அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீரவுக்குமிடையில் லண்டனில் நீண்ட நேர இரகசியச் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளதாக இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது.
மங்கள சமரவீரவின் நெருங்கிய சகாவான ரிரான் அலஸின் நெருங்கிய உறவினர் ஒருவரது லண்டன் ஏலிங்கிலுள்ள வீட்டிலேயே இந்தச் சந்திப்பு சுமார் இரு மணிநேரம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றிருந்த மங்கள சமரவீர அங்கிருந்து லண்டன் சென்றிருந்தார். மைத்திரிபால சிறிசேனவும் நேரடியாக லண்டன் சென்றிருந்த போதே இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சந்திப்பில் ரிரான் அலஸும் கலந்து கொண்டதாகவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் பிரதம பாதுகாப்பு அதிகாரியும் ரிரான் அலஸின் நெருங்கிய வர்த்தகத் தொடர்பாளருமான ஒருவரே இந்தச் சந்திப்புக்கான ஏற்பாட்டைச் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சந்திப்பின் போது அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் மறைவையடுத்து சில அமைச்சர்களின் தலையீடு கட்சித் தலைமையகத்தினுள் அதிகரித்திருப்பதாக மைத்திரிபால சிறிசேன கவலை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், மங்கள சமரவீரவை மீண்டும் கட்சியில் இணையுமாறும் அதற்கான சூழலைத் தான் உருவாக்குவதாகவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாகவும் அதற்கு தான் இப்போதும் கட்சி உறுப்பினராகவே இருப்பதாகவும் சரியான தருணத்தில் கட்சி செயற்பாடுகளில் ஈடுபட முன் வருவேனென மங்கள சமரவீர கூறியதாகவும் அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.
தற்போது இவ்விருவரும் லண்டனில் நிற்பதை அந்தந்த தரப்புகள் உறுதிப்படுத்தியுமுள்ளன.