* இலங்கையின் பாடசாலை முறை
-பேராசிரியர் சோ.சந்திரசேகரன்-
* இலங்கையில் 93% மான பாடசாலைகள் அரசாங்கப் பாடசாலைகள் 40 இலட்சம் மாணவர்களில் ஏறத்தாழ 95% மானவர்கள் 9826 அரசாங்கப் பாடசாலைகளில் பயிலுகின்றனர். 9500 பாடசாலைகள் 8 மாகாண சபைகளால் நடாத்தப் படுகின்றன. 92 வலயக்கல்வி அலுவலகங்களும் 365 தோட்டக் கல்வி அலுவலகங்களிள் நிர்வாகத்தின் கீழ் இவை வருகின்றன. 2700 பாடசாலைகள் 100 மாணவருக்கும் குறைவாகப் பயிலும் `சிறிய' பாடசாலைகள். 5900 பாடசாலைகளில் 300 க்கும் குறைவான மாணவர்கள் பயிலுகின்றனர். 1360 பாடசாலைகளில் 50 க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர். ஒரு நாளைக்கு 18% மான ஆசிரியர்கள் பாடசாலைக்குச் சமூகமளிப்பதில்லை.
பாடசாலைக் கல்வித்துறை முன்னேற்றங்கள் தொகைரீதியான முன்னேற்றம், தராதரங்கள் தொடர்பான முன்னேற்றம் என இருவகைப்படும். பாடசாலை வயதெல்லையில் உள்ள சக பிள்ளைகளையும் பாடசாலைக்கு வரச் செய்யும் முயற்சி ஒப்பீட்டளவில் இலங்கையில் வெற்றி பெற்றுள்ளது எனலாம். எனினும் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் சேருவோரில் 75 சதவீதமானவர்களே ஆரம்பக்கல்வியைக் கற்று முடிக்கின்றனர் என்றும் மொத்தத்தில் 95 சதவீதமானவர்களே 9 ஆண்டுக் கல்வியை முடிக்கின்றனர் என்றும் அண்மைக்கால மதிப்பீடுகள் கூறுகின்றன. இந்நிலையில், சராசரி இலங்கையர்கள் 9 ஆண்டுக்கல்வி பெற்றவர்களாகவே உள்ளனர். இவ்வாறு நோக்குமிடத்து, கல்வி வாய்ப்புகளை வழங்குவதில் இன்னும் பல குறைபாடுகளும் இடைவெளிகளும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலக் கல்விச் சீர்திருத்தங்கள் மற்றொரு அம்சமான `கல்வித்தராதர மேம்பாட்டில்' ஈடுபாடு செலுத்தி வருகின்றன. கல்வி அறிவு தொடர்பான குறிகாட்டிகளும் பாடசாலைகளில் பெறவேண்டிய தேர்ச்சிகள் தொடர்பான குறிகாட்டிகளும் இலங்கையின் பாடசாலைக் கல்வித்தராதரங்கள் திருப்தியற்றவை என்பதையே காட்டுகின்றன. ஆரம்ப இடைநிலைக் கல்வி பெறும் வயதெல்லையைச் சேர்ந்த பிள்ளைகள் பாடசாலைகளில் சேர்ந்து ( lnrol ) விட்டால் மட்டும் போதாது. 13 ஆண்டு பாடசாலைக்கல்வியின் போது பல்வேறு தேர்ச்சிகளைப் பெறுதல் வேண்டும். இல்லாவிடில் ஆண்டு தோறும் கல்விக்கென செலவிடப்படும் 4000 கோடி ரூபாவில் கணிசமான தொகை விரயமாயிற்று என்றும் கல்வி முறை வினைத்திறனற்றது என்ற முடிவுக்கு வர நேரிடும். க.பொ.த. சா/த உயர்நிலைப் பரீட்சைப் பெறுபேறுகள், க.பொ.த சா/த பரீட்சையில் விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கில பாடத்தில் குறைந்த சித்திகள், சித்தி எய்துவோரின் பெரும்பாலானோர் வேலைஉலகில் நன்கு இணைந்து கொள்ளத் தேவையான தேர்ச்சிகளைப் பெற்றுக் கொள்ளாமை என, கல்வித்தராதர வீழ்ச்சியைக் சுட்டிக்காட்டும் குறிகாட்டிகளை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.
