Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, April 21, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
மனித உரிமைகளும் சித்திரவதைக் கொடுமைகளும்
[21 - April - 2008] [Font Size - A - A - A]
-உ.ரா.வரதராஜன்-

சீன நாட்டின் ஒரு பகுதியான திபெத்தில் அண்மையில் நடைபெற்ற சில நிகழ்வுகளையடுத்து அங்கே மனித உரிமைகள் மீறப்படுவதாக ஊடகங்களில் குற்றச்சாட்டுகள் பரவலாக இடம் பெற்றன. அவற்றுக்கு எதிராக மக்கள் சீன அரசாங்கம் அதன் தரப்பு வாதங்களை முன்வைத்துள்ளது.

அமெரிக்க நாட்டில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தன்னை வேட்பாளராக முன்நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர் ஹிலாரி கிளிண்டன். திபெத் நிகழ்வுகளைக் காரணம் காட்டி இன்றைய அதிபர் ஜார்ஜ் புஷ், சீன நாட்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழாவைப் புறக்கணிக்க வேண்டும் என்று அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.

உலக நாடுகள் அனைத்திலும் மனித உரிமை மதிக்கப்பட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்ட நாடாக அமெரிக்கா தொடர்ந்து பறைசாற்றிக் கொண்டு வருகிறது. மனித உரிமைப் பாதுகாவலனாகத் தன்னை சித்திரித்துக் கொள்ளும் அமெரிக்கா, உலகமெங்கும் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபடுவதற்காகவே அமைப்பு ஒன்றை நிறுவி நிர்வகித்து வருகிறது. அதன் பெயர் தான் சி.ஐ.ஏ (central intelligence agency) என்ற மைய உளவு நிறுவனம். அது நடத்தி வந்துள்ள சித்திரவதைக் கொடுமைகளை விபரித்து முடிக்க இயலாது.

அமெரிக்காவின் பாதுகாப்புக்காக என்று இரண்டாம் உலகப் பெரும் போரின் முடிவில் 1947இல் நிறுவப்பட்டது தான் சி.ஐ.ஏ.இது உலக நாடுகள் அனைத்திலும் உளவு பார்க்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளது. சி.ஐ.ஏ. யின் இந்த `உளவறியும்' வேலை வெறும் தகவல் சேகரிப்பு மட்டுமல்ல அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராகச் செயல்படுவதாகக் கருதப்படும் எந்தவொரு நாட்டுக்கும் நபருக்கும் எதிராக சகலவிதமான சதித்திட்டங்களையும் திட்டமிட்டு நிறைவேற்றுவது. அமெரிக்கா `எதிரி' என்று கருதும் பிற நாட்டு அரசுகளைக் கவிழ்ப்பது, அரசியல் பிரமுகர்களைக் கொன்று முடிப்பது, வெளிநாட்டவர் எவரையும் கைது செய்து கொடூரமான சித்திரவதைக் கூடாரங்கள் இயங்க அனுமதிக்கப்படுகிற கூட்டாளி நாடுகளுக்குக் கடத்துவது, விசாரணை என்ற பெயரில் குரூரமான சித்திரவதைகளைத் தொடர்வது என்று சி.ஐ.ஏ.யின் நடவடிக்கைகளைப் பட்டியலிட்டு மாளாது.

சந்தேகத்திற்கிடமானவர்களைப் பிடித்துக் கைது செய்து விசாரிப்பது என்பது பாதுகாப்பு அமைப்புகள் அனைத்தும் பின்பற்றுகிற நடைமுறைதான். ஆனால் இந்த `விசாரணை' `சித்திரவதை'யாக மாறுகிற போது மனித உரிமைப் பிரச்சினை எழத்தான் செய்கிறது. சி.ஐ.ஏ.அமெரிக்க இராணுவத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விசாரணை நடைமுறைகளை மட்டுமே பின்பற்றி வருவதாகக் கூறிக் கொண்டாலும், மனித உரிமை மீறல் குற்றத்துக்கு இலக்காகக் கூடிய `சித்திரவதை' யில் ஈடுபடுவது சி.ஐ.ஏ.வுக்கு இயல்பான நடவடிக்கையாகி விட்டதாக அமெரிக்க நாட்டிலேயே குற்றச்சாட்டுகள் ஏராளம் எழுந்துள்ளன.

சி.ஐ.ஏ.யின் சித்திரவதை நடவடிக்கைகள் உள்ளிட்ட `பாதுகாப்பு' நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செலவழித்து வந்துள்ள தொகைகள் எவ்வளவு என்பது இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ள. 1997,1998 ஆம் ஆண்டுகளுக்கு மட்டும் இந்தச் செலவு விவரம் வெளியிடப்பட்டது. இந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 5330கோடி டொலர்கள் செலவிடப்பட்டன என்று அறிவிக்கப்பட்டது. (3 இலட்சம் கோடி ரூபாய்களுக்கு மேல்!)

`பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரை' அமெரிக்கா மேற்கொண்டுள்ள இன்றைய காலகட்டத்தில் சி.ஐ.ஏ.யின் சித்திரவதைக் கொடுமைகளில் பலத்த கண்டனத்துக்கு உள்ளாகிவிட்ட ஒன்று `தண்ணீரில் முக்குதல்' (water boarding) என்பதாகும்.

விசாரணைக்கு உட்படுத்தப்படும் நபரைத் தண்ணீரில் முக்கி மூச்சு திணறி உயிர் போகும் விளிம்புக்குக் கொண்டு நிறுத்தி அவரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெறும் முயற்சிதான் இந்தத் `தண்ணீரில் முக்குதல்' நடவடிக்கை.

