* அடுத்த மாதம் விலை அதிகரிக்கும் சாத்தியம்
ரொஷான் நாகலிங்கம்
எரிபொருட்களின் விலைகளை மீளாய்வு செய்வதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாகவும் ஆனாலும் இம்மாதத்துக்குள் எந்தவொரு எரிபொருட்களுக்கும் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படமாட்டாதெனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் அசந்த டி மெல் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் ;
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்து செல்கின்ற நிலையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனது நட்டத்தை ஓரளவேனும் ஈடுசெய்வதற்கு எரிபொருட்களின் விலைகளை மீளாய்வு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் உலக சந்தையில் ஏற்பட்ட விலையதிகரிப்புக்கு ஏற்ப கூட்டுத்தாபனம் நுகர்வோர்க்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் எரிபொருட்களின் விலைகளை மீளாய்வு செய்தது.
எரிபொருட்களின் விலைகளை தற்போது மீளாய்வு செய்ய வேண்டிய நிலையில் பெற்றோலிய மற்றும் பெற்றோலிய வள அமைச்சர் எந்தவொரு எரிபொருட்களின் விலைகளையும் இம் மாதத்துக்குள் உயர்த்துவதில்லையென்ற தீர்மானத்தில் உள்ளார். எனவே இம்மாதத்துக்குள் எந்தவொரு விலையதிகரிப்பும் இடம் பெறமாட்டாது.
எனினும் அடுத்த மாதமளவில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்க வேண்டிய தேவையேற்படின் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்றார்.
இதேவேளை பெற்றோலியப் பொருட்களின் விலைகளை அதிகரிக்குமாறு லங்கா இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனமும் அரசிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளது.