யாழ். மாவட்டத்தில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களினால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதை தடுப்பதற்கு குடாநாட்டின் சகல கிராம சேவையாளர்கள் பிரிவுகளிலும் பத்துப்பேர் அடங்கிய விழிப்புக் குழுக்களை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலர்களையும் உதவி அரசாங்க அதிபர்களையும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே. கணேஷ் கோரியுள்ளார்.
குடாநாட்டில் திருட்டுகள் , மரவளங்களை அழித்தல் , சட்டவிரோத மின்பாவனை , சட்டத்துக்குப் புறம்பாக ஆடு மாடுகளை வெட்டி இறைச்சி விற்பனை. குடத்தனை மணல்திட்டி தவிர்ந்த இடங்களில் களவாக மண் ஏற்றுதல், கசிப்பு உற்பத்தி விற்பனை போன்ற குற்றச் செயல்கள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளதையடுத்தே அரச அதிபர் மேற்கண்ட குழுவை அமைக்குமாறு கோரியுள்ளார்.
சமுதாய நலனில் அக்கறையுடைய தனிமனிதரோ, சமூக சமய நிறுவனங்களோ , பொது அமைப்புகளோ இந்த விழிப்புக் குழுக்களில் இணைந்து கொள்ள முடியுமென அரச அதிபர் தெரிவித்ததுடன் இந்த குற்றச் செயல்களைத் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இக்குழுவினர் தகவல் வழங்குவதன் மூலமே தடுக்க முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.