* குற்றச்சாட்டுகளில் ஒன்றாக இலங்கைப் பிரச்சினை
இலங்கை, டார்புர், மத்திய கிழக்கு மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளுக்கு தலைமை தாங்குவதில் கனடிய அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாகக் கடுமையாக விமர்சித்திருக்கும் அந்நாட்டு எதிர்க்கட்சிகள் வெளிவிவகார அமைச்சர் மக்கஸிம் பேர்னியரை திறமையற்றவரெனவும் பொறுப்பற்றவரெனவும் சாடியிருப்பதுடன் அவரைப் பதவி நீக்குமாறு பிரதமர் ஸ்ரீபன் ஹறார்பருக்கு அழுத்தம் கொடுத்துள்ளன.
தனது அமைச்சரின் பாரதூரமான தவறுகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பது பிரதமரின் பொறுப்பு என்று லிபரல் கட்சியைச் சேர்ந்த பொப்ரே செய்தியாளர் மாநாட்டில் கூறியுள்ளார்.
அவர் (வெளிவிவகார அமைச்சர்) எமது வெளியுறவுக் கொள்கையை சந்தேகமான இடத்துக்குத் தள்ளியுள்ளார். ஆப்கானிலுள்ள எமது படையினருக்கும் அசௌ கரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்று பொப்ரே கூறியுள்ளார்.
இதேவேளை, வௌவிவகாரக் குழுவைக் கூட்டி பேர்னியரின் ஆற்றல்கள் அவரின் செயற்பாடுகளை ஆராய வேண்டுமென புதிய ஜனநாயகக் கட்சியினரும் வலியுறுத்தியுள்ளனர்.
அண்மையில் ஆப்கானிஸ்தானுக்குச் சென்ற மக்கஸிம் பேர்னியர் கந்தகார் ஆளுநரை அகற்ற வேண்டுமென அந்நாட்டு ஜனாதிபதி ஹமீத் ஹர்சாய்க்கு தெரிவித்திருந்த விடயம் குறித்து கடுமையான விமர்சனங்கள் ஏற்பட்டுள்ளன.
இறைமையுள்ள நாடொன்றின் விவகாரங்களில் தலையிட்டதன் மூலம் இராஜதந்திர ரீதியில் பாரதூரமான தவறை பேர்னியர் இழைத்திருப்பதாகக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கன் அரசை சாத்தியமற்றதொரு சூழ்நிலைக்கு பேர்னியர் தள்ளி விட்டிருப்பது குறித்து இன்னமும் அவர் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் ஆளுநரை அகற்றினால் ஆப்கன் அரசு நேட்டோ அதிகாரத்திற்கு சார்பாகச் செயற்படுவதாகவே அர்த்தப்படும் நேட்டோ படை விலகினால் அவர்களின் ஆட்சி செய்யும் தகைமையும் ஊழலை ஒழிக்கும் முயற்சியும் கேள்விக்குறியாகி விடுமென பொப்ரே வியாழனன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூறியுள்ளார்.
இத்தகைய தவறுகளை இழைத்திருக்கும் பேர்னியர் முக்கியமான பதவியான வெளிவிவகார அமைச்சுப் பதவியை வகிக்கத் தகுதியற்றவரென அவர் குறிப்பிட்டுள்ளார்.