Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, April 20, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
 
பக்கம் - 02
 
சந்திப்பின் பின்னணி என்ன? (தொடர்ச்சி)
கலைஞன்

பிரியங்காவின் வருகையின் நோக்கம் சிறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டதும் உடனடியாகவே முதல் மாடியிலுள்ள சிறைத்துறை கண்காணிப்பு அதிகாரியின் அலுவலகத்துக்கு நளினி கொண்டுவரப்பட்டார். நளினிக்கும் அப்போது தான் எதற்காக அவசர அவசரமாக அழைத்து வரப்படுகிறேன் என்பது தெரியாமலே இருந்தது. ஆனால், அங்கு பிரியங்காவைக் கண்டதும் நளினி அதிர்ச்சி அடைந்தார். பிரியங்கா தன்னை சந்திக்க விரும்புவது நளினிக்கு தெரிவித்திருந்த போதும் அது இவ்வளவு விரைவில் நடக்குமென நளினி எதிர்பார்த்திருக்கவில்லை.

நளினி அங்கு வந்ததும் அவரை சிறிய புன்முறுவலுடன் பார்த்த பிரியங்கா, தான் நளினியுடன் தனியாகப் பேச வேண்டும் எனக் கூறினார். இதையடுத்து சிறைக் கண்காணிப்பு அதிகாரி உட்பட அனைவருமே அங்கிருந்து வெளியேறினர். அந்த அறையினுள் பிரியங்காவும் நளினியும் மட்டுமே அமர்ந்திருந்தனர். சிறிதுநேரம் இருவரும் எதுவும் பேசாது ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தனர்.

விடுதலைப் புலிகளா கொலை செய்தார்கள்?

சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த நளினியை தனக்கு பக்கத்தில் அழைத்து அமர வைத்தார் பிரியங்கா. அவர் நளினியுடன் உரையாட முற்பட்டபோது, தந்தையின் நினைவு வந்ததால் துக்கத்தை அடக்கமுடியாமல் கண்ணீர் விட்டழுதார். உடனே அருகிலிருந்த நளினியும் அழுதுவிட்டார். பின்னர் பிரியங்கா தன்னைத் தேற்றிக்கொண்டு, நளினியின் கையை ஆறுதலாகப் பற்றியபடி பேசத் தொடங்கினார். இருவருமே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டனர்.

தனது தாயார் சோனியா காந்திக்கு நளினி அனுப்பிய கடிதங்களையும் சோனியா காந்தி சுகவீனமுற்றிருந்த போது நளினி அனுப்பிய தந்தியையும் பிரியங்கா நினைவுகூர்ந்தார். `உன்னைப் பார்க்கச் சொல்லி யாரும் என்னை அனுப்பவில்லை. சொந்த விருப்பத்திலேயே உன்னைப் பார்க்க வந்தேன்' என்று நளினியிடம் பிரியங்கா கூறினார்.

பின்னர் `எனது அப்பாவை விடுதலைப் புலிகளா கொன்றது?' என நளினியிடம் பிரியங்கா கேட்டார்.

அத்துடன், எனது அப்பாவை கொலை செய்ய யார் யார் உதவினார்கள்? இக் கொலைச் சதியில் ஈடுபட்டது யார்? அப்பாவை கொலை செய்யுமளவுக்கு அவர் செய்த தவறுகள் என்ன? அவரின் இறுதி நிமிடம் எவ்வாறிருந்தது போன்ற கேள்விகளையும் பிரியங்கா கேட்டார்.

இக் கேள்விகளுக்கு பதிலளித்த நளினி, கொலைச் சதித்திட்டம் குறித்து எனக்கு கடைசி நிமிடம் வரை எதுவும் தெரியாது. நான் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்றது உண்மை. ஆனால், எதற்காகப் போகிறோம் என்று தெரியாது என்று கூறினார்.

என் தந்தை நல்ல மனிதர் அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தால் இந்தக் கொலையை செய்திருக்க மாட்டீர்கள் என்று பிரியங்கா கூறியபோது நளினி பதில் கூறாது அழுது கொண்டிருந்தார்.

