கலைஞன்
இந்திய அரசியலில் தற்போது விலைவாசி உயர்வு விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில் அதனை விடவும் பெரிதாக, ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளி நளினியை வேலூர் சிறையில் பிரியங்கா காந்தி சந்தித்து பேசிய விடயம் பூதாகரமாக வெடித்துள்ளதுடன், இது தொடர்பான வாதப்பிரதிவாதங்களுடன் இச்சந்திப்பின் சாதக, பாதக தன்மைகளும் அலசி ஆராயப்படத் தொடங்கியுள்ளன.
நளினியை பிரியங்கா காந்தி சந்தித்ததன் பின்னணியில் காங்கிரஸ் கட்சியின் அரசியல்சார் நலன்களா அல்லது இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான விடயங்களா மையப்படுத்தப்பட்டன என்ற ரீதியிலேயே தற்போது விமர்சனங்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளன.
ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டமையானது இந்தியாவுக்கும் இலங்கைத் தமிழருக்குமிடையே கடந்த 17 வருடங்களாக பாரிய வெற்றிடமொன்றை ஏற்படுத்திவிட்ட நிலையில், அக்கொலையுடன் சம்பந்தப்பட்ட நபரொருவரை பிரியங்கா காந்தி இரகசியமாக சந்தித்தமை சாதாரண விடயமல்ல.
ஆனாலும், நளினியை பிரியங்கா காந்தி சந்தித்ததன் மூலம் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியும் அதன் மத்திய அரசும் கரிசனை காட்டத் தொடங்கிவிட்டதாகவும் இச்சந்திப்பு இந்தியாவுக்கும் இலங்கைத் தமிழருக்குமிடையே மீண்டுமொரு நட்புறவை, இரத்த பாசத்தை, ஏற்படுத்திவிட்டதாகவும் இந்தியா மற்றும் இலங்கையில் ஒரு சாரார் கூறுவது அவ்வளவு புத்திசாலித்தனமானதல்ல.
காங்கிரஸ் கட்சியையோ மத்திய அரசையோ பொறுத்தவரை அவர்கள் நாராயணன்கள், சிவ்சங்கர்மேனன்களின் அறிவுரையின்றியும் உளவுத்துறையான `றோ'வின் வழிகாட்டுதல்களின்றியும் ஒரு அணுவைக் கூட அசைக்க மாட்டார்கள்.
இவ்வாறான நிலையில் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் நாராயணனுக்கோ அல்லது `றோ' வின் மேல் மட்டங்களுக்கோ தெரியாமல் பிரியங்கா காந்தி நளினியை சந்திப்பதற்கு வாய்ப்புகளில்லை. எனவே, இவர்களின் ஆசிர்வாதத்துடனேயே இச்சந்திப்பு இடம்பெற்றிருக்கும்.
அத்துடன், பிரியங்கா காந்தி நளினியை சந்திப்பதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசுக்கோ அதன் உளவுத்துறைக்கோ தெரியாமல் மிகவும் ரகசியமான முறையில் மத்திய அரசின் உளவுத்துறையே செய்து கொடுத்துள்ளது.
எனவே, இச்சந்திப்பு விடயத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை பின்னணியில் இருப்பதற்கான சாத்தியங்களில்லை. ராகுல் காந்தியை கொண்டு மத்திய பிரதேசங்களில் செய்யும் தேர்தல் பிரசார யுக்தியை பிரியங்கா காந்தியை கொண்டு காங்கிரஸின் தலைமை தமிழகத்தில் செய்துள்ளது.
இதனாலேயே, இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக ஒரு சிறு துருப்பு அசைந்தாலும் அலறித் துடிக்கும் இந்திய மேல் தட்டு வர்க்கம் இந்த விடயத்தில் இதுவரை எந்தவிதமான கருத்துக்களையும் கண்டனங்களையும் வெளியிடாது மௌனம் காத்து வருகின்றன.
