Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, April 20, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
பாகிஸ்தான், சீன அணுகுமுறைகளை பின்பற்றி வரும் மகிந்த ராஜபக்‌ஷ அரசு
[20 - April - 2008] [Font Size - A - A - A]
தாரகா

தமிழர் பிரச்சினைக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியான அணுகுமுறை தீர்வாக அமையாது என்றெல்லாம் பல்வேறு தரப்பினரும் தமது அபிப்பிராயங்களைச் சொல்லி வருகின்றனர். அதிலும் இந்தியா எல்லோரையும் மிஞ்சுமளவிற்கு அரசியல் தீர்வு பற்றிய வாய்ச்சவாடல்களை உதிர்த்து வருகிறது. ஆனால், நிலைமையோ முற்றிலும் தலைகீழாக இருக்கின்றது.

இலங்கையில் தமிழருக்கு பிரச்சினையா? அப்படியொரு பிரச்சினையே இல்லை. அது பற்றி பேசுவதற்கான ஒரு இடைவெளியே இருக்கக் கூடாது என்னும் வகையிலான அரசியல், இராணுவ கொள்கை முன்னெடுப்புகளையே சிங்களம் கடைப்பிடித்து வருகிறது. சிங்களத்தின் சமீபகால அரசியல், இராணுவ அணுகுமுறைகளை உற்று நோக்கும் ஒருவருக்கு இது வெள்ளிடை மலையாகும்.

இன்று மகிந்த தலைமையிலான சிங்களத்தின் அணுகுமுறையில் இரண்டு விடயங்களை நாம் அவதானிக்கலாம். ஒன்று, புலிகள் மீது சிறிதாகவும் தொடர்ச்சியாகவும் தாக்குதல்களைத் தொடுப்பதன் மூலம் நீண்டகால நோக்கில் புலிகளை அழித்துவிடலாம் என்ற நம்பிக்கை. இரண்டு , போராடும் தரப்பினரின் நியாயங்கள் எந்த வகையிலும் செவிமடுக்கத்தக்கவை அல்ல என்ற வகையில் மக்கள் மீது மிக மூர்க்கமான ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து வருகின்றமை. இதில் எந்தவிதத்திலும் சர்வதேச நியமங்களுக்கோ , மனிதாபிமான வேண்டுகோள்களுக்கோ தலைசாய்க்காத தன்மையையே சிங்களம் தனது அரசியல் நிலைப்பாடாக வெளிப்படுத்தி வருகிறது. நான் குறிப்பிட்ட முதலாவது அணுகுமுறையானது பல தசாப்தங்களாக பாகிஸ்தான் தனது வரலாற்று எதிரியான இந்திய இராணுவ ஸ்திரத்தன்மையை பலவீனப்படுத்தும் நோக்கில் கைக் கொண்டுவரும் ஒரு இராணுவ உத்தியாகும்.

சிறு சிறு ஊடுருவல்கள், காஷ்மீர் ஊடாக எல்லைதாண்டும் கிளர்ச்சியாளர்களை ஊக்குவித்தல் போன்றவற்றின் மூலம் நேரடியாக மோதி வெல்ல முடியாத தனது எதிரியை நீண்டகாலத்தில் பலவீனப்படுத்தலாம் என்று பாகிஸ்தான் கருதுகிறது. அதாவது, ஒரு வாள் வீச்சில் வெட்டி வீழ்த்தி சாதிக்க முடியாததை ஆயிரம் சிறு காயங்களை ஏற்படுத்துவதன் மூலம் சாதிக்கலாம் என்பதுதான் பாகிஸ்தானிய இராணுவ அணுகுமுறையாகும்.

அதேவேளை, பாகிஸ்தான் உள்ளக மட்டத்தில் கிளர்ச்சியாளர்களை அடக்குவதில் முழுக்கவும் இராணுவ ரீதியான அழித்தொழிப்பு கொள்கையையே கடைப்பிடித்துவரும் ஒரு நாடாகும். குறிப்பிட்ட கிளர்ச்சிக் குழுவின் தலைவர்களை அழித்தொழித்துவிட்டால் பின்னர் இலகுவாக பிரச்சினைகளைக் கையாள முடியுமென்பதே பாகிஸ்தானிய அணுகுமுறையாகும். சமீபத்தில் பழங்குடி இனப் போராட்டத் தலைவர் இவ்வாறான பாக். உத்திக்குப் பலியானார்.

இதற்கென பாகிஸ்தான் இலக்கு நோக்கி தாக்கும் விமானங்களையே பெருமளவு பயன்படுத்தி வருகின்றது.

நான் குறிப்பிட்ட இரண்டாவது, சீனா உள்நாட்டில் ஏற்படும் அரச இயந்திரத்திற்கு எதிரான கிளர்ச்சிகளைக் கையாளும் முறையைச் சுட்டுவதாகும். சமீபகால சீனா உள்நாட்டில் எழும் பிரச்சினைகளின் போது அவ்வாறானதொரு பிரச்சினைக்கான அடித்தளமே இல்லை என்பதை நிரூபிக்கும் வகையிலான அணுகுமுறைகளையே கைக்கொண்டு வருகிறது. முதலில் கிளர்ச்சித் தரப்பினரை மிக மோசமான முறையில் பலவீனப்படுத்தல் அல்லது அழித்தொழித்தல் பின்னர் அவ்வாறானதொரு பிரச்சினையே இல்லை என்பதாக பிரசாரப்படுத்தல் என்பவைகள் தான் சீன உத்தி.

