Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, April 20, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
 
மறுபக்கம்
 
மறுபக்கம்
இன்றைய உலக உணவு விலை உயர்வுக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. எனினும், மனிதருடைய உணவுத் தேவையைக் கணிப்பில் எடுக்காமல் லாப நோக்கில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுவதனாலேயே உணவுப் பற்றாக்குறை உருவாகியுள்ளது என்ற அடிப்படை உண்மையை யாராலும் மூடிமறைக்க இயலாது.

உலக மயமாதலுடன் சேர்ந்து விருத்தி பெற்று வருகிற நுகர்வுப் பண்பாடு பல முக்கியமான வழிகளில் உலகின் தானியத் தட்டுப்பாட்டுக்குக் காரணமாக இருந்து வந்துள்ளது. மூன்றாமுலக நாடுகளில் உருவாகி வளர்ந்து வந்துள்ள புதிய நடுத்தர வர்க்கமும் புதிய பணக்காரப் பரம்பரையும் கைக்கொள்ளுகிற உணவுப் பழக்கங்களில் ஆடம்பரமான உணவுகளும் உணவின் விரயமும் முக்கியமானவை. பெருமளவிலான மாமிச உணவு நுகர்வு காரணமாக மனிதரது உணவுக்குத் தேவையான தானியம் கோழி, மாடு, பன்றி போன்ற விலங்குகளுக்கு தீனியாக்கப்படுகிறது. நான்கு முதல் எட்டுக் கிலோகிராம் வரையிலான தானிய உணவின் மூலமே ஒரு கிலோகிராம் மாமிசம் கிடைக்கிறது. இவ்வாறு பெறப்படுகிற பண்ணை மாமிசம் எவ்வளவு ஆரோக்கியமானது என்பது ஒரு புறமிருக்க, அதன் விளைவான தானியத் தட்டுப்பாடு மிகவுஞ் சமூகக்கேடானது.

நுகர்வுப் பண்பாட்டின் இன்னுமொரு விளைவு ஏதெனில், உணவு பயிரிடப்படுகிற விளைநிலங்கள் வணிகப் பயிர்ச் செய்கைக்காகப் பயன்படத் தொடங்குகின்றன. ஏற்றுமதி வணிகத்தின் கவர்ச்சியால் ஒரு புறமும் பொருளாதார விருத்தி பற்றிய கோணற் பார்வையின் விளைவாகவும் சர்வதேச நிதி நிறுவனங்களின் நெருக்குவாரங்களின் விளைவாகவும் விவசாயிகள் தானிய உற்பத்தியையும் அத்தியாவசிய உணவுப் பயிர் உற்பத்தியையும் கைவிட்டு ஏற்றுமதி வணிகப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுமாறு பல மூன்றாமுலக நாடுகளின் ஆட்சியாளர்களால் ஊக்குவிக்கப்படுகின்றனர். இப்போக்கு இன்னமும் தொடர்ந்து வருகிறது.

இவற்றைவிடப் பயிர்ச்செய்கைக்கான விதை விநியோகத்தின் மீது சில பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்கி வருகிற ஏகபோகம் பல மூன்றாமுலக நாடுகளின் விவசாயத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. வீரிய விதைகள் என்ற பேரில், பாரம்பரியமாகப் பயிரிடப்பட்டு வந்த விதைகளின் இடத்தில், அதிக விளைச்சல் தருகிற புதிய, மரபணு மாற்றப்பட்ட அல்லது கலப்பின விதைகள் பயன்படுகிறபோது அவற்றுக்குத் தேவையான இயந்திரப் பசளை, பூச்சிக் கொல்லிகள், நோய்த்தடுப்பு மருந்துகள் போன்றவற்றின் செலவுகள் சராசரி விவசாயிகட்கும் கட்டுப்படியாவதில்லை. மேலதிகச் செலவுக்கு மேலதிகக் கடனும் கடனுக்குக் கடும் வட்டியுமாக விவசாயிகள் கடனாளிகளாகி மேலும் வறுமைக்குட் தள்ளப்படுகின்றனர். சிலர் போதிய பசளையும் மருந்துகளும் பாவிக்க இயலாமல் குறைவான விளைச்சலால் நட்டப்படுகிறார்கள். இன்று தகவல் தொழில்நுட்பத்தால் செழிக்கிறதாகச் சொல்லப்படுகின்ற இந்திய பொருளாதாரத்தின் கீழ் விவசாயிகளின் தற்கொலை விகிதம் உயர்ந்து வருகிறது.

கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு மக்களை காப்பது நகரப் பொருளாதாரத்தின் செழிப்பல்ல. கிராமங்களின் பொருளாதாரத்தின் சிதைவு தான் அதற்கான முக்கிய காரணம். இத்தகைய ஒரு பின்னணியில் உலக உணவுத் தட்டுப்பாடு என்கிற அபாயம் பற்றி சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் அக்கறையுடையோர் பல ஆண்டுகளாகவே எச்சரித்து வந்துள்ளனர்.

இப்படிப்பட்ட ஒரு பின்னணியிலேயே அண்மைக் காலமாகச் சோளத்திலிருந்து சாராயம் உற்பத்தி செய்து அதைப் பெற்றோலுடன் கலந்து எரிபொருளாக்குகிற தொழில்நுட்பம் எழுச்சி காணத் தொடங்கியுள்ளது. உலக எண்ணெய் விலையின் அதிகரிப்பின் பயனாக அது லாபகரமானதாகவும் அமையலாம். ஆனால், மனித உணவுக்கான தானியமோ தாவர எண்ணெய்ப் பொருளோ எரிபொருளாக்கப்படுவது ஒரு சிலர் சொகுசாக வாழ்வதற்குப் பல கோடிப்பேரைப் பட்டினியிற் தள்ளுகிற காரியமாகும்.