இந்தக் கொலையை திட்டமிட்டது யார் என்று பிரியங்கா கேட்டபோது இதற்கு பதில் தனக்கு தெரியவில்லையென நளினி கூறினார். அதேபோலவே, இந்தக் கொலையை நடத்தியது யார் என்று கேட்டபோது, தனு தான் குண்டை வெடிக்கச் செய்தார். அவருக்கு மட்டும் தான் கொலைக்கான பின்னணி தெரியுமென நளினி கூறினார்.

இந்தக் கொலையில் புலிகளுக்கு தொடர்புண்டா என்ற பிரியங்காவின் கேள்விக்கு அது குறித்து எனக்குத் தெரியாது. ராஜீவை கொல்ல தனுவுக்கு உத்தரவிட்டது யார் என்றும் எனக்குத் தெரியாதென்றார் நளினி.

உங்கள் கணவர் முருகன் புலி உறுப்பினரா என்று பிரியங்கா கேட்க, இல்லை முருகனுக்கு கூட இந்தக் கொலை குறித்த விபரங்கள் தெரியாது. என்னைப் போலவே அவருக்கும் கடைசியில் தான் எல்லாம் தெரிந்தது என்று நளினி கூறினார்.

இவர்கள் எப்படி உங்களிடம் அறிமுகமானார்கள் என்று பிரியங்கா கேட்க, நான் சிறுவயதிலிருந்தே அன்புக்காக ஏங்கினேன். என்னிடம் யார் அன்பாக இருந்தாலும் அவர்களுடன் ஒன்றிவிடுவேன். அவர்களுக்கு உதவுவேன். அந்த வகையில் தான் சிவராசன், முருகன் ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது என்று கூறினார்.

மேலும், தனது குழந்தைகள், படிப்புக் குறித்தெல்லாம் நளினியுடன் பேசிய பிரியங்கா நளினியின் மகள், அவரது கல்வி, தாயார், அவர்களது நிலைமை குறித்தெல்லாம் கேட்டார்.

இருவருக்குமிடையிலான இச்சந்திப்பு 19 நிமிடங்கள் வரை நடைபெற்றது. இதன் பின்னர் பிரியங்கா நளினியிடமிருந்து விடைபெற்றார்.

இச்சந்திப்புக் குறித்து பிரியங்கா கூறுகையில்; மார்ச் 19 ஆம் திகதி நளினியை வேலூர் சிறையில் நான் சந்தித்து பேசியது உண்மை. நான் சந்தித்த வன்முறை மற்றும் இழப்பிலிருந்து வெளிவந்து அமைதிகாண நான் மேற்கொண்ட பாதை இது. நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற எனது தாய் முயற்சி செய்தார்.

கோபம், வெறுப்பு, மற்றும் வன்முறை ஆகியவற்றில் எனக்கு நம்பிக்கையில்லை. எனது வாழ்க்கையில் இந்த விஷயங்கள் மேலோங்க நான் இடமளித்ததில்லை. இந்த சந்திப்பு எனது சொந்த விருப்பத்தின் பேரில், தனிப்பட்ட முறையில் நடந்ததொன்று. இதற்கு மதிப்பளிக்கப்பட்டால் நான் மகிழ்ச்சியடைவேன் என்றார்.

இது குறித்து பிரியங்காவின் சகோதரர் ராகுல்காந்தி கூறுகையில்;

நளினியை சந்திக்க வேண்டுமென்பது பிரியங்காவின் பலநாள் விருப்பம். எனது குடும்பம் வெறுப்பு மற்றும் கோபத்தை சுமந்தது இல்லை. நளினியை பிரியங்கா சந்தித்தமை தொடர்பில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார்.

இதேவேளை, ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், நளினி உள்ளிட்டோருக்கு உயர் நீதிமன்றால், தண்டனைகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், யார் கொலை செய்தது? ஏன் கொலை செய்யப்பட்டாரென பிரியங்கா கேட்பது பலரை ஆச்சரியப்படவைத்துள்ளது.