இதேவேளை, நளினியுடனான சந்திப்புக் குறித்து கருத்து வெளியிட்ட பிரியங்கா காந்தி, வன்முறை, பகை எண்ணம், பழி உணர்ச்சி எதுவும் தன்னிடமோ தனது குடும்பத்திடமோ இல்லையெனவும் இந்த உணர்வுகள் தம்மை ஆட்கொள்ள தாம் அனுமதிப்பதில்லையெனவும் கூறியுள்ளதுடன், நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக்கிய கருணையுள்ளம் கொண்டவர் தனது தாய் சோனியா எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரியங்கா காந்தி கூறுவது போல் அவர்களிடம் வன்முறை, பகை உணர்வு, பழிவாங்கும் எண்ணங்கள் இல்லாவிட்டால் ராஜீவ்காந்தி படுகொலையின் பின்னர் கடந்த 17 வருடங்களாக அயல்நாடான இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்க்க முடியுமா? அல்லது இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கும் இடம்பெயர்வுகள், துன்பங்களை அனுபவிப்பதற்கும் காரணமான இலங்கை அரசுக்கு இராணுவ உதவிகளையும் பொருளாதார வளங்களையும் அள்ளிக்கொடுக்க முடியுமா? இலங்கை அரசுக்கு இராணுவ உதவிகள் வழங்க வேண்டாமென தமிழகத்திலுள்ள தமிழின உணர்வாளர்கள் எத்தனையோ போராட்டங்களை நடத்திய போதும் அதனை கிஞ்சித்தும் கவனத்திலெடுக்காது இருக்க முடியுமா?
ராஜீவ்காந்தி கொலைக்கு முன், ராஜீவ்காந்தி கொலைக்கு பின் என்ற ரீதியில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை தமிழக அரசு அணுகுவதற்கான அழுத்தங்களையும் நெருக்கடிகளையும் கொடுத்தது இந்தக் காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய அரசு தான்.
அத்துடன், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நாடுகள் இலங்கையை தண்டிக்க முற்படும் போதெல்லாம் இலங்கையை காப்பாற்றி அம்மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்தும் பெருமையும் பிரியங்கா கூறும் சிறப்பியல்புகளைக் கொண்ட காந்தி குடும்பத்தையே சேரும்.
எனவே, நளினியுடனான பிரியங்கா காந்தியின் சந்திப்பு எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு தமிழக மக்களை கவரும் ஒரு திட்டமாகவேயுள்ளது. மத்திய பிரதேசங்களில் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு பிரசாரங்களில் ஈடுபட்டுவரும் ராகுல்காந்தி, ஆதிவாசிகளின் வீடுகளில் படுத்துறங்கியும் ஏழை எளியவர்களின் வீடுகளில் விருந்துண்டு மகிழ்ந்தும் மக்களை கவர முயன்றுவருகிறார். இதற்கு ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.
இவ்வாறான ஒரு பிரசாரத்தை தமிழகத்தில் முன்னெடுப்பதற்காக தமிழக மக்களின் நாடிபிடித்துப் பார்த்து, எங்கே அடித்தால் எங்கே வலிக்கும் என்பதை தெரிந்துகொண்டு நடத்தப்பட்டதே பிரியங்கா காந்தி நளினி சந்திப்பாகும்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி உட்கட்சிப் பூசல்களாலும் கோஷ்டி மோதல்களாலும் சின்னாபின்னமாகி வரும் நிலையில், நளினியுடனான பிரியங்காவின் சந்திப்பு இடம்பெற்றதும் அது தற்போது தமிழகத்தில் மட்டுமன்றி இலங்கையிலும் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியதும் கவனிக்கப்பட வேண்டியது.
தமது பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் அணுகுமுறையில் மாறுதல்கள் ஏற்பட வேண்டுமென பலவழிகளிலும் முயன்று தோற்றுப்போன இலங்கைத் தமிழர்களும் அவர்கள் சார்பு அமைப்புகளும் ராஜீவ் கொலைக் குற்றவாளியான நளினியை பிரியங்கா காந்தி சந்தித்த விடயத்தை தமக்கு சாதகமானதாகவே கருத முற்படுகின்றனர். பிரியங்கா - நளினி சந்திப்பு மூலம் மத்திய அரசு தமக்கு எதனையோ சொல்ல முற்படுவதாக அவர்கள் நினைக்கின்றனர்.
ஆனால், இந்திய அரசியலைப் பொறுத்தவரை அதில் ஆதிக்கம் செலுத்திவரும் மேல் தட்டு வர்க்கம் என்பது எப்பவுமே தமது அரசியல் நலன்களுக்கு அப்பாற்பட்டு எதனையும் சிந்திப்பதற்கோ, செய்வதற்கோ முயன்றதில்லை.
