சிக் கடும் போக்காளர்கள் மத்தியில் கருதப்பட்டு வந்தது.

இந்தப் பின்னணிக்கு மத்தியில் பிள்ளையான் விடயத்தில் வீரவன்ச தெரிவித்த கருத்துக்கள் கட்சியின் கருத்துக்களுக்கு முரணானதாகவும் தலைமைத்துவத்தை அவமதிக்கும் விதமாகவும் அமைந்திருந்தது. இக் கருத்துக்களுக்கு கடும் போக்காளரும் கட்சியின் தொழில் சங்கத் தலைவருமான லால் காந்த தனது கடுமையான ஆட்சேபனைகளைத் பகிரங்கமாக வெளியிட்டார். பூனைக்கு மணி கட்டுவது யார் என்றிருந்த விமல்வீரவன்ச தொடர்பான பிரச்சினை சந்திக்கு வந்தது.

கட்சி உறுப்பினர் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் வீரவன்ச விடயத்தில் நடவடிக்கைக்கு பலமான ஆதரவு காணப்பட்டது. நிலைமைப் புரிந்து கொண்ட சோமவன்ச தலைப்பாகை போனால் போகட்டும், தலை தப்பினால் போதும் என்ற நிலையில் ஏப்ரல் ஐந்தாம் திகதி நடைபெற்ற தியாகிகள் தின நிகழ்வில் விமல் வீரவன்சவின் நடவடிக்கைகளுக்கு தனது ஆட்சேபனைகளை முதன் முதலில் பகிரங்கமாகத் தெரிவித்ததுடன் அவ்வாறானவர்களுக்கெதிராக கட்சி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் எச்சரித்தார்.

தன்னைக் கட்சி ஓரம்கட்டப் போகின்றது என்பதனைப் புரிந்துகொண்ட விமல் வீரவன்ச கட்சி தன்னை வெளியேற்றுவதற்கு முடிவு செய்து விட்டது. கிழக்குத் தேர்தல் முடியும் வரை முடிவு அறிவிக்கப்படாமல் தாமதப்படுத்தப்பட்டிருக்கின்றது எனக் குறிப்பிட்டு நீண்டதொரு உரையை உருக்கமாகப் பாராளுமன்றத்தில் நிகழ்த்தினார். அதே தினத்தில் அவருக்கு ஆதரவு தெரிவித்து ஒரு குழு பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்தியபோது அக்குழுவிற்குள்ளேயே முரண்பாடுகள் தோன்றியது.

விமல் வீரவன்ச நடவடிக்கைகளுக்குப் பதிலளிக்கும் முகமாக புதன்கிழமை தலைவர் சோமவன்ச ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நிகழ்த்தினார். தனி நபர்களின் நடவடிக்கைகளினால் ஒருபோதும் ஜே.வி.பி. பிளவுப்படப் போவதில்லை. விமல்வீரவன்ச மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் அம்பலப்படுத்தப்படுமேயானால் அதன் வாடை மிகவும் கொடூரமாக அமையும் என எச்சரித்ததுடன் நாம் இதுவரை எவரையும் வெளியேற்ற முடிவு செய்யவில்லை எனவும் குறிப்பிட்டார்.

விமல்வீரவன்ச ஜே.வி.பி. - இடதுசாரி மேடைகளில் அடுக்கு மொழிகளில் பேசினாலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை தீவிர வலதுசாரிப் போக்குடையதாகக் காணப்பட்டது. மேலும், ஜே.வி.பி.யை இனவாதப் போக்குடைய அமைப்பாக மக்கள் அடையாளப்படுத்துவதற்கும் இவரது இனவாத நடவடிக்கைகள் - பேச்சுக்கள் காரணமாக அமைந்திருந்தது. அத்துடன், அண்மைக்காலமாக கட்சி, மக்கள் மத்தியில் தனக்கிருந்த செல்வாக்கை இழப்பதற்கும் வீரவன்சவின் செயல்பாடுகள் அடிப்படையாக அமைந்திருந்தது எனக் கட்சி மதிப்பீடுகள் தெளிவுப்படுத்துவதாகச் சொல்லப்படுகின்றது.

"ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது எங்களுடன் கூட்டுச் சேருவதற்கு தரகர்கள் ஊடாக முயன்று வருகின்றது என்றாலும் நாங்கள் அவர்களுக்குச் சொல்கின்றோம். ஷ்ரீ.ல.சு. கட்சியுடன் இணைந்து தொழிலாளர்களுக்கு துரோகம் செய்கின்ற வேலையை எங்களுடைய தலைமுறையில் எவரும் செய்யமாட்டார்கள். நாங்கள் கட்சி தொடங்கியிருப்பதே இவர்களுக்கெதிராக செயல்படுவதற்காகவே நாங்கள் ஒருபோதும் அந்த அசிங்கமான வேலையைச் செய்து தொழிலாளர் வர்க்கத்தைக் காட்டிக்கொடுக்கமாட்டோம். எங்களில் எவரும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு வக்காலத்து வாங்கமாட்டார்கள். இவர்களுடன் இணைவதை விட, எங்களை வரிசையாக நிறுத்தி சாக்கடையொன்றில் போட்டு சுட்டுக் கொல்வது மேலானது...." என 1976.09.26 இல் விஜேவீர பேசினார்.

அவரது இந்த உரைக்கு கரகோசம் அப்போது கிடைத்தது. அத்துடன், ஷ்ரீ.ல.சு.கட்சியுடன் இணைந்து செயல்பட்டதால் லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஷக் கட்சிகளுக்கு நடந்திருக்கின்ற நிலைமைகளையும் அவர் அங்கு சுட்டிக் காட்டினார்.

இன்று எவருடன் சேரக்கூடாது எனத் தலைவர் சொன்னாரோ அவர்களுடன் சேர்ந்து கட்சி பெரும் இக்கட்டில் மாட்டிக்கொண்டிருக்கின்றது.

விஜேவீரவிற்குப் பின்னர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட நந்தன குணத்திலக்கவும் பிரசாரச் செயலாளர் விமல்வீரவன்சவும் இணைந்து ஷ்ரீ.ல.சு.கட்சியுடன் கட்சியை கூட்டுச் சேர வைப்பதில் ஆர்வமாகச் செயலாற்றினார்கள்.

1994 ஜனாதிபதித் தேர்தலின் போது மங்கள சமரவீரவின் சகா ருவன் பேடிநெஸ் ஊடாக ஜே.வி.பி. மங்கள சமரவீரவுடன் பேச விரும்புவதாக தகவல் கொடுக்கப்பட்டது. அதற்கு மங்களவினதும் சம்மதமும் கிடைக்கப் பேச்சுவார்த்தையில் ஜே.வி.பி. சார்பில் நந்தன குணதிலக்கவும் விமல் வீரவன்சவும் கலந்துகொண்டனர். ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க ஜனாதிபதி முறைமையை நீக்க இணக்கம் தெரிவித்தால் தமது கட்சி வேட்பாளராக நிறுத்தவுள்ள கலப்பத்தியை தாம் போட்டியிலிருந்து விலக்கிக் கொள்வதாக நிபந்தனை விதித்தனர். இந்தக் கோரிக்கை ஷ்ரீ.ல.சு. கட்சிக் கூட்டத்தில் ஆராயப்பட்டு அதற்கு அங்கீகாரமும் கிடைத்தது. சந்திரிகா குமாரதுங்க கொடுத்த எழுத்து மூலமான உறுதி மொழியை அடுத்து ஜே.வி.பி. ஜனாதிபதித் தேர்தலிலிருந்து பின்வாங்கிக்கொண்டது.

(தொடர்ச்சி Sunday Thinakkural 02 ஆம் பக்கம் பார்க்க)

Email this page Your Opinion Print this page
புதிய கள முனைகளை திறப்பதற்கு முயற்சி?
சந்திப்பின் பின்னணி என்ன?
கிழக்குத் தேர்தல்: ஒரேயொரு அப்பமும் ஏராளமான குரங்குகளும்!
பாகிஸ்தான், சீன அணுகுமுறைகளை பின்பற்றி வரும் மகிந்த ராஜபக்‌ஷ அரசு
கடலின் அக்கர போனோரோ!
இயக்க வரலாற்றில் மிகப் பெரும் நெருக்கடி வீதிக்கு வந்திருக்கும் ஜே.வி.பி. மோதல்கள் !
தமிழர்களின் கூட்டிருப்பை சிதைப்பதே கிழக்குத் தேர்தலின் பிரதான இலக்கு
பொல்லா வேடச் சாக்கியப் புல்லர்
தாய்லாந்து சிறையில் தமிழ்ப் பெண்கள் அனுபவிக்கும் நரக வேதனை
சமநிலையில் சறுக்கு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com