Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, April 21, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Editorial
அரிசி நெருக்கடி
[21 - April - 2008] [Font Size - A - A - A]
அத்தியாவசியப் பாவனைப் பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்திருப்பதன் விளைவாக வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் நாட்டு மக்களுக்கு சிறிதளவுக்கேனும் நிவாரணத்தைத் தரக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு திராணியற்றிருக்கும் அரசாங்கம், திடீரென்று கடந்தவாரம் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையைக் கொண்டுவரும் அறிவிப்பை வெளியிட்டது. எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று இந்நடவடிக்கைக்கு வர்த்தக சமூகத்திடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. சில வர்த்தகர்கள் அரிசி விற்பனையை நிறுத்திய அதேவேளை, ஏனைய வர்த்தகர்கள் தங்கள் வசமிருந்த அரிசிக் கையிருப்பை பதுக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. அரிசிக் கையிருப்புகளைச் சந்தைக்குக் கொண்டுவரும் முயற்சியாக அரசாங்க அதிகாரிகள் கடைகளையும் களஞ்சியசாலைகளையும் முற்றுகையிட்டுச் சோதனை செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கிறார்கள். அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனம் செய்திருக்கும் கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியை விற்பனை செய்ய மறுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராகவும் அரிசியைப் பதுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால், வர்த்தகர்களோ அரசாங்கம் அறிவித்திருக்கும் விலைகளின் பிரகாரம் அரிசி வகைகளை விற்பனை செய்ய முடியாது என்று கூறுகிறார்கள். கூடுதல் விலைக்கு கொள்வனவு செய்த அரிசி வகைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்து நட்டமடையத் தயாரில்லை என்பதே அவர்களின் வாதமாகும். சந்தையில் அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும் தங்களால் போதியளவு கையிருப்பைப் பெறமுடியவில்லை என்றும் மொத்த வியாபாரிகள் முறையிடுகின்றார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அரிசி ஆலை உரிமையாளர்களே விலைகளைத் தீர்மானிக்கிறார்கள் என்றும் மொத்த வியாபாரிகள் கூறுகிறார்கள். ஆனால், அரசாங்கமோ நாட்டில் போதியளவு அரிசி கையிருப்பு இருப்பதாகவும் கூடுதல் இலாபம் அடையலாம் என்ற எதிர்பார்ப்பில் உற்பத்தியாளர்களும் விநியோகஸ்தர்களுமே அரிசியை பதுக்குவதாகவும் கூறுகிறது. அரிசி விவகாரத்தைப் பொறுத்தவரை, தற்போது தோன்றியிருக்கும் நெருக்கடியின் விளைவாக உயர்ந்த விலைக்கென்றாலும் தங்களது பிரதான உணவுப் பொருளை பெற முடியாமல் பாவனையாளர்கள் தவிக்க வேண்டியிருக்கிறது.

சில வாரங்களுக்கு முன்னர் பாணின் விலை அதிகரித்திருந்ததால் பெரும் தொகையான பாவனையாளர்கள் பாணைக் கைவிட்டு அரிசியை நாடினார்கள். பாண் பாவனையில் 50 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டிருப்பது தனக்கு மகிழ்ச்சியைத் தருவதாக அண்மையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற வைபவமொன்றில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். இப்போது அரிசி விலையும் மக்களுக்கு எட்டாத உயரத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது. வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதற்கு உருப்படியான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க முடியாத நிலையில் இருந்த அரசாங்கம் நம்பிக்கை இழந்த ஒரு நிலையிலேயே அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையைக் கொண்டு வரும் தீர்மானத்தை எடுத்திருக்கவேண்டும். இத்தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னதாக அரிசி உற்பத்தி, விநியோகம் மற்றும் சந்தைப்படுத்தல் செயன்முறைகளுடன் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் உகந்த கலந்தாலோசனை செய்யப்பட்டிருப்பதற்கான அறிகுறியெதையும் காணக்கூடியதாக இல்லை. அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை கொண்டுவந்தமை நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியதேயாகும். ஆனால், திடீரென மேற்கொண்ட அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் போது, ஏற்படக்கூடிய சிக்கல் நிலையையும் அந்தச் சிக்கல் நிலையினால் கூடுதலான அளவுக்கு பாதிக்கப்படக்கூடியவர்களாக இருக்கும் அப்பாவிப் பாவனையாளர்களைப் பற்றி அரசாங்கம் விவேகத்துடன் சிந்தித்திருக்க வேண்டும் என்பதே எமது அபிப்பிராயமாகும்.

அரிசியையோ அல்லது வேறு எந்தவொரு பொருளையுமோ கொள்வனவு செய்த விலையிலும் பார்க்க குறைந்த விலைக்கு விற்பனை செய்யுமாறு வர்த்தகர்களை நிர்ப்பந்திப்பது நியாயமானதல்ல என்பது நேர்மையான ஒரு வாதமாக இருக்கலாம். ஆனால், எத்தனையோ பொருட்களின் விலைகளை இரவோடிரவாக அரசாங்கம் அதிகரித்த சந்தர்ப்பங்களில் குறைந்த விலைக்குக் கொள்வனவு செய்யப்பட்ட அந்தப் பொருட்களை மறுகணமே கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதில் வர்த்தக சமூகத்தினர் பச்சாதாபப்பட்டதில்லை என்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க எம்மால் முடியவில்லை. அவர்களது தொழிலே முற்றிலும் இலாபத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை நாம் மறந்துவிடலாகாது. வர்த்தக சமூகத்தினர் அவர்களது இலாபநோக்கச் செயற்பாடுகளில் இருந்து விலகியிருக்க வேண்டுமென்று அரசாங்கம் எதிர்பார்க்க முடியாது. நாட்டில் போதுமானளவு அரிசி கையிருப்பில் உள்ளது என்று அரசாங்கம் நிச்சயமாக நம்புகிறதென்றால், அரிசி பதுக்கப்படுகிறது என்று அரசாங்கம் உறுதியாக நம்புகிறதென்றால் அவற்றை பகிரங்கத்தில் சந்தைக்குக் கொண்டுவருவதற்கு தனது ஆணைக்குட்பட்ட சகல நடவடிக்கைகளையும் எந்தவித தயக்கமும் இன்றி எடுக்க வேண்டும்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியில் தனியார் துறையினரின் மேலாதிக்கம் வளருவதற்கு அனுமதித்துவிட்டு, திடீரென்று கடும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் தலைப்படுவதன் விளைவாக மோதல் தன்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க முயற்சிப்பதன் விளைவாக ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை மனதில் கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும். தற்போதைய அரிசி நெருக்கடி மேலும் தீவிரமடைய அனுமதித்தால் விரைவில் அத்தியாவசிய பாவனைப் பொருட்களுக்கு குறிப்பாக, உணவுப் பொருட்களுக்கு மக்கள் முடிவற்ற வரிசைகளில் காத்து நிற்கும் யுகம் தோன்றும் அபாயம் இருக்கிறது.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com