இவ்வாறான நிலையில் நளினியுடனான பிரியங்காவின் சந்திப்பின் மூலம் தமக்கு விமோசனம் கிடைக்குமென இலங்கைத் தமிழர் எதிர்பார்ப்பது அவ்வளவு விவேகமானதல்ல.
இனி வேலூர் சிறையில் பிரியங்கா காந்தி - நளினி சந்திப்பு எவ்வாறு நடந்தது என்ற விடயத்துக்கு வருவோம்.
கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி தமிழக அரசுக்கோ அதன் உளவுத்துறைக்கோ தெரியாமல் சென்னைக்கு வந்த பிரியங்கா காந்தி. வேலூர் சிறையில் நளினியை சந்தித்து 19 நிமிடங்களுக்கு மேலாக பேசிய விடயம் ஒரு மாதம் வரை தெரியாத நிலையில் தற்போது அவ்விடயம் வெளிப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியினதும் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தியினதும் மகளான பிரியங்கா காந்தி, தமிழக அரசுக்கும் அதன் உளவுத்துறைக்கும் தெரியாமல் தமிழகம் வந்து சென்றமை அப்போது பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியிருந்தது. தமக்குத் தெரியாமலே தமிழகம் வந்து தமக்குத் தெரியாமலே பிரியங்கா காந்தி டில்லி சென்றமை தமிழக உளவுத்துறைக்கு பெரும் அவமானத்தையும் தமிழக அரசுக்கு பெரும் ஏமாற்றத்தையும் கொடுத்ததால் இரு தரப்புமே அப்போது பிரியங்காவின் விஜயத்தை மறுத்திருந்தன.
தமிழகம் வருவதானால் உள்துறை செயலகத்துக்கு தகவல் தெரிவிக்காமல் அவர் வரமுடியாது. அப்படி வந்திருந்தாலும் அவர் புறப்பட்டுச் செல்லும் போதாவது காங்கிரஸ் கட்சித் தலைவர்களாவது சந்தித்திருப்பார்கள். குறைந்தபட்சம் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியாவது விமான நிலையத்திற்கு சென்று ஒரு பூங்கொத்தாவது கொடுத்து வரவேற்றிருப்பார் அல்லது வழியனுப்பி வைத்திருப்பார். எனவே, பிரியங்கா தமிழகம் வந்தார் என்ற செய்தியில் உண்மை இல்லையென உளவுத்துறையினர் வாதிட்டனர்.
ஆனால், மார்ச் மாதம் 19 ஆம் திகதி காலை டில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த பிரியங்கா காந்தி பின்னர் அங்கிருந்து கார்மூலம் ஷ்ரீபெரும்புதூரிலுள்ள தந்தை ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அங்கிருந்து வேலூர் ஷ்ரீபுரம் பொற்கோவிலுக்கு காரில் வந்தார். அங்கு தரிசனம் முடித்த பின்னர் மீண்டும் சென்னை சென்று மாலையில் டில்லி புறப்பட்டுச் சென்றார். இந்த விடயங்களை மட்டுமே மத்திய புலனாய்வுத்துறையினர் பின்னர் தெரிவித்து பிரியங்காவின் விஜயத்தை உறுதிப்படுத்தினர்.
நளினியை பிரியங்கா காந்தி மார்ச் மாதம் 19 ஆம் திகதி சந்தித்த விடயம் கடந்தவாரம் நளினியை அவரின் தாயார் சிறையில் சந்திக்கச் சென்ற போது தெரிய வந்ததையடுத்தே பெரும்பரபரப்புகள் ஏற்பட்டன.