இப்பின்புலத்தில் கல்வி முறையின் தராதரங்களை மேம்படுத்தும் கடுமையான முயற்சிகள் தேவை என கல்விக் கொள்கை வகுப்பாளர்கள் கருதுகின்றனர். இதற்குக் கல்விமுறையின் சேவை வழங்கும் ஏற்பாட்டை வலுப்படுத்தி அதன் தராதரங்களை மேம்படுத்துவதில் அக்கறை செலுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இக்குறிக்கோளை அடைவதற்கான பிரதான நடவடிக்கைகளாக பாடசாலை மேம்பாட்டுத்திட்டம் முன்வைக்கப்பட்டது (இனி பா.மே.திட்டம்) இதன் அடிப்படைத்தத்துவம் பாடசாலைகளின் முகாமைத்துவ அதிகாரத்தை வலுப்படுத்தலும் பாடசாலை மற்றும் அதனைச் சூழவுள்ள சமுதாயத்துக் கிடையே நெருங்கிய தொடர்பை உருவாக்குதலுமாகும். சூழவுள்ள சமூகம் என்பது பெற்றோர்கள், பழையமாணவர்கள், சமூதாயத்தலைவர்கள் ஆகியோரைக் கருதும்.
ஏற்கனவே நிதித்துறையில் சில அதிகாரங்கள் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. தராதர உள்ளீடுகளென நூல்கள், சாதனங்கள், கற்பித்தல் உபகரணங்கள் என்பவற்றைப் பாடசாலைகளின் கொள்வனவு செய்ய அனுமதியுண்டு. இவ்வாறான கொள்வனவுகள் பாடசாலைகளின் தேவைகளைக் கருத்திற்கொண்டவை. மத்திய அதிகாரபீடம் செய்யும் கொள்வனவுகளை விட இது துரிதமாகவும் வினைத்திறனுடனும் செய்யப்படுவதாக அறியக்கிடைக்கின்றது.
புதிய பாடசாலை மேம்பாட்டுத்திட்டத்தின் படிபாடசாலை அபிவிருத்திக்குழுக்கள் அமைக்கப்படும் பாடசாலை விவகாரங்களில் சமுதாயம் பங்கேற்க ஊக்குவிப்பு வழங்கப்படும், தராதர உள்ளீடுகளைக் கொள்வனவு செய்வதற்கான மேல் எல்லை உயர்த்தப்படும். இறுதியில் பாடசாலை மட்டத்தில் ஆசிரியர்கள் தெரிவு செய்த பணிக்கு அமர்த்தப்படுவர் (ஏற்கனவே 3600 ஆசிரியர்கள் பெருந்தோட்ட மாவட்டப் பாடசாலைகளில் இவ்வடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்).
இவ்வாறான நடவடிக்கைகளின் நோக்கம் பாடசாலை மட்டத்தில் கல்விச்சேவையை வழங்கும் பணியின் தராதரங்களை மேம்படுத்துவதற்குப் பாடசாலை தலைமைத்துவத்துக்கு வாய்ப்புகளை வழங்குதலும் சமுதாயத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுத்தருவதுமாகும். அத்துடன், பாடசாலைக் கல்வியினால் பயனடைவோருக்குக் கல்விச்சேவையை வழங்குவோர் பொறுப்புக் கூறும் தன்மையை உறுதிசெய்வதுமாகும். ஆசிரியர்கள் மத்திய அதிகாரபீடத்தின் கீழ் வராது நேரடியாகப் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படுவதால் பின்தங்கிய பாடசாலைகள் ஆசிரியர்களைப் போதிய அளவு பெற்றுக் கொள்வதும் உறுதி செய்யப்படும் .
இவ்வாறான பாடசாலை மேம்பாட்டு முயற்சிகளின் காரணமாக பெற்றோர், பழைய மாணவர்கள் போன்றோர் பாடசாலை நிர்வாகத்தில் பங்கேற்கவும் கருத்துகளை உறுதியாகக் கூறவும் வாய்ப்புண்டு. அரசாங்கம் வழங்குகின்ற வளங்களுக்கு அப்பால் பாடசாலையைச் சூழவுள்ள சமூகமும் வளங்களைத் திரட்டும் வாய்ப்பு ஏற்படுகின்றது.
திட்டமிடல், கற்பித்தல், கற்றல் உபாயங்கள், ஆசிரியர் திறன் விருத்தி, பாடசாலை வசதிகளை மேம்படுத்தல் முதலிய விடயங்களில் பாடசாலைகள் ஓரளவு சுயாதீனமாக இயங்கும் வாய்ப்பும் கிட்டுகின்றது.
பாடசாலைமட்ட முகாமைத்துவம் பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் என்ற பெயரில் 2006 ஆம் ஆண்டில் 8 வலயங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. (ஒரு மாகாணத்துக்கு ஒரு வலயத்தில்) இம்முன்னோடித்திட்டம் வெற்றி காணுமிடத்து 2007 இல் ஒவ்வொரு மாகாணத்தில் மேலும் இரு வலயங்களிலும் 2008 இல் மேலும் மூன்று வலயங்களிலும் 2009 இல் சகல வலயங்களிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படத் தீர்மானிக்கப்பட்டது.
