* 8 சந்தேக நபர்கள் கைது
அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் கொலை தொடர்பாக எண்மர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம், இந்தக் கொலைக்கான திட்டம் தெஹிவளை அத்திட்டிய பகுதியில் தயாரிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பகுதியில் கொலையாளி சுமார் இரு வாரங்கள் தங்கியிருந்தது விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
அமைச்சர் மீதான தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர் பயன்படுததியதாகக் கருதப்படும் கையடக்கத் தொலைபேசியின் `சிம்கார்ட்' அந்தப் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டு அதன் மூலம் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் சி.ஐ.டி.யினர் தெரிவிக்கின்றனர்.
அமைச்சர் மீதான தாக்குதல் தொடர்பான திட்டத்தை ஒரு குழுவினரே தயாரித்துள்ளதாகவும் இந்தக் குழுவின் தலைவர் தற்போது தலைமறைவாகிவிட்டதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
இதேநேரம், தற்கொலைக் குண்டுதாரியெனக் கருதப்படுபவரின் தலை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரை அடையாளம் காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.