சமீபத்தில் திபெத்தில் இடம்பெற்ற மக்கள் எழுச்சியின் போது சீனா நடந்து கொண்ட முறையை இந்த இடத்தில் நினைவு கொள்ளலாம். இதன்போது சீனா எந்தவகையிலும் சர்வதேச நியமங்களையோ , மனித உரிமைகள் அமைப்பின் கோரிக்கைகளையோ கருத்தில் எடுத்திருக்கவில்லை. நான் இவ்வாறு குறிப்பிடுவதானது நம்மத்தியில் இருக்கும் சீன காதலர்களுக்கு ஆத்திரமூட்டலாம் என்பது வேறு விடயம்.

சமீபகாலமாக மகிந்த தலைமையிலான ஆளும் அரசு தமிழர் பிரச்சினையைக் கையாள்வதில் மேற்படி இரண்டு அணுமுறைகளையும் முடிந்தளவு பிரயோகித்து வருகிறது. கிழக்கில் ஏற்பட்ட இராணுவ நிலைப்பட்ட புறச் சூழலை தனது வெற்றியாக்கிக் கொண்ட சிங்களம் வடக்கிலும் மும்முனைகளாலும் வன்னிக்குள் நுழைவதற்கான தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றது.

அதேவேளை, வன்னி மக்கள் குடியிருப்புகள் மீதும் தொடர்ச்சியான விமானத் தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகிறது. இதில் புலிகளின் தலைவர்களை இலக்கு வைத்து அழிக்கும் தாக்குதல்களும் அடங்கும். மகிந்த அரசின் இராணுவ ரீதியான திட்டங்கள் இவ்வாறிருக்க மறுபுறமாக கிழக்கில் தேர்தல், 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்ற சுலோகங்களின் கீழ் புலிகளுக்கு எதிரான குழுக்களை ஒருங்கிணைத்துக் களத்தில் இறக்கியிருக்கிறது.

சிங்களத்தின் மேற்படி இரண்டு அணுகுமுறைகளும் புலிகளை இராணுவ ரீதியாக சிறுகச் சிறுக அழித்து தமிழர் போராட்டத்திற்கான நியாயங்களை முற்றிலும் இல்லாதொழித்தல் என்னும் கொள்கை முன்னெடுப்பைக் கொண்டதாகும். வடக்கில் புலிகளை இராணுவ ரீதியாக ஓரங்கட்டுவதற்கான தொடர்ச்சியான தாக்குதல்களை முன்னெடுத்துவரும் சிங்களம் கிழக்கிலோ தமிழர் போராட்டத்திற்கான வரலாற்று நியாயங்களை இல்லாமலாக்கும் வகையிலான பல்வேறு தமிழர் தேசிய எதிர்க்குழுக்களை ஒருங்கிணைத்து வருகிறது. அவர்களுக்கான சட்ட அந்தஸ்தை வழங்கும் நோக்கில் ஒரு தேர்தல் நாடகத்தையும் அரங்கேற்றியிருக்கிறது.

மேற்படி சிங்களத்தின் இரண்டு அணுகுமுறைகளும் வரலாற்று அனுபவத்தில் தோல்வியடைந்த படிப்பினைகளாகும் என்பதை, இந்த இடத்தில் மீளவும் தெளிவுபடுத்த வேண்டிய அவசியமிருக்காது என்றே நினைக்கிறேன்.

இந்த இடத்தில் இந்தியாவின் கவலை ஒன்றும் உண்டு . பாகிஸ்தானின் `ஆயிரம் சிறுகாயங்கள்" இராணுவ அணுகுமுறை மற்றும் சீனா சார்ந்த பிரச்சினைகளை தந்திரோபாயமாக எதிர்கொண்டு வரும் இந்தியா மகிந்த அரசு இவ்வாறான மூர்க்கமான அணுகுமுறைகளைக் கையாள்வது இராணுவ ரீதியில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்திவிடுமென்று நியாயமாகவே கருதுகிறது. இந்தியாவின் ஒடுக்குமுறை கொள்கையானது பாகிஸ்தானிய, சீன அணுகுமுறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். பல்வேறு வகையான மக்கள் பிரிவுகளை தன்னகத்தே கொண்டிருக்கும் இந்தியா தேசங்களின் சிறைக் கூடமாக இருந்து வருகிறது. இந்த உண்மையை கருத்தில் கொண்டே இந்தியா போராட்ட அமைப்புக்களை கையாள்வதற்கான கொள்கைகளை வகுத்து வருகிறது. முழுமையான அழித்தொழிப்பு இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதை விடுத்து படிப்படியாக சிதைவடையச் செய்தல், இடைவெளிகளை உருவாக்கி குழப்பங்களை உருவாக்குதல், பல்வேறு வகையான சிந்தனைகளை ஊடுருவச் செய்தல், சலுகைவாத அரசியல் தலைமைகளை வளர்த்தல் போன்ற தந்திரோபாயங்கள் மூலமே இந்தியா போராட்ட சக்திகளை கையாண்டு வருகிறது.