இந்தக் கேள்விகளே பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியுள்ளதுடன், தவறான விமர்சனங்கள் ஏற்படவும் காரணமாகிவிட்டது.

இவ்வாறான நிலையில் பிரியங்கா காந்தி - நளினி சந்திப்பு தமிழகத்திலும் இலங்கையிலும் எவ்வகையான பிரதிபலிப்புகளை ஏற்படுத்தப் போகின்றது? இச் சந்திப்பின் மூலம் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படுமா என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தேடுவது நேரத்தை வீணடிக்கும் செயலாகவே அமையும்.

Email this page Your Opinion Print this page
கிழக்குத் தேர்தல்: ஒரேயொரு அப்பமும் ஏராளமான குரங்குகளும்! (தொடர்ச்சி)
மப்றூக்

ஆனால், இங்கேதான் பிரச்சினையே உள்ளது. அதாவது, அக்கரைப்பற்றுக்கும், அட்டாளைச்சேனைக்கும் இடையே வரலாறு முழுக்க ஒரு ஒவ்வா நிலையும் பிரதேசவாதமும் வளர்ந்து கிடக்கிறது. குறிப்பாக அரசியல் ரீதியாக இந்த இரண்டு பிரதேசத்தார்களும் இணைந்து செயற்பட்ட காலமென்பதே மிகவும் அரிதாகும்! மேலும் விளக்கமாகக் கூறினால், அக்கரைப்பற்றுப் பிரதேசத்தவர்கள் அட்டாளைச்சேனைக்காரர்களை பெரிதாக மதிப்பதேயில்லை. இந்தப் பின்னணியில் நோக்கும் போது, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த வேட்பாளர் உதுமாலெப்பைக்கு அக்கரைப்பற்றுக்காரர்கள் வாக்களிப்பார்களா என்கின்றதொரு பலமான சந்தேகம் எழுகிறது! மட்டுமன்றி, அக்கரைப்பற்றுப் பிரதேசத்தவர்கள் அதாஉல்லாவின் கோரிக்கையையும் மீறி, தமதூரில் போட்டியிடும் மு.கா. வேட்பாளருக்கு வாக்களிக்கவும் கூடும். இதன் மூலம் தமதூருக்கு ஒரு மாகாணசபை உறுப்பினரைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர்கள் நினைக்கலாமல்லவா? ஒரு ஊகத்தின் அடிப்படையில் இவ்வாறு நிகழ்ந்து விட்டதாகக் கொள்வோமாயின், அமைச்சர் அதாஉல்லாவோடு வேட்பாளர் உதுமாலெப்பை மிகக் கடுமையாக முரண்படலாம். அல்லது, அதாஉல்லாவின் ஆதரவாளர்களான அட்டாளைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த அந்த 5 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்காளர்களும் எதிர்காலத்தில் அவருக்கு வாக்களிக்காமல் போய்விடலாம். இவை நிகழுமாயின், வரும் தேர்தல்களில் அதாஉல்லா தோல்வியடைவார். இதன் மூலம் அக்கரைப்பற்று மக்கள் தமது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை இழந்து போவர்!! ஆக அரசதரப்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் உதுமாலெப்பையின் வெற்றி அல்லது தோல்வியானது அதாஉல்லாவின் அரசியல் ஆணி வேரோடு சம்பந்தப்பட்டதென்றே கருதப்படுகிறது.