மேற்கூறிய விதமான தாவர எரிபொருட் பாவனை என்றும் சூழலுக்குக் குறைவான தீங்கையோ விளைவிக்கும் என்பது ஒரு வாதமாக முன்வைக்கப்பட்டிருந்தது. எனினும் அது பொய்யானது. இத்தாவர எரிபொருளிலிருந்து வெளியேறுகிற மாசின் அளவு சொற்ப அளவு குறைவாயிருந்தாலும், அதன் உற்பத்தியின்போது சுற்றுச் சூழலைச் சென்றடைகிற மாசின் அளவு பெரிது. எனவே மனிதருக்கு உணவாக வேண்டிய பொருட்களும் அவற்றை விளைவிக்கிற மண்ணும் ஒரு சிலரது லாப நோக்குக்காகப் பறிக்கப்படுகின்றன என்பதே உண்மை. இப்போக்குத் தொடருமேயானால் அது உலகின் பல நாடுகளை நிரந்தர உணவுப் பற்றாக்குறைக்கும் பொருளாதாரச்சிதைவுக்கும் ஆட்படுத்தி விடும்.

இன்று பல நாடுகளில் உணவுத் தட்டுப்பாடு காரணமாக கலவரங்கள் நடக்கின்றன. இந்தக் கலவரங்கள் அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிகளாகவும் சிலவேளை புரட்சிகர எழுச்சிகளாகவும் மாறலாம். ஏகாதிபத்தியத்துக்கு நண்பர்களாகவுள்ள எகிப்திய, பங்களாதேஷிய ஆட்சியாளர்களால் மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்வதையே முக்கியமாகக் கொண்ட ஒரு பொருளாதாரத்தை முன்னெடுக்க இயலாது. எனவே ஒருபுறம் பற்றாக்குறையும் கிளர்ச்சியும் இன்னொருபுறம் இராணுவ அடக்கு முறையுமாகவே இந்த நாடுகளின் உடனடியான எதிர்காலம் அமையும்.

இவ்விடயத்தில் மாஓ சேதுங் சீனப்புரட்சியின் வெற்றிக்கு முன்பும் பின்பும் தானிய உற்பத்திக்கு வழங்கி வந்த முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிடுவது பொருந்தும். போதிய உணவு உற்பத்தி இல்லாமல் புரட்சிகர இயக்கத்தால் நின்று நிலைக்க இயலாது. எனவே போராட்டம் என்பது விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் உணவு உற்பத்தியை மேம்படுத்துகிற போராட்டமாக நாட்டின் விடுதலைக்கு முன்பும் பின்பும் இருந்து வந்தது.

மக்களைச் சார்ந்து இயங்குகிற எந்த விடுதலை இயக்கமும் மக்களின் அடிப்படைத் தேவைகள் பற்றி மிகுந்த கவனஞ் செலுத்துவது அவசியமானது. அவ்வாறு செய்யத் தவறுகிறபோது, அது மக்களிடமிருந்து அந்நியப்படுகிறது. பின்பு அது மக்களுடன் முரண்பட்டு விடுதலை இலக்கையே இழந்து விடுகிறது.

இன்று ஏகாதிபத்திய கல உலகமயமாக்கலும் திறந்த பொருளாதாரமும் நுகர்வுக் கலாசாரமும் சேர்ந்து உருவாக்கியுள்ள உணவுப் பற்றாக்குறை, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் உணவு உற்பத்தியையும் ஒரு முக்கியமான ஆயுதமாக்கியுள்ளது. ஏகாதிபத்தியத்தை முழுமையாக எதிர்க்கிற ஒவ்வொருநாடும் உணவில் தன்நிறைவு என்ற கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஏகாதிபத்தியமும் அடக்குமுறை ஆட்சியாளர்களும் பட்டினியை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். மக்களின் அரசியல் விடுதலைக்கு அவர்களது அடிப்படையான தேவைகளிலிருந்தும் மக்கள் விடுதலைபெற வேண்டும். அது அவர்களது குறைந்த பட்சத் தேவைகள். முற்று முழுமையாகக் கவனிக்கப்பட வேண்டும். இதைச் செய்யத் தவறுகிற போராட்டத்தால் மக்களின் விடுதலையை உறுதிப்படுத்த இயலாது.

உணவுப் பற்றாக்குறைக்கு எதிரான போராட்டம் என்பது தவிர்க்க இயலாமல் இன்று ஏகாதிபத்திய உலக ஒழுங்குக்கும் உலக மயமாக்கலுக்கும் எதிரான ஒரு போராட்டமாகிவிட்டது.

உணவு மறுப்பு ஒரு ஒடுக்குமுறைக் கருவியாகிறபோது, உணவு உற்பத்தியும் உணவின் முறையான விநியோகமும் அதற்கு எதிரான விடுதலைக்கான போராட்டக் கருவிகளாகின்றன.

மக்களுடைய நலன்களை முதன்மைப்படுத்துகிற எந்த ஆட்சியும் எந்த விடுதலை இயக்கமும் உணவு உற்பத்திக்கு முதலிடம் வழங்குகிறபோது அது தவிர்க்க இயலாமலே ஏகாதிபத்தியத்திற்கு எதிர்மாறான ஒரு நிலைப்பாட்டை எடுக்குமாறு உந்தப்படுகிறது. ஏகாதிபத்தியத்துடனான சமரசங்கள் மக்களுடைய அடிப்படைத் தேவைகளின் மறுப்பாகவே அமைய முடியும். இது வரலாறு மீண்டும் மீண்டும் மேலும் வலுவாகக் கூறிவருகிற பாடமாகும்.

Email this page Your Opinion Print this page
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com