இத்திட்டப்படி, பாடசாலைகளில் பாடசாலை அபிவிருத்திக் குழுக்கள் ஏற்படுத்தப்படும் (SDC). அவற்றில் ஆசிரியர்கள் (அதிபர், பிரதி அதிபர் உட்பட) பெற்றோர்கள், பழைய மாணவர்கள், கல்வி அலுவலகத்தின் பிரதிநிதியொருவர் ஆகியோர் உறுப்பினராக இருப்பர். வலயக்கல்வி அலுவலகங்களில் பணிகளில் சில இவ்வபிவிருத்திக் குழுக்களிடம் ஒப்படைக்கப்படும்.
இந்நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான நோக்கங்கள்: *பாடசாலைகளின் செயலாற்றத்தின் தராதரங்களை மேம்படுத்தல்; *சகல பிள்ளைகளின் உள்ளார்ந்த ஆற்றலை மேம்படுத்தி அவர்களைச் சிறந்த பிரஜைகளாக வளர்ச்சி பெற உதவுதல். *பாடசாலைகள் தமது வளங்களை வினைத்திறனுடன் பயன்படுத்த உதவுதல்.
பாடசாலை மீது உரிமை கொண்டாடும் பயனாளிகளின் (பெற்றோர், சமூகம்) பல்வேறு அக்கறைகள், தேவைகளைக் கருத்திற் கொண்டு இயங்குதல்.
வழமையான நிர்வாக ஏற்பாடுகளின்படி, தனிப்பட்ட பாடசாலைகள் தமது அடிக்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு. முழு நாட்டுக்கும் பொதுவான கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள், தனிப்பட்ட பாடசாலைகளில் பிரச்சினைகளைக் கருத்திற் கொள்வதில்லை. நிர்வாகத்தைப் பன்முகப்படுத்தும் முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டாலும், பெரும்பாலான பாடசாலைகள் மத்திய அதிகார பீடத்தின் கட்டளைகளை அப்படியே பின்பற்றுகின்றன. பாட ஏற்பாடு முற்றாக மத்தியப் படுத்தப்பட்டதாய் அதிக அளவில் பரீட்சையை மையப்படுத்தி அமைந்துள்ளது. 5 ஆந் தர, 11 ஆந்தர, 13 ஆந் தரப் பரீட்சைகள், கல்வி முறை உள்ளூர் மற்றும் தனிப்பட்ட மாணவர்களின் தேவைகளைக் கருத்திற் கொள்வதற்குத் தடையாக அமைகின்றன.
இப்புதிய பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டமானது பல எதிர்பார்ப்புகளைக் கொண்டது. *அதிபர்களையும் ஆசிரியர்களையும் ஊக்குவித்து அவர்களுடைய செயலாற்றலை அதிகரித்தல். *பாடசாலைகளில் விதிமுறைகளுக்கு முக்கியத்துவமளிப்பதை விடுத்து கொள்கையாக்கத்தில் சுயமாகவும் தன்முனைப்புடனும் (Proactive) செயற்படல். *பாடசாலைகள் வெளிப்படைத் தன்மையுடன் இயங்குதல் நிதியையும் வளங்களையும் திறமையுடன் பயன்படுத்துதல். இவை யாவும் மாணவர்கள் பெறுகின்ற தராதரத்தை உயர்த்தும். மாணவர்கள் பெறும் உயர்ந்த புள்ளிகள், அவர்களுடடைய இடைவிலகல் வீதமும் வரவின்மையும் குறைந்து தராதர மேம்பாட்டை உறுதிப்படுத்தும்.
சவால்கள்
இந்நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் பல சவால்களை எதிர்நோக்குகின்றது. முதலாவதாக, பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்களுக்கு, பாடசாலை முகாமைத்துவம் பற்றிய அறிவினையும் பயிற்சியையும் வழங்கவேண்டியது ஒரு முக்கிய பிரச்சினையாகும். கலந்துரையாடல்களில் பங்கேற்றுத் திட்டமிடும் பணிகளுக்கு உதவுதல், அடிப்படையான நிதி முகாமைத்துவம், பயனுள்ள முறையில் பாடசாலை சமுதாய உறவுகளை ஏற்படுத்தும் முறைகள், கூட்டங்களை சிறப்புடன் நடாத்துதல் போன்ற விடயங்களில் இவ்வுறுப்பினர்களுக்குப் பயிற்சி தேவை. பாடசாலை மட்ட முகாமைத்துவத்தை நடைமுறைப்படுத்தும் போது ஆரம்பக்கட்டங்களிலாவது, போதிய முயற்சியும் நேரமும் பயிற்சியும் தேவை என்பதை உறுப்பினர்கள் உணரச்செய்வது முக்கியமான ஒரு விடயம்.
பாடசாலை மட்ட முகாமைத்துவம் வெற்றி பெறப் பிரதான மானவர் பாடசாலை அதிபரே அவர் பயனுள்ள ஒரு தலைவராக விளங்க வேண்டும். பாடசாலைக்கான எதிர்காலப் பணிகளை சிந்தித்து உருவாக்க வேண்டும்.