இதேவேளை, இந்த உதுமாலெப்பை என்பவர் அமைச்சர் அதாஉல்லா மூலமாகப் பெற்றுக் கொண்ட அதிகாரத்தின் மூலமாக, அனைத்து வழிகளிலும் தன்னை மட்டுமே நிறுவிக்கொள்ள முயல்வதாக அவரின் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களால் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அதாவது, இப்பகுதியில் இவர் தனியாள் சாம்ராஜ்யமொன்றை நடத்துவதற்கு முயற்சிப்பதாகவும், கட்சிக்குள் இருப்பவர்கள் கூறும் மாற்றுக் கருத்துகளுக்குக் கூட இவர் மதிப்பளிப்பதில்லை என்றும் சொல்லப்படுகிறது. குறிப்பாக, கட்சியைச் சேர்ந்த கீழ்மட்டத் தலைவர்களை இவர் கணக்கில் எடுப்பதேயில்லை என்று அவர் சார்ந்த தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரே அதிருப்தியுடன் விமர்சிப்பது நமது காதுகளுக்கும் வந்து சேர்ந்தது! இந்தக் குறைகளும், குற்றச்சாட்டுகளும் - அமைச்சர் அதாஉல்லாவின் செல்லப்பிள்ளையான உதுமாலெப்பைக்குரிய வாக் குச் சேகரிப்பில் தடையொன்றை அவரின் சொந்தப் பிரதேசத்தில் ஏற்படுத்தி விடக்கூடும்!

இந்த நிலையில், அமைச்சர் அதாஉல்லா தன்னுடைய சொந்த ஊரான அக்கரைப்பற்றிலே வெற்றிலைச் சின்னத்தில் வேட்பாளர்கள் எவரையும் நிறுத்தாததற்கு காரணம் அவரின் குறுகிய அரசியல் தந்திரம்தான் என்று அக்கரைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரே (கவனிக்க: தவிசாளரும் உறுப்பினர்தான்) நம்மிடம் கசப்போடு கூறினார். அது என்ன தந்திரம்? கொஞ்சம் விலாவாரியாகத்தான் சொல்லுங்களே என்றோம். விபரித்தார். அதாவது அக்கரைப்பற்றில் தனது செல்வாக்கைப் பங்கு போடும் விதத்தில், எந்தவொரு அரசியல் சக்தி உருவாவதையும் அமைச்சர் அதாஉல்லா விரும்பவில்லையாம். அதனால்தான் அவர் தனது ஊரில் - அவருடைய கட்சி சார்பாக வேட்பாளரொருவரை நிறுத்தவில்லையே தவிர அடுத்த ஊர்களில் கொண்ட அக்கறையால்தான் அவர் இப்படிச் செய்தார் என்றும், இது அமைச்சரின் மாபெரும் தியாகம் என்றும் அதாஉல்லா தரப்பில் கூறப்படுவதெல்லாம் சும்மா உடான்ஸ் என்கிறார் அந்த உறுப்பினர்! (அக்கரைப்பற்றில் வெற்றிலைச் சின்னம் சார்பாக கிழக்குத் தேர்தலில் குதிப்பதற்கு மேற்படி பிரதேச சபை உறுப்பினரானவர், கொள்ளை ஆசையோடு காத்துக் கொண்டிருந்தவர் என்பதும் இங்கு குறிப்படத்தக்கதாகும்)

இதுவெல்லாம் ஒரு புறம் கிடக்க, தேர்தல் என்பதைக் கேள்விப்பட்டதும் மூத்தம்மா ஒருவர் பட்ட கவலை ரொம்பவும் வித்தியாசமானது. கோதாரிக்காரனுகள், இனி இவனுகளின்ர நரி முகத்தை கொண்டுவந்து ஒட்டி, நம்மட சுவரையெல்லாம் நாசமாக்கப் போறானுகள்! என்று முணுமுணுத்துக் கொண்டார் அவர்!

Email this page Your Opinion Print this page
இயக்க வரலாற்றில் மிகப் பெரும் நெருக்கடி வீதிக்கு வந்திருக்கும் ஜே.வி.பி. மோதல்கள் ! (தொடர்ச்சி)
குரு

இதுவே ஜே.வி.பி.யின் முதலாளித்துவத்துடனான முதல் தேர்தல் இணைவாக வரலாற்றில் பதியப்படுகின்றது. வெற்றி பெற்ற சந்திரிகா உடன்பாட்டை மதிக்கவுமில்லை - நிறைவேற்றவுமில்லை. அப்படி மூக்குடைபட்ட நிலையிலும் நன்னடத்தைக் காலக்கெடுவொன்றை விதித்து ஜே.வி.பி. அந்த அரசைப் பாதுகாத்தது. இன்று அதற்குத் தலைமைத்துவம் கொடுத்த நந்தன குணத்திலக்கவும் கட்சியில் இல்லை.