போராட்ட சக்திகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எந்த வகையிலும் நீண்ட கால நோக்கில் போராட்ட சக்திகளுக்கு சாதகமாக மாறிவிடக் கூடாது என்பதில்தான் இந்தியா கவனம் கொள்கின்றது. சமீபத்தில் சீனா திபெத் விடயத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் திபெத் விடயத்தை மேலும் சர்வதேசமயப்படுத்துவதற்கே பயன்பட்டது என்பதை இங்கு குறித்துக் கொள்ளலாம். இந்தியாவின் நக்சல்பாரி எழுச்சிகள் இவ்வாறு சர்வதேச தன்மையை பெறும் வகையில் இந்தியா நடந்து கொள்ளவில்லை.

ஆனால், இதில் ஒரு சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், இன்று இலங்கை பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றி பேசிவரும் இந்தியா கடந்த காலங்களில் முற்றிலும் பிழையானதொரு கொள்கை முன்னெடுப்பையே தமிழர் பிரச்சினையில் கைக்கொண்டிருந்தது. தனது உள்ளக மட்டத்தில் நான் மேலே குறிப்பிட்டவாறான அணுகுமுறைகளை கடைப்பிடித்தாலும் புலிகள் விடயத்தில் அவ்வாறானதொரு கொள்கை முன்னெடுப்பை பின்பற்றியிருக்கவில்லை. ஆரம்பம் முதலே விடுதலைப் புலிகளை மக்கள் மத்தியில் இருந்து தனிமைப்படுத்தும் நோக்கிலேயே இந்தியப் படைகள் செயற்பட்டன. சில நாட்களில் புலிகளை அழித்தொழித்து விடலாம் என நம்பிய இந்திய இராணுவ கொள்கை வகுப்பினர் அதற்கான தந்திரோபாயமாகவே மக்களிலிருந்து புலிகளை அந்நியப்படுத்தும் உபாயங்களில் கவனம் செலுத்தினர். இந்தியாவின் இந்த இறுமாப்பு மிக்க அரசியல் நிலைப்பாடுதான். இறுதியில் இந்திய தோல்வி அனுபவத்தில் இந்திய - புலிகள் யுத்தத்தையும் இணைத்துக் கொள்ளும் துர்பாக்கியத்திற்கு ஆளாக நேர்ந்தது.

மகிந்த தலைமையிலான சிங்களத்தின் மேற்படி போக்கானது, சிங்களம் சமீபகாலமாக சீன, பாகிஸ்தானிய அரசுகளுடன் நெருங்கியிருக்கிறது என்பதைத்தான் கோடிட்டுக் காட்டுகின்றது. சிங்களத்திற்கான சீன, பாகிஸ்தானிய ஆயுத உதவிகள் மற்றும் பொருளாதார ஊக்குவிப்புகள் அதிகரித்து வரும் நிலையிலும் அவர்களின் இராணுவ ஆலோசனை பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் பின்புலத்திலும்தான் நாம் இதனை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. சிங்களத்தின் இந்த நெருக்கத்தினால் கலக்கமடைந்த இந்தியா தானும் தனது பங்கிற்கு களமிறங்கியிருக்கிறது. இவ்வாறான போக்குகள் அனைத்தும் மறைபொருளாக உணர்த்தும் செய்தி என்னவென்றால் என்னதான் அரசியல் தீர்வு பற்றி வாய் கிழியப் பேசினாலும் தேவைப்படுவது என்னவோ இராணுவ பலம்தான். சிங்களம் எல்லாத் தரப்பினரையும் பயன்படுத்தி தனது இராணுவ ஆற்றலை பெருக்கிக் கொள்ளும் போது தமிழர் தேசம் மட்டும் அதிலிருந்து எவ்வாறு விலகி நிற்க முடியும்?.

Email this page Your Opinion Print this page
புதிய கள முனைகளை திறப்பதற்கு முயற்சி?
சந்திப்பின் பின்னணி என்ன?
கிழக்குத் தேர்தல்: ஒரேயொரு அப்பமும் ஏராளமான குரங்குகளும்!
பாகிஸ்தான், சீன அணுகுமுறைகளை பின்பற்றி வரும் மகிந்த ராஜபக்‌ஷ அரசு
கடலின் அக்கர போனோரோ!
இயக்க வரலாற்றில் மிகப் பெரும் நெருக்கடி வீதிக்கு வந்திருக்கும் ஜே.வி.பி. மோதல்கள் !
தமிழர்களின் கூட்டிருப்பை சிதைப்பதே கிழக்குத் தேர்தலின் பிரதான இலக்கு
பொல்லா வேடச் சாக்கியப் புல்லர்
தாய்லாந்து சிறையில் தமிழ்ப் பெண்கள் அனுபவிக்கும் நரக வேதனை
சமநிலையில் சறுக்கு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com