-த.மனோகரன்-
கிழக்கு மாகாணத்தின் இன ரீதியான மக்கள் தொகையின் அளவு பற்றிய பல கணக்குகள் காட்டப்பட்டு வருகின்றன. 1981 ஆம் ஆண்டின் பின் முறையான குடிசன மதிப்பீடு மேற்கொள்ளப்படாத நிலையில் தமது விருப்பு, வெறுப்புக்கேற்ப பல்வேறு கணிப்பீடுகள் காட்டப்படுகின்றன. இவ்வாறான நிலையில் 1881 ஆம் ஆண்டில் நடைபெற்ற குடிசனத் தொகை மதிப்பீட்டையும் 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற குடிசனத் தொகை மதிப்பீட்டையும் ஒப்பிட்டு நோக்குவது காலத்தின் தேவையாகும். இது கிழக்கு மாகாணத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளவும் உதவும்.
திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய கிழக்கு மாகாணத்தின் மொத்த சனத்தொகையில் 1881 ஆம் ஆண்டின் கணிப்பீட்டின்படி தமிழர்கள் 67 வீதத்தினராகவும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் 30 வீதத்தினராகவும் சிங்களவர்கள் 3 வீதத்தினராகவும் இருந்தமை காட்டப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இம்மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அதாவது கிழக்கு மாகாணத்தின் மொத்த சனத்தொகையில் தமிழர்கள் மூன்றில் இரண்டு பங்கினருக்கும் அதிகமாக இருந்ததுடன் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களும் முஸ்லிம்களும் கூட்டாக 97 வீதத்தினராக இருந்துள்ளனர். இது 1881 ஆம் ஆண்டின் குடிசனத் தொகை மதிப்பீட்டு அறிக்கையில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ள விபரமாகும்.
1981 ஆம் ஆண்டின் குடிசனத் தொகை மதிப்பீட்டின் போது அதாவது நூறு ஆண்டுகளுக்குப் பின்னரான மதிப்பீட்டின் போது கிழக்கின் தமிழர்களின் எண்ணிக்கை 45 வீதமாகக் காட்டப்பட்டுள்ளது. அதாவது 67 வீதமாக இருந்த தமிழர்களின் எண்ணிக்கை 45 வீதமாகக் குறைந்து காட்டப்பட்டுள்ளது.
முப்பது வீதமாக இந்த முஸ்லிம்களின் அளவு முப்பத்தைந்து வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மூன்று வீதமாக இருந்த சிங்கள மக்கள் இருபது வீதமாக உயர்ந்துள்ளமை காட்டப்பட்டுள்ளது. இவ்விபரம் 1981 ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டறிக்கையில் காட்டப்பட்டுள்ளது.
அதாவது 1881 ஆம் ஆண்டு நூற்றுக்குத் தொண்ணுற்றேழு வீதமாக இருந்த தமிழ் பேசும் மக்களின் அளவு 1981 ஆம் ஆண்டில் எண்பது வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
கிழக்கு மாகாணத்தின் தமிழ்ப்பேசும் மக்களின் வீதாசார வீழ்ச்சிக்குப் புதிதாக உருவாக்கப்பட்ட குடியேற்றங்களும் பெரும்பான்மை மக்கள் வாழும் பகுதிகள் கிழக்கு மாகாணத்துடன் இணைக்கப்பட்டதும் ஏதுக்களாயமைந்தன. தமிழ் மக்களின் எண்ணிக்கை வீழ்ச்சிக்குக் குடும்பக்கட்டுப்பாடும் மதமாற்றமுமே முக்கிய ஏதுக்களாயமைந்துள்ளன. அதேவேளை, முஸ்லிம்களின் அதிகரிப்புக்கு அவையும் காரணிகளாக அமைந்துள்ளன என்பது யதார்த்தமாகும்.
1981 ஆம் ஆண்டின் குடிசனத் தொகைக் கணிப்பீட்டின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் மிகப்பெரும்பான்மையாக இருப்பதுடன் அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் எண்ணிக்கை அம்மாவட்ட சனத்தொகையில் ஐந்தில் ஒரு பங்காகவுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம்களின் எண்ணிக்கை 41 வீதமாகக் காட்டப்பட்டுள்ள அதேவேளை சிங்களவர்களின் வீதம் 39 ஆகக் காட்டப்பட்டுள்ளது.
