இருபத்தொரு மாதங்களுக்கு முன்னர் அல்லைப்பிட்டியில் இருந்து முற்றாக இடம்பெயர்ந்த நூற்றியிருபத்தெட்டுக் குடும்பங்களும் அவர்களது பிரதேசத்தில் மீண்டும் குடியமர்த்தப்படவுள்ளனர்.
இவர்கள் அனைவரும் நாளை இருபத்தோராம் திகதி அல்லைப்பிட்டி தேவாலயத்தில் இடம்பெறும் வழிபாடுகளைத் தொடர்ந்து அவர்களது பகுதிகளில் குடியமர்த்தப்படவுள்ளனர்.
மீளக்குடியமரும் மக்களுக்கு சகல அடிப்படை வசதிகளையும் யாழ் செயலகம், உலக தரிசன இயக்கம், ஹரிற்றாஸ், கியுடெக் நிறுவனம் ஆகிய அமைப்புகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.
மீளக்குடியமரும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடுகளைப் புனரமைக்கவும் சுயமாக வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கான உபகரணங்களை கொள்வனவு செய்யவும் தலா இருபத்தையாயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது.
இப்பிரதேசத்துக்கான குடிநீர் வசதி, மின்இணைப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேலணை பிரதேச செயலகம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாசாலையும் நாளை இருபத்தோராம் திகதி முதல் சொந்தக் கட்டிடத்தில் இயங்குமென தீவக கல்வி வலயப் பணிமனை அறிவித்துள்ளது.