ஐ.தே.கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ரணிலைத் தோற்கடிப்பதற்காக மகிந்தவை ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி. ஆதரித்தது. தனக்கு உதவி செய்தவர்களுக்கு வலுவான அமைச்சுக்களை வழங்கி கௌரவப்படுத்த அவர் விரும்பியபோதிலும் ஜே.வி.பி. தலைமை அதனை நிராகரித்து விட்டது. இதனால் பதவிகளை எதிர்பார்த்திருந்தவர்கள் அதிருப்தியடைந்தனர்.

இந்தப் பின்னணியில் விமல் வீரவன்ச போன்றவர்கள் ஜனாதிபதியுடன் நெருக்கமாகச் செயலாற்றி கொந்தராத்துக்களைப் பெற்றுக் கொடுப்பதில் பெரும் பணம் சம்பாதித்திருப்பதாக சிங்கள நாளேடுகள் அடிக்கடி செய்திகளை வெளியிட்டு வந்தன. விமல்வீரவன்ச மனைவிக்கு 40 இலட்சம் பெறுமதியான சொகுசு வாகனத்தை வாங்க எங்கிருந்து பணம் கிடைத்தது எனவும் இவை கேள்விகளை எழுப்பின. தொடர்ந்தும் விமல் வீரவன்ச கட்சிக் கட்டுப்பாடுகளையும் உணர்வுகளையும் மதிக்காமல் சிந்தனையாளருக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டிருந்தார். இது கட்சிக்கு நெருக்கடியைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

எப்படியோ ஜே.வி.பி. பிளவுபட்டிருக்கின்றது. ஐ.தே.க. பிளவு பட்டத்தைப் போல் விமல் தரப்பு கரு ஜயசூரிய பாணியில் சிந்தனையாளரை ஆதரிக்கும். அநேகமாக சக்தி வாய்ந்த அமைச்சொன்றைப் பெற்று விமல் வீரவன்ச தனது ஆடம்பர வாழ்க்கையை சுதந்திரமாகத் தொடரலாம். இதன் மூலம் ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளேயின் இடைவெளியை சிறப்பாக நிரப்பவும் சிந்தனையாளருக்கு வழி பிறக்கும்.

மறுபுறத்தில் அரசுக்கெதிரான அணியிலுள்ள ஜே.வி.பி.யினருக்கான கெடுபிடிகள் தொடரவும் அதிகபட்ச வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. விமல் ஆதரவுக் குழுவிலிருந்து விலகி தாய் வீடு வந்திருக்கும் சிலர் தாம் பிழையாக வழி நடாத்தப்பட்டுவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் வழங்க விருப்பதாய் பிந்தி வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது இளமைக் காலத்தில் ஷ்ரீபாதவுக்கோ, சிகிரியாவுக்கோ போக முடியாமல் போய்விட்டதாக விமல் ஆதங்கப்பட அங்கெல்லாம் போக நேரமில்லாதவருக்கு சேர்க்கிட் பங்களாவழியே பொழுதைக் கழிப்பதற்கு மட்டும் எப்படி நேரம் கிடைத்தது என சோமவன்ச கிண்டலாகப் பதிலளித்திருப்பது புரிந்து கொள்ளக் கூடியதே...!

எப்படியும் சோமவன்ச - வீரவன்ச கதைகள் அரசியல் திரையரங்குகளில் வெற்றிகரமாக சில நாட்களுக்கு ஓடும் என்பது மட்டும் உறுதி.

ஒரு முறை சந்திரிகாவிற்குப் பதிலளித்த ஜே.வி.பி.செயலாளர் டில்வின் சில்வா, உங்கள் கட்சியிலுள்ளவர்களைப் போல் எங்கள் கட்சிக்காரர்கள் ஒருவருக்கொருவர் முரண்பாடான கருத்துக்களைச் சொல்ல மாட்டார்கள். எங்கள் வீடுகளிலுள்ள நாய்கள் கூட நாம் சொல்லுகின்ற படிதான் குரைக்கும் எனச் சொல்லியிருந்ததையும் நினைவுபடுத்துவதற்கு இது அரியதோர் சந்தர்ப்பமாகும்.

வாகனக் கடத்தல் தொடர்பாக ஜே.வி.பி. உறுப்பினர்களுக் கெதிரான அரச - பொலிஸ் கெடுபிடிகள் தற்போது தொடங்கியிருக்கின்றது. பொலிஸார் இது விடயத்தில் பாரபட்சமாக நடந்து கொள்கின்றனர் என ஜே.வி.பி.குற்றம் சாட்டுகின்றது.

இக்கட்டான நிலைமை தொடர்பாக ஆராய கட்சி பொதுக் கூட்டமொன்றை இம்மாதம் கூட்டுகின்றது. இதில் விமல் வீரவன்ச தரப்பினரும் பங்கு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. பெரும்பாலும் இது கட்சியைப் புனர்நிர்மானம் செய்கின்ற கூட்டமாகவே அமையும். பதவி மாற்றங்கள் தொடர்பான தீர்மானங்கள் இங்கு மேற்கொள்ளப்பட அதிகபட்ச வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

தனது வரலாற்றில் பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் தலைவரையும் ஒட்டுமொத்த மத்திய குழு உறுப்பினர்களையும் இழந்து, குறுகிய காலத்தில் தேசிய அரசியலில் தீர்க்கமான சக்தியாக மறுபிறப்பெடுத்த ஜே.வி.பி.தனது வரலாற்றுத் தவறுகளைத் திருத்தி, இனவாதப்போக்கைக் கைவிட்டு, புது முகத்துடன் மக்கள் மத்தியில் பிரவேசிப்பதற்கு இதுவோர் நல்ல சந்தர்ப்பம். இதனை அவர்கள் எப்படி உபயோகித்துக்கொள்ளப் போகின்றார்கள் என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Email this page Your Opinion Print this page
தமிழர்களின் கூட்டிருப்பை சிதைப்பதே கிழக்குத் தேர்தலின் பிரதான இலக்கு (தொடர்ச்சி)
சங்கரன் சிவலிங்கம்

தமிழ் மக்களின் போராட்டம் சில சலுகைகளை முஸ்லிம் மக்களுக்கு வழங்க வேண்டிய கட்டாயத்தினை சிங்கள அரசுகளுக்கு ஏற்படுத்தியது. அதனை அஷ்ரப்பும் சரியாகப் பயன்படுத்தி தென்கிழக்குப் பல்கலைக்கழகம், ஒலுவில் துறைமுகம், அஷ்ரப் வைத்தியசாலை என்பவற்றை உருவாக்கியிருந்தார். எனினும், இச்சலுகைகளை உரிமைகள் என்ற மட்டத்திற்கு வளர விட பேரினவாதம் விரும்பவில்லை. முஸ்லிம் மக்களுக்கான தனியான நிர்வாக மாவட்டக் கோரிக்கையை அஷ்ரப் முன்னெடுத்த போது, முஸ்லிம்களின் தலைமைத்துவ ஆளுமையை சிதைக்கும் வகையில் அவர் கொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் முஸ்லிம்களிடமிருந்து பேரம் பேசுதலே வளராத அளவிற்கு திட்டமிட்டு முஸ்லிம் காங்கிரஸ் சிதைக்கப்பட்டது. சந்திரிகா, மகிந்தர் என மாறி மாறி வந்த சிங்களத் தலைவர்களால் கட்சி சிதைக்கப்பட்டாலும் சிதைக்க முடியாத ஒரு மனிதனாக ரவூப் ஹக்கீம் விளங்கினார். இத்தனிநபர் பலத்தின் அடிப்படையில் சிதைவுகளுக்கு மத்தியிலும் கட்சியைக் காப்பாற்ற அவரால் முடிந்தது. இன்று பாராளுமன்ற அரசியலில் மகிந்தருக்கு சவால் விடக்கூடிய ஒரு தலைவரென்றால் அது ரவூப் ஹக்கீம் தான். ரணில், ஆறுமுகம் தொண்டமான், சந்திரசேகரன் என அனைவரும் மகிந்தரின் கெடுபிடிகளுக்கு முன்னால் ஒரு அடி கூட நகர பயந்த நிலையில் ரவூப் ஹக்கீம் மட்டுமே சவாலாக எழுந்திருக்கின்றார்.

