* இந்தியப் பிரதமரை நேரில் சந்தித்து ராமதாஸ் வலியுறுத்தல்
புதுடில்லி: இலங்கைத் தமிழர் மீதான தாக்குதல்கள், மனித உரிமை மீறல்களை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கையெடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் நேரில் வலியுறுத்தியுள்ளார்.
வெள்ளிக்கிழமை டில்லிக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட ராமதாஸ் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு, மதுவிலக்கு, இலங்கைத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல்கள் தொடர்பாகக் கலந்துரையாடினார்.
இச் சந்திப்பின் போதே இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இராணுவம் நடத்தும் தாக்குதல்கள், மனித உரிமை மீறல்களை உடனடியாக நிறுத்துமாறு இலங்கையரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டுமெனவும், தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை நடத்தும் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமெனவும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ராமதாஸ் வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங், இலங்கைத் தமிழருக்கு எதிராக அந்நாட்டு இராணுவம் நடத்தும் தாக்குதல்கள், அடக்கு முறைகள், மனித உரிமை மீறல்கள்
தொடர்பில் தான் கவலை கொண்டுள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பாகவும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவது குறித்தும் கவனமெடுப்பதாகவும் ராமதாஸிடம் உறுதியளித்துள்ளார்.