அண்மைக்கால குடியேற்றங்கள் அம்பாறை மாவட்டத்தின் சனத்தொகையில் சிங்களவர்கள் முதலிடம் பெறவும் முஸ்லிம்கள் இரண்டாமிடத்திற்குத் தள்ளப்படவும் வழி செய்துள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை 1981 ஆம் ஆண்டின் கணிப்பீட்டின்படி தமிழர்கள் 82 வீதமாகவும் முஸ்லிம்கள் 18 வீதமாகவும் பதிவாகியுள்ளது. திருகோணமலை மாவட்ட கணிப்பீட்டின்படி 1981 இல் தமிழர்கள் 40 வீதமாகவும் சிங்களவர்கள் 36 வீதமாகவும் முஸ்லிம்கள் 24 வீதமாகவும் வாழ்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் தனிப்பெரும்பான்மையாகவும் திருகோணமலை மாவட்டத்தில் முதன்மை இனத்தவராகவும் அம்பாறை மாவட்டத்தில் மூன்றாமிடத்திலுமுள்ளனர். முஸ்லிம்களைப் பொறுத்தவரை அம்பாறை மாவட்டத்தில் கூடிய அதாவது முதலாவது பெரும்பான்மையினராகக் கணிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போதைய நிலையில் சிங்களவர்கள் முதன்மை பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் 1981 ஆம் ஆண்டின் கணிப்பீட்டின்படி அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் முதலிடத்தையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாமிடத்தையும் திருகோணமலை மாவட்டத்தில் மூன்றாமிடத்தையும் கொண்டுள்ளமை காட்டப்பட்டுள்ளது.
புள்ளிவிபரங்கள் இவ்வாறு சுட்டிக்காட்ட ஒவ்வொருவரும் தாம் விரும்பியபடி கணக்குப் போடுவது வேடிக்கையாகவுள்ளது. போலியான புள்ளிவிபரங்களை அள்ளி வீசி உணர்ச்சி பூர்வமாகக் கருத்துக் கூறுவது உண்மையை மூடி மறைக்கும் செயலாகும்.
இனங்களுக்கிடையே வீணான குழப்பங்களையும் அவநம்பிக்கையையும் மாயையையும் அச்சத்தையும் ஏற்படுத்துவது பொறுப்பற்ற செயற்பாடாகும். மக்கள் உண்மை நிலையைத் தெரிந்துகொள்வதன் மூலமே தமது நிலை என்ன?' தமது எதிர்காலம் எவ்வாறு அமைய வேண்டும், அதற்கான செயற்பாடுகளை எவ்வகையில் மேற்கொள்ள வேண்டும் என்பதைத் தீர்மானித்துக்கொள்ளமுடியும்.
கிழக்கு மாகாணத்தின் 1970 ஆம், 2004 ஆம் ஆண்டுகளின் பொதுத் தேர்தல் முடிவுகள் இனரீதியான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துகின்றன. 1970 இல் கிழக்கு மாகாணத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவான பதினொருபேரில் தமிழர்கள் 6 பேரும் முஸ்லிம்கள் 4 பேரும் சிங்களவர் ஒருவரும் அடங்கினர்.
2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்களின் நேரடி வாக்குகளால் 7 தமிழரும் 6 முஸ்லிம்களும் 3 சிங்களவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மக்களின் நேரடி வாக்குகளால் தெரிவானவர்களைக் கொண்டு நோக்கும் போதும் தமிழர்களே கிழக்கு மாகாணத்தின் தனிப்பெரும்பான்மையினரென்பது நிரூபணமாகின்றது.
தற்போதுள்ள நிலையில் மொழி ரீதியாகத் தமிழரும் முஸ்லிம்களும் இணைந்தால் தமிழ் பேசும் மக்கள் கிழக்கு மாகாணத்தின் அறுதிப்பெரும்பான்மையாகவும் அவர்களது பாரம்பரிய வாழ்விடமாகவும் உறுதிப்படுத்த முடியும்.
மொழி தவிர்ந்த ஏனைய கலாசார, பண்பாட்டு உறவுகளை முன்னிலைப்படுத்தியும் பௌத்த, இந்து சமயத் தொடர்புகளை வலுப்படுத்தியும் தமிழ், சிங்கள உறவை வலுப்படுத்தினால் தமிழரும் சிங்களவரும் இணைந்து கிழக்கின் அறுதிப் பெரும்பான்மையாவர்.
கிழக்கின் உண்மை நிலைப்படி தமிழர்களை இணைத்துக் கொள்ளும் இனமே முதன்மை பெறும் வாய்ப்புக்கொண்டது. ஏனெனில் மொழி ரீதியான இணைப்புக்கு ஒருதரப்பும் மத, கலாசார ரீதியான இணைப்புக்கு மறுதரப்பும் உள்ள ஒரே இனம் தமிழர் மட்டுமே என்பது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மை. அரசியல் வாதிகளும் சமூகத் தலைவர்களுமே இதற்கான முடிவைக் காணவேண்டும்.