சென்னை: இலங்கை தமிழர்களுக்கு போலி கடவுச்சீட்டு மற்றும் விசா தயாரித்து கொடுத்தது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான போலி கடவுச்சீட்டுகள், போலி விசாக்கள், போலி முத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. கொலனி பசும்பொன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் `போலி கடவுச்சீட்டு' தயாரிப்பதாக மத்திய குற்றப் பிரிவு பொலிஸுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் துணை ஆணையர் விஜயகுமாரி, உதவி ஆணையர் செல்வராஜ், இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய பிரகாசம், உதவி இன்ஸ்பெக்டர் மஞ்சுளா ஆகியோர் கொண்ட தனிப்படை விசாரித்து வந்தது.
விசாரணையில் அந்த வீட்டில் இருந்த வித்யா சரவணன் மற்றும் மூர்த்தி ஆகியோர் இணைந்து இலங்கையைச் சேர்ந்த பலருக்கு கடவுச்சீட்டில் திருத்தம் செய்தும் போலி விசாக்களை தயாரித்து கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
`இலங்கையைச் சேர்ந்த குமார், குட்டி, செல்வரத்தினம், தமிழகத்தைச் சேர்ந்த சலீம் சேத்தி, ராமமூர்த்தி ஆகியோருக்கு கடவுச்சீட்டில் திருத்தம் செய்து கொடுத்துள்ளனர். எந்த நாட்டிற்கு செல்கிறார்களோ அந்த நாட்டின் விசாவை கணினி மூலமாகப் போலியாகத் தயாரித்து கொடுத்துள்ளனர்.
அமெரிக்கா, லண்டன், அவுஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு போலி விசாக்களை கணினியில் தயாரித்து கொடுத்துள்ளனர். அவர்களிடம் இருந்து 53 போலி கடவுச்சீட்டுகளும் 40 போலி விசாக்களும் 48 போலி முத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன' என்றார் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய பிரகாசம்.