நளினியை அவரின் தாயார் சந்திக்கச் சென்றபோது, தன்னை பிரியங்கா காந்தி வந்து சந்தித்த விடயத்தை கூறிய நளினி இதனை தனது வழக்கறிஞர் துரைசாமியிடம் தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து, தனது உதவி சட்டத்தரணி இளங்கோவனை நளினியை சந்திக்க அனுப்பிய சட்டத்தரணி துரைசாமி, பிரியங்கா நளினியை சந்தித்ததை உறுதிப்படுத்திக் கொண்டார். அதன் பின்னரே ஊடகங்கள் இச்செய்தியை போட்டி போட்டு பிரசுரித்தன. ஹிந்துஸ்தான் ரைம்ஸ், பத்திரிகையே இச் செய்தியை முதலில் பிரசுரித்து பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக அரசுக்கே தெரியாமல் தமிழகம் வந்து சென்ற பிரியங்கா காந்தி வேலூர் சிறைக்குச் சென்று ராஜீவ் கொலைக் குற்றவாளி நளினியை பாதுகாப்பு விதிமுறைகளை மீறிச் சந்தித்ததுடன், அதனை பின்னர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டமை தமிழக அரசை தலைகுனிய வைத்துள்ளதுடன், இவ்வாறான ஒரு சந்திப்பு தமிழக உளவுத்துறைக்கு தெரியாமல் எவ்வாறு நடக்க முடியுமென்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
வேலூர் சிறையில் பிரியங்கா - நளினி சந்திப்பு
கடந்த மாதம் 19 ஆம் திகதி மிகவும் ரகசியமான முறையில் தனி விமானத்தில் பிரியங்கா தமிழகம் வந்தார். சென்னை விமான நிலையத்திற்குள்ளிருந்து சாதாரணமான காரொன்றில் அவர் வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். பிரியங்காவின் வருகையை தமிழக உளவுத்துறைக்குக் கூடத் தெரிவிக்காமல் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் ரகசியமாக வைத்திருந்தனர்.
சென்னையிலிருந்து ஷ்ரீபெரும்புதூர் சென்ற பிரியங்கா அங்கு ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அமர்ந்து 30 நிமிடங்கள் தியானம் செய்தார். பின்னர் அங்கிருந்து ஷ்ரீபுரம் பொற்கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். இதன் பின்னரே ராஜீவ் கொலைக் குற்றவாளியான நளினியை சந்திப்பதற்காக வேலூர் சிறைக்கு பிரியங்கா ரகசியமாகச் சென்றார். பிரியங்காவின் வருகையை வேலூர் சிறை அதிகாரிகள் எதிர்பார்க்காததால் அதிர்ச்சியடைந்தனர். சிறை விதிமுறைகளை மீறிய பிரியங்கா
சிறையில் உள்ள கைதி ஒருவரை அவர் சம்மதிக்கும் பட்சத்தில் யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். ஆனால், ஏராளமான கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் உள்ளன. ஆனால், பிரியங்கா அந்த விதிமுறைகளையெல்லாம் மீறியே நளினியை சந்தித்தார்.
சிறைக் கைதிகளை யார் சந்திக்க வந்தாலும் வருகைப் பதிவேட்டில் அவர்களின் பெயர் விபரம் பதிவு செய்யப்படும். ஆனால், பிரியங்கா வந்த விபரம் எதுவும் குறிப்பிடப்படாமல் `ஒரு பார்வையாளர் நளினியை பார்வையிட வந்தார்' என்று மட்டுமே பதிவு செய்யப்பட்டது.
பார்வையாளர் எத்தனை மணிக்கு வந்தார், எத்தனை மணிக்கு சென்றார் என்ற விபரங்கள் எதுவும் பதியப்படவில்லை. கைதிகளை பார்க்க வருபவர் முறைப்படி சிறைக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், பிரியங்கா விண்ணப்பம் எதுவும் கொடுக்கவில்லை.
கைதிகள், பாதிக்கப்பட்டவரின் இரத்த உறவினர் என்றால் அவருடன் காவலர் ஒருவர் இருக்க வேண்டுமென்ற விதியுள்ளது. ஆனால், அது கடைப்பிடிக்கப்படவில்லை. அத்துடன், வேலூர் சிறையில் செவ்வாய், மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டுமே கைதிகளை பார்வையிட முடியும். ஆனால், பிரியங்காவுக்கு புதன்கிழமை அனுமதி வழங்கப்பட்டது.
அத்துடன், அரசியல் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்றோர் கைதியை சந்திப்பதாகவிருந்தால் தமிழக அரசின் அனுமதி பெற்றேயாக வேண்டும். அந்த விதியும் மீறப்பட்டது.
இந்த விதிமுறை மீறல்கள் தொடர்பில் தமிழக அரசோ பொலிஸாரோ இதுவரை எந்தவிதமான பதில்களையோ விளக்கங்களையோ வழங்க முன்வரவில்லை.
(தொடர்ச்சி Sunday Thinakkural 02 ஆம் பக்கம் பார்க்க)