இந்த நடவடிக்கை மூன்று எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தியதாக அதிகாரபூர்வமாகவே சி.ஐ.ஏ.தரப்பிலும் அமெரிக்க அரசுத் தரப்பிலும் 2006இல் ஒப்புக்கொள்ளப்பட்டது.

ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் நியமிக்க உத்தேசித்த அமெரிக்க அரசுத் தலைமை வழக்கறிஞர் (அட்டார்னி ஜெனரல்) மைக்கேல் முக்காசே என்பவர் இந்தத் `தண்ணீரில் முக்குதல்' நடவடிக்கையை `சித்திரவதை' என்று ஏற்றுக்கொள்ள மறுத்தார். இதன் காரணமாகவே புஷ்ஷின் இந்த நியமனத்தை அமெரிக்க(செனட்) நாடாளுமன்றம் ஏற்க மறுத்தது.

பயங்கரவாதத்தின் அதிரடித் தாக்குதலில் நூறு அல்லது ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிர்ப்பலி ஆவதைத் தடுப்பதற்கு சந்தேகத்திற்கிடமான ஒரு சிலரைச் `சித்திரவதை' செய்வது தவறல்ல என்பது எதிர்வாதமாக முன்வைக்கப்பட்டதும் உண்டு.

சி.ஐ.ஏ.சித்திரவதை நடவடிக்கைகளுக்கு குறிப்பாகத் தண்ணீரில் முக்குதலுக்குத் தடை விதிக்கும் நோக்கத்தோடு அமெரிக்க பாராளுமன்றத்தில் `அமெரிக்க சித்திரவதை எதிர்ப்பு மசோதா' ஒன்று நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவுக்கு ஆதரவு திரட்டியவர்கள் விடுத்த அறைகூவலில் இடம் பெற்ற வாசகங்கள் உண்மையிலேயே ஜனநாயக நோக்கமும் மனித நேயமும் மிக்கவை.

"சித்திரவதைப் பிரயோகம் என்பது நாம் இதுவரை சந்தித்திராத மிகப்பெரிய மனித உரிமை மற்றும் அமெரிக்காவின் கோட்பாடுகள் மீறலாகும். தண்ணீரில் முக்குதல் உள்ளிட்ட சகலவிதமான சித்திரவதை வடிவங்களும் அருவருக்கத்தக்கவை. அவற்றுக்கு அமெரிக்காவில் இடமில்லை"

"அதுமட்டுமல்ல, சித்திரவதை என்பது ஒரு பலன் தரக்கூடிய விசாரணை நடைமுறையல்ல. சித்திரவதையில் ஈடுபடுவது வெளி உலகத்துக்கு அமெரிக்காவைப் பற்றிய எதிர்மறையான சித்திரத்தை முன்னிறுத்தி நம்மைப் பாதுகாப்பற்றவர்களாகவே ஆக்கிவிடும்"

"2001இல் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கப் படைகளின் `கவனிப்பில்' உள்ள கைதிகள் சிறுநீர் புகட்டப்பட்டும் பாஸ்பரிக் அமிலத்தால் மயக்கமடையச் செய்தும் துப்பாக்கிக் கட்டையால் அடிக்கப்பட்டும் நுரையீரல்களில் தண்ணீரை நிரப்பியும் இன்னும் கொடூரமான இன்னல்களுக்காக வெளிநாடுகளுக்குக் கடத்திச் செல்லப்பட்டும் மிக மிக மோசமாக நடத்தப்பட்டு வந்துள்ளனர்"

"இது என்னுடைய அமெரிக்கா அல்ல!"

"என்னுடைய அமெரிக்கா சித்திரவதையில் இறங்காது என்று நான் உறுதியாக அறிவிக்கிறேன்!"

இது அந்த அறைகூவலின் சாரம்

ஆனால், அமெரிக்க மக்களின் இந்த மனித உரிமைக் குரல் வெள்ளை மாளிகையைச் சற்றும் அசைக்கவில்லை.

அமெரிக்க பாராளுமன்றத்தின் குழு அவைகளான காங்கிரஸும், செனட்டும் நிறைவேற்றிய சித்திரவதை எதிர்ப்புச் சட்டத்தை அதிபர் ஜார்ஜ் புஷ் தன்னுடைய ரத்து (veto) அதிகாரத்தைப் பயன்படுத்தித் uள்ளுபடி செய்துவிட்டார்.

அமெரிக்க நாட்டில் எந்தவொரு சட்டமும் அதிபர் இசைவு தெரிவித்துக் கையொப்பமிடாவிட்டால் செல்லாததாகி விடும்.

"மனித உரிமைப் பாதுகாப்பு' வெறும் சொல்லலங்காரம் மட்டுமே! சித்திரவதைக் கொடுமைகள் தொடர்கதையாக நீடிக்கும்."

இது தான் ஜோர்ஜ் டபிள்யு புஷ்ஷின் அமெரிக்கா!

ஆனால் `இது என்னுடைய அமெரிக்கா அல்ல' என்ற குரலும் அங்கிருந்தே ஒலிக்கிறது என்பது ஆறுதலான விடயம்!

-தினமணி-

Email this page Your Opinion Print this page
இலங்கையில் பாடசாலைக்கல்வித்தராதர மேம்பாட்டு சீர் திருத்தங்கள் - பாடசாலை மட்ட முகாமைத்துவம்
கிழக்கு மாகாணத்தின் முதன்மை இனத்தவர்கள் தமிழர்கள் என்பதை கணிப்பீடுகள் உறுதிசெய்கின்றன
மனித உரிமைகளும் சித்திரவதைக் கொடுமைகளும்
`பிரியங்காகாந்தியுடனான எனது சந்திப்பு விடுதலை பெறுவேன் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது'
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com