ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுக்களின் தலைவராக குருநாகல் மாவட்ட எம்.பி. பிமல் ரத்னாயக்கா நியமிக்கப்படவுள்ளார்.
இதேநேரம், கட்சியின் பிரசாரச் செயலராக கொழும்பு மாவட்ட எம்.பி. சுனில் ஹந்துநெத்தி நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜே.வி.பி.யின் மத்திய குழு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கூடியபோது மேற்படி இரு பதவிகளுக்கும் இவ்விருவரையும் நியமிப்பதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததையடுத்து, பாராளுமன்றக் குழுக்களின் புதிய தலைவராக பிமல் ரத்னாயக்காவும் பிரசாரச் செயலாளராக சுனில் ஹந்துநெத்தியும் நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜே.வி.பி.யிலிருந்து வெளியேறிய விமல் வீரவன்சவே இதுவரை இவ்விரு பதவிகளையும் வகித்து வந்த நிலையில், அவரது வெளியேற்றத்துடன் அந்தப் பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறும் கட்சியின் தேசிய மாநாட்டில் இந்தப் புதிய நியமனங்கள் உறுதி செய்யப்படுமெனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேநேரம், தற்போது விமல் வீரவன்ச தலைமையில் பிரிந்து சென்றுள்ள அதிருப்தியாளர் குழுவில் மேலும் ஐவர் கட்சியுடன் விரைவில் மீண்டும் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.