* விடுவித்து தருமாறு பிரதியமைச்சரிடம் முறையீடு
கட்டுநாயக்கா அவரிவத்தையில் வர்த்தக ஸ்தாபனம் ஒன்றில் தொழில்புரியும் மலையக வாலிபர் ஒருவரை அவரிவத்தை பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாகவும் அவரை விடுவித்துத் தருமாறும் வாழ்க்கைத் தொழில், தொழில்நுட்ப பயிற்சி பிரதியமைச்சர் பெ.இராதாகிருஷ்ணனிடம் குறித்த வாலிபரின் தகப்பனார் புகார் செய்துள்ளார்.
விருத்தாசலம் குகநேசன் (26 வயது) என்ற இளைஞரே கடந்த 12 ஆம் திகதி இரவு 10 மணியளவில் வர்த்தக நிலையத்திலிருந்து தனது தங்குமிடத்துக்கு செல்லும் போது கைது செய்யப்பட்டுள்ளார். பிரஸ்தாப இளைஞரிடம் அடையாள அட்டை, வதிவிட பதிவு, உட்பட சகல ஆவணங்களும் இருந்தபோதும், "தமிழர்" என்பதாலேயே சந்தேகத்தின் பேரில் தடுத்துவைத்துள்ளதாக அவரிவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
பிரஸ்தாப இளைஞர் எதுவிதமான குற்றச் செயல்களிலும் ஈடுபடாதவர் என்றும் வடகிழக்குப் பகுதிகள் பற்றி எதுவும் அறியாதவர் என்றும் அப்பகுதியில் எதுவித தொடர்பும் இல்லாதவர் என்றும் தகப்பனார் பிரதி அமைச்சரிடம் தெரிவித்தார்.
இதற்கிடையில் இரகசியப் பொலிஸார் என்று தெரிவித்து வெள்ளைவானில் சென்ற ஒரு பெண்ணும் சிவில் உடையணிந்த ஆண்கள் சிலரும் நெடுந்தீவை பிறப்பிடமாகவும் திருமணம் முடித்து கடந்த 27 வருடமாக கல்கிசையில் வசித்து வருபவருமான 45 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரான ராசலிங்கம் வசந்தகுமாரி என்பவரை கடந்த வியாழக்கிழமை அழைத்துச் சென்றதாகவும் அவர் தற்போது 4 ஆவது மாடியில் இரகசியப் பொலிஸாரினால் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் குடும்பத்தினர் புகார் செய்துள்ளனர்.
4 ஆவது மாடியிலுள்ள பெண் பொலிஸாரான சந்திமா என்பவர் இவரைக் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. நோயாளியான இவரை எதற்காகக் கைது செய்துள்ளார்கள் என்று புரியவில்லை என அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.
இவ்விருவரையும் விடுவிப்பதற்காக உயர்மட்ட நீர்கொழும்பு பொலிஸாருடனும் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினருடனும் இரகசியப் பொலிஸாருடனும் பிரதி அமைச்சர் தொடர்புகொண்டுள்ளார்.
இதேவேளை, கடந்த 16 ஆம் திகதி 3 இராணுவத்தினரால் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்ட வர்த்தகர் கோவிந்தசாமி நாகநாதன் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.