அம்பாறை மாவட்டம் தற்போது புவியியல் ரீதியாக சிதைக்கப்படும் அபாயம் தோன்றியுள்ளது. பொத்துவிலிலும் அட்டாளைச்சேனையிலும் அதற்கு நுட்பமான பொறிமுறைகள் தீட்டப்படுகின்றன. பொத்துவில் வனப் பாதுகாப்பு என்ற துரும்பும் அட்டாளைச்சேனையில் தீகவாவி புனிதப் பிரதேசம் என்ற துரும்பும் கையில் எடுக்கப்படுகின்றது. பேரினவாத ஆதிக்கத்தை நுட்பமான வகையில் மேற்கொள்ளும் திறன் படைத்த சம்பிக்க ரணவக்க இதனைத் தன் பொறுப்பில் எடுத்திருக்கிறார். ரவூப் ஹக்கீம் அமைச்சரவையிலிருந்து விலகுவதற்கும் இந்நில ஆக்கிரமிப்பே காரணமாக அமைந்தது. இதற்குப் புறம்பாக திருமலை மாவட்டத்தில் முஸ்லிம் மக்களின் முக்கிய பிரதேசமாகவுள்ள மூதூர் பிரதேசம் யாழ். குடாநாடு போல ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாகியுள்ளது. சுதந்திரமாக நடமாடவோ சுதந்திரமாக தமது மரபு ரீதியான கடல் விவசாயத் தொழில்களை மேற்கொள்ளவோ அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சேருவில பிரதேசத்தையும் மூதூர் பிரதேசத்தையும் உள்ளடக்கி விஸ்தரிப்பதே இங்கு பேரினவாதத்தின் இலக்காக உள்ளது. இதன் மூலம் கிழக்கில் ஒரு இறங்குதுறையும் அவர்களுக்கு கிடைத்துவிடும்.

எனவே, தற்போது முஸ்லிம்களின் நலன்களில் இருந்து கிழக்கினை பாதுகாக்கும் பொறுப்பும் முஸ்லிம் காங்கிரஸ் தலையில் விழுந்துள்ளது. மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் தூக்கியெறிந்து ரவூப் ஹக்கீம் உட்பட முக்கிய தலைவர்கள் வெளியேறியமை இதன் வெளிப்பாடேயாகும்.

நடைபெறப்போகும் மாகாண சபை தேர்தலில் தமிழ் மக்களின் பங்கு குறைவாக இருக்குமென்பதால் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான ஐ.தே.கட்சியே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. குறைந்தபட்சம் இரண்டு மேலதிக போனஸ் உறுப்பினர்களைப் பெற்றாவது அவர்கள் மாகாண சபையைக் கைப்பற்றலாம். பிள்ளையானின் அடாவடித்தனமும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெளியே அம்பாறை மாவட்டத்திலும் திருமலை மாவட்டத்திலும் செல்லுபடியாகும் சாத்தியங்கள் குறைவாக உள்ளமையால் அச்சுறுத்தல் வாக்குகளை அபகரிக்கும் நிலையும் பெருமளவிற்கு இடம்பெறாது. அதேநேரம், புலிகளும் இக்கட்டத்தில் தேர்தலுக்கெதிராக சில நடவடிக்கைகளை முடுக்கிவிடலாம். இதற்காக புலிகளின் ஒரு குழுவினர் வன்னியிலிருந்து கிழக்கிற்கு அனுப்பப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன. இதனால் சுறுசுறுப்பான தேர்தல் முஸ்லிம் பிரதேசங்களில் நடைபெறுமே ஒழிய, தமிழ்ப் பிரதேசங்களில் பெரியளவிற்கு இடம்பெறப்போவதில்லை. பிள்ளையானிடம் அல்லது ரவூப் ஹக்கீமிடம் மாகாண சபை செல்லும் நிலை இருப்பதால் சிங்களப் பிரதேசங்களிலும் வாக்களிப்பு பெரியளவிற்கு சுறுசுறுப்பாக நடைபெறுமென எதிர்பார்க்க முடியாது.

முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற்றாலும் பெரிய மாற்றங்கள் இடம்பெறப்போவதில்லை. மாகாண சபைக்கு அதிகாரங்கள் குறைவாக இருப்பதோடு இருக்கின்ற அதிகாரங்களை செயற்படுத்தவும் பேரினவாதம் விடப்போவதில்லை. இராணுவம் எப்போதும் இராணுவ நிர்வாகத்திற்குள்ளேயே கிழக்கினை வைத்திருக்கப் பார்க்கும். பிள்ளையானின் முஸ்லிம் காங்கிரஸிற்கெதிரான அடாவடித்தனங்களும் குறைவடையப்போவதில்லை.

இந்நிலையில், நிர்ப்பந்தங்கள் காரணமாக முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கட்சி அரசியலை சற்றுத் தீவிரமாக முன்னெடுக்கப் பார்க்கும். ஐ.தே.க.வும் ஒரு கட்டம் வரை அதனை ஊக்குவிக்கும். தமிழரசுக் கட்சி போல மக்களை இணைந்த ஜனநாயக ரீதியான போராட்டங்களும் இடம்பெறலாம். இப்போராட்டங்களும் எதிர்ப்பு அரசியலும் முஸ்லிம் அரசியலை இன அரசியல் என்ற கட்டத்திலிருந்து முஸ்லிம் தேசிய அரசியல் என்ற கட்டத்திற்கு வளர்த்தெடுக்கும்.

இந்த இரண்டாவது கட்டத்திலும் முஸ்லிம் மக்களின் அபிலாசைகளை தீர்க்கக்கூடிய சூழல் இல்லாததனால் அதிகாரத்தைக் கைப்பற்றுதல் என்ற கட்டத்திற்கு முஸ்லிம் அரசியல் வளரலாம். இவ்வாறு வளரும் போது தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து செயற்படக்கூடிய நிலை தோற்றம் பெறலாம்.

கிழக்கினை பேரினவாத ஆக்கிரமிப்பிலிருந்து தம்மால் தனியாக பாதுகாக்க முடியாது என்ற உண்மை நிலையினை அனுபவ ரீதியாக முஸ்லிம் மக்கள் உணர்கின்றபோது தமிழ் மக்களுடன் இணைந்து போராடுவதைத் தவிர முஸ்லிம் மக்களுக்கு வேறு எந்தத் தெரிவும் இருக்கப்போவதில்லை.

கிழக்கின் மாறிவரும் அரசியல் சூழல் பற்றி, கிழக்குத் தமிழ் மக்கள் பெரிதாகக் கவலைப்படுவதற்கு எதுவுமில்லை. வரலாறு நிர்ப்பந்த ரீதியாக சிறிதளவு ஓய்வு காலத்தினை தற்போது அவர்களுக்குக் கொடுத்துள்ளது. விரைவில் சூழல் மாறும். அப்போது, அவர்களும் காத்திரமான வகையில் செயற்படுவதற்கான சரியான களம் கிடைக்கும்.

அதுவரை உணர்வு நிலையினை தணிய விடாது பாதுகாப்பதே தமிழ் மக்களின் பொறுப்பு.

Email this page Your Opinion