*ஜோர்ஜியா கோரிக்கை
டிபிலிசி: தனது பிராந்தியத்திலிருந்து பிரிந்து போயுள்ள அப்ஹாஸியா மற்றும் தென் கொரியா ஆகிய மாகாணங்களுடனான உறவைப் பலப்படுத்துவதென்ற தீர்மானத்தை ரஷ்யா மீளாய்வு செய்ய வேண்டுமென ஜோர்ஜிய ஜனாதிபதி மிக்ஹைல் சாகஸ்விலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அப்ஹாஸியா, தென் ஒசிரியா ஆகியவற்றுக்கு தீவிரமாக ஒத்துழைப்பு வழங்கப் போவதாக கடந்த புதன்கிழமை ரஷ்யா அறிவித்திருந்தது. ஜோர்ஜியாவின் இறையாண்மையை மீறும் சகல தீர்மானங்களையும் ரஷ்யா மீளாய்வு செய்ய வேண்டுமென நாம் கோரிக்கை விடுக்கிறோம் என சாகஸ்விலி தெரிவித்துள்ளார். அத்துடன் ரஷ்யாவிடம் தீவிரமான இராஜதந்திர நடவடிக்கைகளை எதிர்பார்ப்பதாகவும் சாகஸ்விலி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ்விரு மாகாணங்களுடனான உறவை பலப்படுத்துவதென்ற ரஷ்யாவின் தீர்மானத்தை நேட்டோவும் ஜரோப்பிய ஒன்றியமும் ஏற்கனவே விமர்சித்திருந்தது. நேட்டோ பொதுச் செயலாளர் ஜாப் டி ஹுப் ஸ்ஹெபர் இது ஜோர்ஜியாவின் இறையாண்மையை சிர்குலைக்கும் செயலெனவும், ரஷ்யா தனது தீர்மானத்தை மீளாய்வு செய்ய வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
நேட்டோ தலைவரின் கருத்து மிகவும் முக்கியமானதெனத் தெரிவித்த சாகஸ்விலி இந் நிலைமை தொடர்பாக கலந்துரையாடும் ஜ.நா. பாதுகாப்பு சபையின் விசேட கூட்டமொன்றிற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில் நிலைமை மோசமடைவதை தாம் விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ள ரஷ்யா அப்ஹாஸியா மற்றும் தென் ஒசிரியா ஆகிய மாகாணங்களில் பெரும்பாண்மையாக வாழும் ரஷ்யர்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்கவே தாம் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளது.